Saturday, April 27, 2024
Home » வரி முறைமை உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளை பரிந்துரைக்க நிபுணர்கள் குழு

வரி முறைமை உள்ளிட்ட பொருளாதாரக் கொள்கைகளை பரிந்துரைக்க நிபுணர்கள் குழு

- பல்கலை சமூகத்தினர் உள்ளடக்கிய குழுவை நியமிக்க தீர்மானம்

by Rizwan Segu Mohideen
August 9, 2023 5:40 pm 0 comment

நாட்டில் நடைமுறைப்படுத்த வேண்டிய வரி முறைமை மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய பொருளாதாரக் கொள்கைகள் குறித்த முன்மொழிவுகளைத் தயாரிப்பதற்கான பரிந்துரைகளை முன்வைப்பதற்குப் பல்கலைக்கழக சமூகத்தினர் உள்ளடக்கிய நிபுணர்கள் குழுவை அமைப்பதற்குப் பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.

07.08.2023ஆம் திகதி பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தலைமையில் கூடிய பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தினைத் தணித்தல் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுக் கூட்டத்திலேயே இதற்கான இணக்கப்பாடு எட்டப்பட்டது.

நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பின்னடைவின் பாதிப்புக்கள் மற்றும் அவற்றிலிருந்து மீள்வதற்கு எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக இக்குழு கூடியிருந்தது. குழுவின் முன்னிலையில் பல்லைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், பொருளியல் மற்றும் முகாமைத்துவப் பீடங்களின் பீடாதிபதிகள், பேராசிரியர்கள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள், அரசசார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள், மத்திய வங்கி மற்றும் திறைசேரியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் அழைக்கப்பட்டிருந்தனர்.

நாட்டில் பல்வேறு கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளபோதும் தேசிய நிதிக் கட்டமைப்பொன்று இதுவரை இல்லையென்றும், இதனை விரைவில் தயாரிக்க வேண்டிய தேவைப்பாடு ஏற்பட்டிருப்பதாகவும் குழுவின் தலைவர் வலியுறுத்தினார். நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினரைத் தெளிவுபடுத்தி பாராளுமன்றத்தின் ஊடாக உரிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க எதிர்பார்த்திருப்பதாகவும், இந்த செயற்பாட்டில் பல்கலைக்கழக சமூகத்தினர் உள்ளிட்ட சகல தரப்பினரையும் ஒன்றிணைக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவ்விடயங்களைத் தொடர்ந்து முன்கொண்டு செல்வதற்கும், சம்பந்தப்பட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கும் நிபுணர்களைக் கொண்ட குழுவொன்றை இரண்டு வாரங்களுக்குள் நியமிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார்.
முறையான வரிக்கொள்கை இல்லாமை, அரசாங்க நிறுவனங்களின் வினைத்திறன் அற்ற தன்மை, தொழிற்சந்தைக்கு ஏற்ற கல்விக்கொள்கை இல்லாமை போன்ற பல்வேறு விடயங்கள் நாடு தற்பொழுது எதிர்கொண்டுள்ள நிலைமைக்குக் காரணமாகியிருப்பதாக இங்கு வருகை தந்திருந்த கல்வியியலாளர்கள் சுட்டிக்காட்டினர். இலங்கையில் தேவைக்கும் அதிகமான கொள்கைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளபோதும் அவற்றை நடைமுறைப்படுத்துவதிலேயே குறைபாடு காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான வாசுதேவ நாணயகார, அநுர பிரியதர்ஷன யாப்பா, சரத் வீரசேகர, மொஹமட் முசம்மில், மதுர விதானகே, கெவிந்து குமாரதுங்க, சஹான் பிரதீப், வசந்த யாப்பா பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT