சுமுகமான பரீட்சைக்கு சகலரும் ஒத்துழைப்போம்! | தினகரன்

சுமுகமான பரீட்சைக்கு சகலரும் ஒத்துழைப்போம்!

நாடெங்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகியிருக்கின்றது. இப்பரீட்சை எதுவித இடையூறுகளுமின்றி சுமுகமாக நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். பரீட்சையை சுமுகமாக நடத்துவதற்காக வழமை போன்று இம்முறையும் பொலிஸாரின் பாதுகாப்பு ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளது. பரீட்சையில் எதுவித முறைகேடும் இடம்பெற்று விடக் கூடாதென்பதே கல்வி மீது ஈடுபாடு கொண்டுள்ள அனைவரினதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

இவ்வாறான பொதுப் பரீட்சைகளை நூறு சதவீதம் நிறைவானதாக நடத்தி முடிப்பதென்பது இலகுவான காரியமல்ல. பரீட்சைகள் திணைக்களம் எவ்வளவுதான் கடுமையான முன்னேற்பாடுகளை மேற்கொள்கின்ற போதிலும், ஒன்றிரண்டு விரும்பத்தகாத சம்பவங்கள் தவிர்க்க முடியாமல் இடம்பெற்று விடுவது வழமையாகும். இவ்வாறான சம்பவங்களுக்காக பரீட்சைத் திணைக்கள ஆணையாளரையோ இல்லையேல் அங்குள்ள உயரதிகாரிகளையோ குறை கூறி விடவும் முடியாதிருக்கின்றது.

நவீன தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் நாளும் பொழுதும் புதிது புதிதாக அறிமுகமாகி வருவதால், முறைகேடுகளை முற்றாகத் தடுக்க முடியாதிருக்கிறது. கடந்த ஓகஸ்ட் மாதத்தில் நடைபெற்ற க.பொ.த உயர்தரப் பரீட்சையின் போது இரசாயனவியல் பாடத்தில் ஏற்பட்ட முறைகேடொன்று அனைவருக்கும் நினைவிருக்கலாம்.

மாணவன் ஒருவன் பரீட்சை மண்டபத்தினுள் ‘புளூரூத்’ சாதனத்தை மறைத்து வைத்தபடி, வினாக்களை வெளியே ஆசிரியர் ஒருவருக்குத் தெரியப்படுத்தியுள்ளான். வெளியே நின்றிருந்த ஆசிரியர் அவ்வினாக்களுக்குரிய விடைகளை ஒவ்வொன்றாகத் தெரிவிக்க அவற்றை அம்மாணவன் எழுதியுள்ளான்.

மிகவும் நூதனமான முறையில் தொழில்நுட்பசாதன உதவியுடன் நடந்த இந்த முறைகேடு உடனடியாகக் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அம்மாணவன் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அம்மாணவன் சில வருட காலத்துக்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இக்குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்த அம்மாணவனின் தந்தையும் ஆசிரியரும் கைது செய்யப்பட்டு வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இது போன்ற சம்பவங்களெல்லாம் பரீடசார்த்திகள் தனிப்பட்ட முறையில் மேற்கொள்கின்ற முறைகேடுகளாகும். இவ்வாறு குறுக்குவழியை நாடுகின்ற மாணவர்களால் ஏனையோருக்குப் பாதிப்பு ஏற்டாமலில்லை.

தவறான வழியைக் கையாண்டு சிறந்த பெறுபேறு பெறுவதற்கு நேர்மையற்ற சிலர் முற்படுகின்றனர். ஆனால் மிகவும் சிரமப்பட்டுப் படிக்கின்ற நேர்மைமிகுந்த மாணவர்கள் அவ்வாறான பெறுபேறுகளைப் பெற முடியாமல் போகின்றது. எனவே நேர்மையான மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகின்ற எந்தவொரு முறைகேட்டையும் அனுமதிப்பது முறையல்ல.

அதுதவிர, கடந்த காலத்தில் நடைபெற்ற பரீட்சைகளை எடுத்துக் கொண்டோமானால் பரீட்சைக்குரிய பாடங்களின் சில வினாக்கள் முன்கூட்டியே வெளியில் கசிந்துவிட்டதென்ற குற்றச்சாட்டுகள் பதிவாகி இருக்கின்றன.

வினாக்கள் முன்கூட்டியே கசிவதென்பது மிகவும் பாரதூரமான விடயமாகும். மிகவும் சிரமப்பட்டு பரீட்சைக்குத் தயார்படுத்துகின்ற நேர்மை மிகுந்த மாணவர்களின் உள்ளத்தில் பரீட்சைகள் மீதான அவநம்பிக்கையையும் வெறுப்பையும் இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுத்தி விடுகின்றன. எனவே பரீட்சை வினாத்தாள்கள் விடயத்தில் அந்தரங்கம் கவனமாகப் பேணப்படுவது அவசியம். பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் மிகவும் அவதானமாக இருப்பார்களேயானால் இவ்வாறான தவறுகள் நிகழ்வதற்கு இடமேயில்லை.

இவையெல்லாம் தவிர, பரீட்சை மண்டபத்தினுள் இடம்பெறுகின்ற வேறு சில முறைகேடுகளையும் இங்கே குறிப்பிட வேண்டியிருக்கின்றது.

ஒவ்வொரு பாடத்துக்குமுரிய முதலாம் பாகம் பல்தேர்வு வினா ஆகும். இவ்வினாக்களுக்கு விடையளிக்கும் போது ஒரு மாணவரின் உதவியை அருகிலிருக்கும் மற்றைய மாணவர் பெற்றுக் கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்படுகின்றது. வகுப்பறையில் வைத்து கல்வியை உதாசீனம் செய்கின்ற மாணவர்கள் பரீ்ட்சையின் போது இதுபோன்ற குறுக்கு வழியைக் கையாண்டு MCQ பகுதியில் கூடியளவு புள்ளிகளைப் பெற்று விடுவதற்கு முற்படுகின்றனர்.

பரீட்சை மண்டபங்களுக்குள் சாதாரணமாக இடம்பெறுகின்ற முறைகேடு அதுவாகும். பரீட்சை மேற்பார்வையாளர்கள் சிலரின் அசமந்தப் போக்கினால் இடம்பெறுகின்ற தவறாகவே இதனைக் கொள்ள வேண்டியிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தின் குறிப்பிட்ட சில பிரதேசங்களில் உள்ள பரீட்சை மண்டபங்களில் இதுபோன்ற முறைகேடு இடம்பெறுவதாகக் கடந்த காலங்களில் புகார்கள் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. அதேசமயம் ஆள்மாறாட்ட குற்றங்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பொதுப்பரீட்சைகளைப் பொறுத்தவரை பரீட்சை மேற்பார்வையாளர்களே நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட வேண்டியவர்களாவர். அவர்கள் ஒவ்வொருவரும் தமது கடமைகளை சிரத்தையுடன் மேற்கொள்வார்களாயின் பரீட்சை மண்டபத்திற்குள் முறைகேடுகள் இடம்பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது.

மாணவர்கள் மத்தியில் க.பொ.த. சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீடசைகள் மிகுந்த எதிர்பார்ப்பு மிக்கவையாகும். இப்பரீட்சைகள் மாணவர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பவையாக அமைந்திருக்கின்றன. எனவே கல்வி மீது நாட்டம் கொண்ட மாணவர்கள் இப்பரீட்சைகளை தங்களது உயிர்நாடியாகவே கொள்கின்றனர். ஆகவே, இப்பரீட்சைகள் இடையூறின்றி நடைபெறுவதற்கு இடமளிக்க வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகின்றது. மாணவர்களின் பரீட்சைக்குக் குந்தகம் ஏற்படுத்தும் விதத்திலான ஒவ்வொரு செயலும் குற்றமாகவே கருதப்பட வேண்டும்.

அதேவேளை, இளவயதினரின் எதிர்கால நலனுக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பொறுப்பை ஏனையோர் மறந்துவிடலாகாது.

இன்று ஆரம்பமாகின்ற க. பொ. த. சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 21ம் திகதி வரை நடைபெறப் போகின்றது. இப்பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவச் செல்வங்கள் அனைவருமே சிறந்த பெறுபேறுகளைப் பெற வேண்டுமென்று ‘தினகரன்’ மனதார வாழ்த்துகின்றது. 


Add new comment

Or log in with...