Thursday, May 9, 2024
Home » இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய அத்தியாயம் ஆரம்பம்

இந்திய ரயில்வே வரலாற்றில் புதிய அத்தியாயம் ஆரம்பம்

'அம்ரித் பாரத் ஸ்டேஷன்' திட்டத்தின் கீழ் 1309 ரயில் நிலையங்கள் நவீனமயமாகும்

by gayan
August 9, 2023 6:07 pm 0 comment

உலகெங்கும் ரயில்வே துறைகளில் அவ்வப்போது புதிய திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. காலத்திற்கு ஏற்ப அதன் வசதிகளையும் தொழில்நுட்பங்களையும் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன. அவ்வாறான பாரிய திட்டமொன்றுதான் இந்தியாவில் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக 1999 முதல் 2008 வரை ‘மாதிரி நிலையத் திட்டம்’ என்ற திட்டத்தை இந்திய ரயில்வே தொடங்கியது. அந்தத் திட்டத்தின் மூலம் இந்திய ரயில்வே 594 ரயில் நிலையங்களை மேம்படுத்தியது. இவற்றில் அதிக எண்ணிக்கையாக 34 ரயில் நிலையங்கள் மத்தியப் பிரதேசத்தில் இருந்து தேர்ந்து எடுக்கப்பட்டன.

அதேபோல சமீபத்தில் இந்திய மத்திய அரசு ‘அம்ரித் பாரத் ஸ்டேஷன்’ திட்டத்தை அறிவித்தது. இந்தத் திட்டம் நீண்டகால அணுகுமுறையுடன் தொடர்ச்சியான அடிப்படையில் நிலையங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ரயில் நிலைய அணுகல், சுற்றும் பகுதிகள், காத்திருப்புக் கூடங்கள், கழிப்பறைகள், லிப்ட், எஸ்கலேட்டர்கள், தூய்மை, இலவச வைஃபை போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்காக கட்டம் கட்டமாக பாரிய திட்டங்களை ரயில்வேத்துறை வகுத்துள்ளது.

அமிர்த பாரத் நிலையத் திட்டத்திற்காக இந்தியா எங்கும் 1309 ரயில் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தைப் பொறுத்தவரை 73 ரயில் நிலையங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன . அரக்கோணம், செங்கல்பட்டு, கோவை, எரோடே ஜங்ஷன், ஜோலார்பேட்டை, கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகர்கோவில், சேலம், விழுப்புரம், திருநெல்வேலி, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், போன்ற முக்கிய சந்தி ரயில் நிலையங்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இந்திய ரயில்வே வரலாற்றின் புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளதாக இத்திட்டம் பாராட்டப்படுகின்றது. நாடு முழுவதும் 1309 நிலையங்களை மறுசீரமைக்க அமிர்த பாரத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, முதற்கட்டமாக நாடு முழுவதும் 508 ரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படவுள்ளன. இந்தத் திட்டத்துக்கு கடந்த 6 ஆம் திகதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.

வளர்ச்சி இலக்கை நோக்கி இந்தியா சென்று கொண்டிருக்கிறது. இந்திய ரயில்வே வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் இன்று தொடங்குகிறது” என பிரதமர் மோடி தெரிவித்தார்.

முதற்கட்டமாக 508 அமிர்த பாரத் நிலையங்களின் மறுசீரமைப்புக்காக சுமார் 25,000 கோடி செலவிடப்படவுள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பானது மிக முக்கியமாக இந்தியாவின் சாதாரண மக்களுக்கு பெரிய உந்துதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன்படி ஒட்டுமொத்த உலகத்தின் கவனமும் இந்தியா மீது திரும்பியுள்ளது. உலக அளவில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது என்றும் கூறலாம்.

மேலும், நவீன ரயில் நிலையங்கள் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ரயில்வே பயணத்தை அணுகக்கூடியதாக மட்டுமல்லாமல், சுவாரஸ்யமாகவும் மாற்றுவதே இந்திய அரசின் குறிக்கோளாக உள்ளது. ஒவ்வொரு ‘அமிர்த பாரத் நிலையமும்’ நகரத்தின் நவீன அபிலாஷைகள், பண்டைய இந்திய பாரம்பரியத்தின் சின்னமாக மாறும் என்று நம்பப்படுகின்றது.

அத்துடன் தொலைநோக்குப் பார்வையுடன் ரயில் நிலையங்களை தொடர்ந்து மேம்படுத்துவதற்கு இத்திட்டம் வகைசெய்யும். குறைந்தபட்ச அத்தியாவசிய வசதிகளை கருத்தில் கொண்டு ரயில் நிலையங்களின் மேல்தளத்தில் அங்காடிகள், வணிக நிறுவனங்கள் அமைக்கப்படும். ரயில் நிலையங்களில் ஏற்கனவே உள்ள வசதிகளுக்கு மாற்றாக மேம்பாடும் மற்றும் புதிய வசதிகளை அறிமுகப்படுத்துதலை இத்திட்டம் நோக்கமாகக் கொண்டதாகும்.

தகவல் பலகைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை ரயில் நிலையங்களில் உறுதி செய்யப்படும். பயணிகள் தங்கும் அறை, நடைமேடைகள், ஓய்வு அறைகள், அதிகாரிகள் ஆய்வு அறை ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்படும்.

ஒவ்வொரு ரயில் நிலையமும் சிட்டி சென்ட்டர் போல மேம்படுத்தப்படும் என்றும், ரயில் நிலையத்தின் கட்டடம் தரம் உயர்த்தப்படும் என்றும், வணிக மண்டலம், உணவகம், சிறுவர்களுக்கான விளையாட்டு இட வசதிகள் ஆகியவை இந்த மறுசீரமைப்பு ரயில் நிலையங்களில் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பயணிகளின் வசதிக்காக தனித்தனி நுழைவு மற்றும் வெளியேறும் வாயில், பல அடுக்கு வாகன நிறுத்தமிடம், மின்னுயர்த்தி, நகரும் படிக்கட்டுகள்,மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் ஆகியவை ஏற்படுத்தப்படும். ஒருங்கிணைக்கப்பட்ட பலதரப்பட்ட இணைப்பால் மறுசீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்கள் சமூக பொருளாதார செயல்பாடுகளின் மையமாக அமையும் என்றும் மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT