Saturday, April 27, 2024
Home » ஆளுமையை உருவாக்கிக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கும் வாசிப்புப் பழக்கம்

ஆளுமையை உருவாக்கிக் கொள்வதில் பெரும்பங்கு வகிக்கும் வாசிப்புப் பழக்கம்

by mahesh
November 1, 2023 9:50 am 0 comment

நாம் வாழும் சமூக சூழல் ஆளுமையை வளர்ப்பதில் பங்கு வகிக்கிறது. கிராமத்தில் படிக்கும் மாணவனுக்கும் நகரத்தில் வசிக்கும் மாணவனுக்குமிடையே பெரும் வித்தியாசம் இருக்கிறது. கிராமச்சூழலும் நகரச்சூழலும் ஆளுமையின் அடிப்படைகளில் ஒன்று.

ஆளுமைத்திறனுக்கு வாய்ப்பு பெரும் பங்காற்றுகின்றது. இதற்கு உதாரணமாக மகாத்மா காந்தி, அப்துல்கலாம், நெலசன் மண்டேலா போன்றவர்களைக் கூறலாம். ஆளுமை உருவாக்கத்திற்கு வாழும் இடம் ஒரு காரணம் என்றாலும் நாம் எப்படிப்பட்ட புத்தகங்கள் மூலம் எம்மை மாற்றிக்கொண்டோம் என்பதில்தான் வாசிப்பின் பயன் அடங்கியுள்ளது.

நடுத்தர நெசவாளர் குடும்பத்தில் பிறந்த அண்ணா மேடையில் முழங்குவதில் சிறந்து விளங்கவும், தமிழக முதல்வரானதும் ஆங்கிலேயருக்கு நிகராகப் பேசுவதற்கும் வாசிப்புத்தான் பிரதான காரணமாகும்.

நேரத்தை நிர்வகிப்பதன் மூலம் மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பு திறன் மற்றும் வாசிப்புப் பழக்கத்தைப் ஏற்படுத்திக் கொள்ளலாம். அதன் மூலம் நீங்கள் சிறந்த தகவல் தொடர்புத் திறனை வளர்த்துக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது. நீங்கள் ஒரு நம்பிக்கையான ஆளுமையாக வாழ்வில் உயர முடியும்.

ஒரு மனிதன் தான் வேலை செய்யும் இடத்தில் திறம்பட செயற்படுவதற்கும் வினைத்திறனுடன் வேலை செய்வதற்கும் வாசிப்பு அவசியம். தற்கால உலகத்தில் திறமையாகத் தொழிற்படுவதற்கு வாசிப்பு ஒரு அடிப்படைத் தேவையாகும். இவ்வடிப்படைத்திறன் இல்லாவிடின் விரக்தி, கோபம், பயம் போன்ற உளரீதியான பாதிப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புண்டு. சிறந்த உள விருத்திக்கும் ஆளுமைத் திருப்திக்கும் வாசிப்பு அவசியமாகிறது. தொழிலில் உயர்நிலை பெறுவதற்கும் வாசிப்புப் பழக்கம் உறுதுணையாக இருக்கும்.

குறைந்த வாசிப்புத்திறனுள்ளவர்களால் ஒரு விடயத்தை கிரகிப்பதற்கும் ஒர் அறிக்கை செய்தியை வாசித்து விளக்குவதற்கும், பதிலளிப்பதற்கும் அதிக நேரத்தை செலவிட வேண்டி ஏற்படும். போதிய வாசிப்பும் கிரகித்தலும் இல்லையென்றால் அடைவு மட்டம் குறைவாக இருக்கும். புதிய விடயங்கள், புதிய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்து கொள்ள வாசிப்பு இன்றியமையாதது.

விசேடமாக வாசிப்பதன் மூலம் பல நன்மைகள் பெறலாம். மொழித்திறன் விருத்தி, சொல்வன்மை, சொல்லாட்சி என்பன விருத்தியடைகின்றன.

ஆளுமை உருவாக்கத்திற்கு வாசிப்பு வழிவகுக்கின்றது. வாசிப்பின் மூலம் சிறுபிள்ளைகளுடைய மொழித்திறன் விருத்தியும், கேட்டல் திறனும் அதிகரிக்கின்றன. அவதானித்துக் கேட்டல் குறைவாகவுள்ளவர்கள் தொழில்கள் பலவற்றை இழக்க வேண்டி ஏற்படும். ஏனையவர்கள் தொடர்பு கொள்ள அல்லது எடுத்துக்காட்ட முனையும் விடயம் என்ன என்பதை சிறந்த வாசிப்புத்திறனுள்ளவர்கள் இலகுவாக விளங்கிக் கொள்வார்கள்.

பொதுஅறிவு வளர்ச்சியும் ஏனையவர்களின் கலாசாரம், பாரம்பரியம் என்பவற்றை அறியும் வாய்ப்பும் வாசிப்பினால் கிடைக்கின்றன. தன்னம்பிக்கை, ஞாபகசக்தி அதிகரிப்பு, கிரகித்தல் திறன் ஆகியவற்றிலும் ஆளுமை உருவாக்கத்திலும் வாசிப்பு பங்களிப்பு வழங்குகிறது. பிள்ளைகள் எழுத்துப்பிழையின்றி எழுதுவதற்கு வாசிப்பு உதவுகின்றது. தர்க்க சிந்தனையும் விருத்தியடைகின்றது. அத்துடன் பிள்ளைகளின் கற்பனைத்திறனும் அதிகரிக்கின்றது. வாசிப்பின் மூலம் ஒரு மனிதன் எல்லா மூலைமுடுக்குகளுக்கும் போய் வரலாம்.

வாசிப்பின் மூலம் சிறந்த ஆக்கத்திறன் கொண்ட பிள்ளையை உருவாக்க முடியும். தன்னைப்பற்றி ஒரு நல்ல மதிப்பை அல்லது கௌரவத்தை உருவாக்குவதற்கு அடிப்படையாக அமைவது வாசிப்பு ஆகும். வாசிப்பினால் தன்னம்பிக்கை அதிகமாகின்றது. குறைவாக வாசிப்பவர்கள் அபிப்பிராயங்களிலும், திறமைகளிலும் நம்பிக்கை இழந்தவர்களாக இருப்பார். மனிதன் வாசிப்பு மூலம் வாழ்க்கையில் உச்சபயன் அடைந்து கொள்ள முடியும்.

மபாஸ்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT