நிரந்தர தீர்வுக்கு பிரதமரின் அழைப்பு | தினகரன்

நிரந்தர தீர்வுக்கு பிரதமரின் அழைப்பு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்ற அரசியல் பிரவேசம் செய்து நாற்பதாண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் நேற்றைய தினம் பாராளுமன்றத்தில் விஷேட அமர்வொன்று இடம்பெற்றது. இந்த நிகழ்ச்சி ஒரு வராலாற்றுப் பதிவாகும். சுதந்திர இலங்கையின் பாராளுமன்ற வரலாற்றில் ஒருவர் 40 ஆண்டுகளாக தொடர்ந்து மக்கள் பிரதிநிதியாக இருப்பது மிகப் பெரிய சாதனையாகும். அந்தச் சாதனையை புரிந்திருப்பவர் இன்றைய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராக இருப்பது ஜனநாயக அரசியலுக்கு கிடைத்த வெற்றியாகவே கொள்ள வேண்டியுள்ளது.

தனக்கு பாராட்டுத் தெரிவிக்கும் பிரேணையின் மீது உரையாற்றிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தனது உரையில் தன்னைப் பற்றிப் பேசுவதைவிடுத்து நாட்டின் நலன் குறித்தும், எதிர்காலம் குறித்துமே முக்கியமாக சுட்டிக்காட்டி இருக்கிறார். முதலில் சட்டவாக்க சபையில் உறுப்பினராக தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினரானதுடன் பிரதியமைச்சர், அமைச்சர், சபை முதல்வராக, எதிர்க் கட்சித் தலைவராக, பிரதமராக பதவி வகித்து நாட்டுக்கான பணியை முன்னெடுத்து வந்ததாக குறிப்பிட்டுள்ளனர்.

அதன் பின்னர் தனதுரையில் தெரிவித்த கருத்துக்கள் மிக முக்கியமானதாகவே கொள்ள வேண்டியுள்ளது. தேசிய இனப்பிரச்சினைக்கு இந்தப் பாராளுமன்றத்தின் மூலம் தீர்வுகாண முடியும். இந்தச் சந்தர்ப்பத்தை நாம் தவறவிடக்கூடாது என அவர் வலியுறுத்தியிருக்கிறார். இனப்பிரச்சினைக்காண தீர்வு நாட்டின் அமைதி, பொருளாதாரம், அபிவிருத்தி என்பன ஒன்றோடொன்று தொடர்புபட்டவை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த விடயத்தில் சகல இன, மத மக்களும் ஒன்றிணைந்து பயணிப்பது முக்கியமானதெனவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தேசத்தின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு நாம் இந்த ஒற்றுமைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும். எந்தவொரு தரப்பினரையோ இனத்தையோ குறைத்து மதிப்பிட முடியாது அப்படி குறைத்து மதிப்பிடவும் கூடாது என்பதையும் பிரதமர் தனதுரையில் தெரிவித்திருக்கிறார்.

ஜே. ஆர். ஜயவர்த்தன பிரதமராகவும், எதிர்க் கட்சித் தலைவராகவும், கட்சித் தலைமைத்துவத்திலும் இருந்த கால கட்டங்களில் தான் அவரிடமிருந்து பல அனுபவங்களைக் கற்றுக்கொண்டதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் பிரதமர் எதிர்க் கட்சியிலிருந்த போது பெற்ற அனுபவத்தை வலகம்பாகு மன்னன் நாடேகியது போன்றது. எனவும் அதிலிருந்து நாம் கற்ற பாடமே எம்மை முன்னோக்கிச் செல்ல உத்வேகமளித்த அனுபவம் என பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார்.

தனது 40 வருட கால அரசியல் பயணத்தில் சந்தித்தவை, பெற்றுக்கொண்ட அனுபவங்கள், எதிர்கொண்ட சவால்கள், உள்ளிட்ட அனைத்தையும் பிரதமர் நேற்று மீள் நினைவுக்குக் கொண்டுவந்தார். இது கூட இன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்வாதிகளுக்கு பாடமாகவும், கற்றுக்கொள்ளக் கூடியவையாகவும் உள்ளன. தனது பயணத்தில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஜனநாயக அரசியல் பண்பிலிருந்து அவர் விலகிச் செயற்பட்டது கிடையாது. ஜனநாயக வழியில் எந்தச் சவாலையும் வெற்றிகொள்ள முடியும் என்ற திடமான நம்பிக்கையுடன் செயற்பட்டவராகவே பிரதமரை காணமுடிகிறது.

இன்றைய நல்லாட்சி அரசின் மூலம் அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் அதனூடாகவே நாட்டின் பொருளாதாரம், அபிவிருத்தி, அமைதி அனைத்தையும் உத்தரவாதப்படுத்திக்கொள்ள முடியும் என்பதையும் வலியுறுத்திக் கூறியுள்ளார். பிரதமரின் இந்த உரை ஹன்சாட்டுக்கு மட்டுப்படுத்திக்கொள்ளாமல் அரசியலில் இருக்கும் ஒவ்வொரு தரப்பும் கவனத்தில் கொள்ள வேண்டிய உரையாகவே பார்க்க வேண்டியுள்ளது.

ஒழுக்கம், பொறுமை, பொறாமைப்படாமை, வெற்றி தோல்வியை சமமாக ஏற்றுக்கொள்ளல் போன்றவை அரசியலில் முக்கியமானதாகும். அதனை தான் ஒழுங்குறப் பற்றிக் கடைப்பிடிக்க முடிந்ததையும் பிரதமர் மீள் நினைவுக்குக் கொண்டுவந்தார். கடந்த காலத்தில் நாம் பல முன்னுக்குப்பின் முரண்பட்ட விதத்தில் சவால்களை எதிர்கொண்டிருக்கலாம். கட்சி வேறுபாடுகள் காணப்பட்டதையும் மறுக்க முடியாது. ஆனால் அப்படியே சதாகாலமும் இருக்க வேண்டிய அவசியம் கிடையாது. மாற்றத்தின் பக்கம் எமது பாரவைகள் திருப்பப்பட வேண்டும். அதனையே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வெளிக்காட்டியதையும் பிரதமர் இங்கு நினைவூட்டினார்.

பிரதமரின் இந்த உரை மிகக் காத்திரமானதாகும். ஆனால் இந்த உரையைச் செவிமடுக்க கூட்டு எதிரணி எனக் கூறிக்கொள்ளும் மஹிந்த தரப்பினரும், ஜே. வி. பியும் நேற்று பாராளுமன்றத்தைப் பகிஷ்கரித்து தமது காதுகளைப் பொத்திக்கொண்டுள்ளனர். இது மிகவும் கவலைதரக்கூடிய செயலாகும்.

எமது பாராளுமன்றம் ஜனநாயக பண்புகளைக் கொண்டதாகும். ஜனநாயக அரசியலில் 40 ஆண்டுகள் பயணித்த ஒரு தலைவருக்கு பாராட்டுத் தெரிவிக்கும் போது, அனைவரும் ஜனநாயக பண்புடன் நடந்து கொள்ள வேண்டும். நேற்றைய அமர்வை பகிஷ்கரித்தவர்களால் இந்த ஜனநாயகப் பண்புக்குரிய தாற்பரியம் புரிந்துகொள்ளப்பட முடியாத நிலை ஏற்பட்டமையானது கறைபடிந்த பதிவாகவே நோக்க முடிகிறது. எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தன் உட்பட தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட தமது கருத்துக்களைப் பதிவாக்கிய நிலையில் மஹிந்த தரப்பினரதும் ஜே. வி. பி. யினரதும் செயற்பாடடினை ஜனநாயக பண்பு கொண்டவர்களால் ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது என்பது திண்ணம்.


Add new comment

Or log in with...