Monday, May 20, 2024
Home » மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரை கைப்பற்றியது இலங்கை அணி

by Gayan Abeykoon
May 9, 2024 5:24 am 0 comment

சமரி அத்தபத்துவின் அதிரடி சதத்தின் உதவியோடு ஸ்கொட்லாந்தை 68 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை மகளிர் அணி மகளிர் ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

இதன்மூலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் பங்களாதேஷில் நடைபெறவுள்ள மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை அணி, அவுஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் ஏ குழுவில் இடம்பிடித்துள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடந்த ரி20 உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதன் மூலம் இலங்கை மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நிலையிலேயே நேற்று முன்தினம் (07) பலப்பரீட்சை நடத்தின.

அபூதாபில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட இலங்கை மகளிர் அணியின் ஒருமுனை விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தபோதும் மறுமுனையில் ஆடிய அணித் தலைவியும் ஆரம்ப விராங்கனையுமான சமரி அபாரமாக செயற்பட்டார். 63 பந்துகளுக்கு முகம்கொடுத்த அவர் 13 பௌண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 101 ஓட்டங்களை விளாசினார்.

இதன்மூலம் இலங்கை மகளிர் 20 ஓவர்களுக்கும் 5 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில் பதிலெடுத்தாட களமிறங்கிய ஸ்கொட்லாந்து மகளிர் அணி மளமளவென்று விக்கெட்டுகளை பறிகொடுத்ததால் இலக்கை எட்ட முடியாத நிலை ஏற்பட்டது. அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 101 ஓட்டங்களையே பெற்றது.

சிறப்பாக பந்துவீசிய இடது கை வேகப்பந்து வீராங்கனை உதேஷிகா பிரபோதனி 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார். பத்து அணிகள் பங்கேற்ற இந்த தகுதிகாண் தொடரில் இலங்கை மகளிர் அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT