Home » மத்தள சர்வதேச விமான நிலையம் 30 வருடங்களுக்கு இந்தியாவின் வசம்

மத்தள சர்வதேச விமான நிலையம் 30 வருடங்களுக்கு இந்தியாவின் வசம்

- பாடசாலை மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு வேலைத்திட்டம்

by Prashahini
April 26, 2024 3:07 pm 0 comment

– இவ்வார அமைச்சரவை கூட்டத்தில் 12 முடிவுகள்

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்கு அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

நேற்று (25) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 12 தீர்மானங்களுக்கு இவ்வாறு அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் வசதிகளைப் பயன்படுத்துவதற்காக ஆர்வங் காட்டுகின்ற தரப்பினர்களிடமிருந்து விருப்புக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக 2023.01.09 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விருப்புக் கோரல்கள் பெறப்பட்டுள்ளதுடன், 05 நிறுவனங்கள் விருப்புக் கோரல்களைச் சமர்ப்பித்துள்ளன. அமைச்சரவையால் நியமிக்கப்பட்டுள்ள பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழுவின் விதந்துரைக்கமைய மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமானநிலையத்தின் முகாமைத்துவத்தை இந்தியாவின் M/s Shaurya Aeronautics (Pvt) Ltd , இற்கும் ரஷ்யாவின் Airports of Regions Management Company இற்கோ அல்லது அதனுடன் இணைந்த தொழில் முயற்சியாளர்களுக்கு 30 வருடகாலத்திற்கு ஒப்படைப்பதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

02. கல்வி ஒத்துழைப்புக்களை நோக்கமாகக் கொண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளல்

உயர்கல்வி ஒத்துழைப்புக்களை விருத்தி செய்யும் நோக்கில் எமது நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள்/ முகவராண்மை நிறுவனங்களுக்கிடையில் கீழ்க்காணும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்வதற்காக கல்வி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

• அனர்த்தங்களுக்கான மீட்சித்திறன் மற்றும் இயற்கை வளங்களின் ஒருங்கிணைந்த முகாமைத்துவம் தொடர்பான பல்நோக்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்கு ஊக்குவிப்பதற்காக இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சல்ஃபர்ட் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

• உலகளாவிய சுகாதார முயற்சிகளை ஒருங்கிணைப்புச் செய்யும் நோக்கில் பிராந்திய ஒத்துழைப்பு நிலையமொன்றை தாபிப்பதற்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் சுகாதார சேவைகள் (தனியார்) கம்பனிக்கும் இடையில் முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம்.

• உலகளாவிய ரீதியில் பெண்களின் மாதவிடாய் முற்றுக்குப் பின்னரான (Post menopause) உளவியல் சுகாதாரப் பிரச்சினைகள் பற்றிய மாரிக் கருத்திட்டம் (MARIE Project) இற்குரிய உருகுணு பல்கலைக்கழகம் மற்றும் ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அயர்லாந்தின் தெற்கு சுகாதார NHS பொறுப்பாண்மை இற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

• சீன மாணவர்களுக்கு இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தால் வழங்கப்படுகின்ற கல்வி வேலைத்திட்டத்திற்கு அனுமதி வழங்கல் மற்றும் ஊக்குவிப்புக்கான தகுந்த அங்கீகாரம் பெற்ற முகவராக Tomorrow Technology Education Service Centre இனைப் பெயரிடுவதற்கும், வலுவூட்டலுக்கு ஏற்புடைய இலங்கை திறந்த பல்கலைக்கழகம் மற்றும் Tomorrow Technology Education Service Centre இற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

• இருதரப்பினர்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களை விருத்தி செய்தல் தொடர்பாக ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகம் மற்றும் செக்குடியரசின் தோமஸ் பாடா (University of Tomas Bata) பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

• இயலவு விருத்தி, ஆய்வு ஒத்துழைப்புக்கள், புத்தாக்கம் மற்றும் நீரியல்வாழ் உயிரின வளர்ப்பு உயிர்த்தொகுதி தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி இலங்கை இராசரட்டைப் பல்கலைக்கழகம் மற்றும் இத்தாலியின் நேபல்ஸ் பெட்ரிகோ II பல்கலைக்கழகத்திற்கும் இற்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

03. பாடசாலை மாணவர்களுக்கான நாடளாவிய ரீதியில் இடம்பெறுகின்ற உளவிழிப்புணர்வு (Mindfulness) பயிற்சி வேலைத்திட்டத்தை விரிவுபடுத்தல்

பாடசாலை மாணவர்களின் மனங்களில் ஏற்படுகின்ற தொடர்ச்சியாக ஏற்படுகின்ற சிக்கல்கள் மற்றும் அழுத்தங்களை இல்லாது செய்து மன அமைதியை ஏற்படுத்தும் நோக்கில் பாடசாலை மாணவர்களுக்கான உளவிழிப்புணர்வு பயிற்சி வேலைத்திட்டம்’ நடைமுறைப்படுத்துவதற்காக 2024.12.12 அன்று இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய தற்போது ஒரு வருடத்திற்கு மேற்பட்ட காலம் நாடளாவிய ரீதியில் அனைத்துப் பாடசாலைகளிலும் குறித்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வேலைத்திட்டத்தின் அடுத்த கட்டமாக வெசாக் தினத்தைத் தொடர்ந்து வருகின்ற தினத்தை தேசிய உளவிழிப்புணர்வு தினமாக அனுட்டிப்பதற்கும், வெசாக் வாரத்திற்கு இணையாக ‘வெசாக் வாரத்தில் உளவிழிப்புணர்வு தேசத்தை நோக்கி’ எனும் பெயரிலான வேலைத்திட்டத்தை எதிர்வரும் காலங்களில் வருடந்தோறும் நடைமுறைப்படுத்துவதற்கும், 2024 ஆம் ஆண்டிலிருந்து வருடந்தோறும் மே மாத ஆரம்பத்தில் “சர்வதேச உளவிழிப்புணர்வு மாநாடு” நடாத்துவதற்கும் கல்வி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

04. நீர்கொழும்பு ஏத்துக்கால கடலோர பூங்காவை அபிவிருத்தி செய்வதற்காக அப்பூங்கா அமைந்துள்ள காணியை நகர அவ்விருத்தி அதிகாரசபைக்கு கையகப்படுத்தல்

ஆறு ஏக்கர் 01 றூட் 9.1 பேர்ச்சஸ் பரப்பளவைக் கொண்டுள்ள ஏத்துக்கால கடலோரப் பூங்காவானது (Browns Beach) நீர்கொழும்பு மாநகர சபை எல்லைக்குள்காணப்படுகின்ற ஒரேயொரு கடலோர பூங்காவாகக் காணப்படுகின்றதுடன், குறித்த பூங்காவானது 2021-2030 நீர்கொழும்பு அபிவிருத்தி திட்டத்தில் அதிகூடிய சுற்றுலா ஊக்குவிப்பு வலயத்தில் அமைந்துள்ளது. இக்கடலோரப் பூங்கா உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்திழுக்கும் பூங்காவாக மாற்றுவதற்கு அதன் முகாமைத்துவத்தை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு நீர்கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது.

அதற்கமைய குறித்த திட்டங்களுக்கமைய சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்வதற்கு பூங்கா அமைந்துள்ள காணியை அரச காணிக்கட்டளை சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய அளிப்பாக நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு ஒப்படைப்பதற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

05. Wetland Link International – Asia Oceania இன் முதலாவது மாநாட்டை தியசறு பூங்காவில் (Diyasaru Park) இல் நடாத்துதல்

Wetland Link International – Asia Oceania எனும் சதுப்புநிலக் கல்வி நிலையத்திற்கான சர்வதேச உதவி வலையமைப்பாக இயங்குவதுடன், ஐக்கிய இராச்சியத்தின் Wildfowl and Wetlands Trust (WWT) தலைமைத்துவம் வகிக்கின்றது. WLI கூட்டு 06 கண்டங்களில் பரந்து காணப்படும் 350 கல்வி நிலையங்களைக் கொண்டமைந்தது. ஆசியாவின் சதுப்புநிலங்களை மேம்படுத்துவதற்காக WLI உடன் இணைந்த WLI Asia (Wetland Link Asia International) தாபிக்கப்பட்டுள்ளதுடன், அது 100 சதுப்புநில அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது.

மேலும், 2022 ஆம் ஆண்டில் WLI Asia கூட்டமைப்பால் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து சதுப்புநில நிலையங்களுடன் இணைந்து WLI – Asia Oceania எனும் பெயரிலான கூட்டு அமைக்கப்பட்டுள்ளது. றுWLI – Asia Oceania இன் முதலாவது மாநாடு இலங்கை அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிர்வகிக்கப்படுகின்ற தியசறு பூங்காவில் (DIYASARU PARK) உபசரிப்புக்களுடன் 2024 யூன் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் 22 ஆம் திகதி வரை, கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளுடன் கூடிய MICE (Meetings, Incentives, Conferences and Exhibitions) சுற்றுலாத்துறை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்டமாக கொழும்பில் நடாத்துவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

அதற்கமைய, 100 வெளிநாட்டு தூதுக் குழுக்கள் மற்றும் 75 உள்நாட்டுக் குழுக்களின் பங்கேற்புடன் குறித்த மாநாட்டை கொழும்பில் நடாத்துவதற்கும் அதற்கான உபசரிப்புக்களை மேற்கொள்வதற்கும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

06. ஹோமாகம பிட்டிபனவில் அமைந்துள்ள இரண்டு காணித் துண்டுகளை வரையறுக்கப்பட்ட தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்திற்கு வழங்குதல்

ஹோமாகம நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ‘அறிவு மைய நகரம்’ எனும் எண்ணக்கருவுக்கு அமைவாக, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவுகளை மேம்படுத்துவதை முன்னுரிமையாகக் கொண்டு,அதற்குத் தேவையான காணித் துண்டுகளை ஒதுக்கி வழங்கும் நோக்கில் ஹோமாகமபிட்டிபனவில் அமைந்துள்ள மாஹேனவத்த எனும் பெயரிலான 237 ஏக்கர் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைகையகப்படுத்தியுள்ளது.

குறித்த காணியில் 14 ஏக்கர் 3 றூட் 12.8 பர்ச்சஸ் காணித்துண்டை தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்தின் II ஆம் பகுதிக் கட்டுமானத்திற்காகவும்,மேலும் 20 ஏக்கர் காணித்துண்டை அதன் III ஆம் பகுதி கட்டுமானத்திற்காக அரச விலை மதிப்பீட்டாளரின் பெறுமதிக்கமைய நீண்டகால குத்தகை அடிப்படையில் தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனத்திற்கு ஒப்படைப்பதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

07. வலுசக்தித் துறைக்கான புதிய ஒழுங்குமுறைப்படுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்தல்

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் விமானங்களுக்கான எரிபொருள், திரவப் பெற்றோலிய வாயு (LPG) மற்றும் உராய்வு எண்ணெய் உள்ளிடட பெற்றோலியப் பொருட்கள் உற்பத்தி நிறுவனம், சுத்திகரித்தல், விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றன தற்போது காணப்படுகின்ற சட்டங்களுக்கமைய மேற்கொள்ளப்பட்டாலும், இத்துறையில் விரிவான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறையொன்று இல்லை. தனியார் நிறுவனங்கள் பல பெற்றோலிய உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விநியோக நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற நிறுவனங்கள் பலவும் தொடர்புபடுவதால், இத்துறையில் ஏற்படுகின்ற சவால்களுக்கு தீர்வு காணல், உற்பத்திகளின் தரங்களை அதிகரித்தல் மற்றும் வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் ஏனைய தரப்பினர்களின் தேவைகளைப் பாதுகாப்பதற்காக சுயாதீன, ஆற்றல்மிக்க, பயனுள்ள மற்றும் வினைத்திறனான ஒழுங்குமுறைப்படுத்தல் பொறிமுறைக்கான தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதனால், அதுதொடர்பான விடயங்களை ஆராய்ந்து விதந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், சட்டங்களைத் தயாரிப்பதற்கும் வலுசக்தி, மின்சக்தி அமைச்சின் செயலாளரின் தலைமையிலான குழுவொன்றை நியமிப்பதற்காக வலுசக்தி, மின்சக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

08. இந்து சமுத்திர நாடுகளின் கூட்டமைப்பு (IORA) இன் தலைமைத்துவத்தை இலங்கை பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய பணிகள்

இந்து சமுத்திர எல்லையில் அமைந்துள்ள 23 உறுப்பு நாடுகளுடன் கூடிய இந்து சமுத்திர நாடுகளின் கூட்டமைப்பின் (IORA) தலைமைத்துவம் 02 வருடங்களுக்கு இலங்கைக்குக் கிடைத்த பின்னர், இலங்கை 2024 ஆம் ஆண்டில் உத்தியோகபூர்வக் கூட்டங்கள் சிலவற்றை ஒழுங்குபடுத்த வேண்டியுள்ளது. அதற்கமைய, கீழ்க்காணும் வகையிலான உத்தியோகபூர்வ கூட்டங்களை இலங்கையில் நடாத்துவதற்கும் அதற்குரிய உபசரிப்புக்களை மேற்கொள்வதற்கும் வெளிவிவகார அமைச்சு சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

i. இந்து சமுத்திர நாடுகளின் கூட்டமைப்பு (IORA) இன் நிறைவேற்று அதிகாரிகளின் 26 ஆவது ஒன்றுகூடல் 2024 மே மாதம் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் நடாத்துதல்

ii. நிறைவேற்றுக் அதிகாரிகளின் 27 ஆவது ஒன்றுகூடல் 2024 நவம்பர் மாதத்தில் நடாத்துதல்

iii. 24 ஆவது அமைச்சர்கள் மட்டத்திலான ஒன்றுகூடல் 2024 நவம்பர் மாதத்தில் நடாத்துதல்

09. 2002 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான் செலவுகள் சட்டம்

விமானப் போக்குவரத்து தொழிற்றுறையின் நடைமுறைகள், எல்லைகள் மற்றும் வரையறுத்தல் போன்றன நாளாந்தம் விரிவாக்கமடைந்து செல்வதால், நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து சேவைகள் கொள்கைகளுக்கும், தொழிற்றுறையின் தேவைகளுக்கும் அமைவாகவும், சிவில் விமான சேவைகளின் உலகளாவிய போக்குகளுக்குப் ஏற்புடைய வகையில் 2002 ஆம் ஆண்டின் 34 ஆம் இலக்க சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபைச் சட்டம் மற்றும் 2010 ஆம் ஆண்டின் 14 ஆம் இலக்க குடியியல் வான் செலவுகள் சட்டம் போன்றவற்றைத் திருத்தம் செய்ய வேண்டிய தேவை கண்டறியப்பட்டுள்ளது.

அதற்கமைய, அதுபற்றிய விதந்துரைகளைப் பெற்றுக் கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் குறித்த சட்டங்களைத் திருத்தம் செய்வதற்காக சட்டமூலங்களைத் தயாரிக்குமாறு சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

10. குற்றச் செயல்களால் ஈட்டிய சொத்துக்கள் தொடர்பான சட்டமூலம்

சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த கடன் வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தத்திற்கமைய, 2024 ஆம் ஆண்டாகும் போது சொத்துக்களை அறவீடு செய்தல் தொடர்பான முழுமையான சட்டமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கை அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதற்கமைய, நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அவர்கள் குற்றச் செயல்களால் ஈட்டிய சொத்துக்கள் தொடர்பான சட்டத்திற்குத் தேவையான கொள்கைகள், சட்டங்கள் மற்றும் நடவடிக்கை முறைகளைத் தயாரிப்பதற்காக 2023 மார்ச் மாதம் நீதித்துறையின் நிபுணர்களுடன் கூடிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில், குற்றச் செயல்களால் ஈட்டிய சொத்துக்கள் தொடர்பான சட்டமூலத்தைத் தயாரிப்பதற்காக சட்டவரைஞருக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஜனாதிபதி மற்றும், நீதி, சிறைச்சாலைகள் அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் இணைந்து சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

11. இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த பொருளாதார விபரம் மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் நடவடிக்கைகளை பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்தல்

2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் 80(3) ஆம் பிரிவுக்கமைய ஒவ்வொரு நிதியாண்டும் முடிவடைந்து முதல் நான்கு மாதங்களில் குறித்த நிதியாண்டுக்கான பொருளாதார நிலைமைகள் பற்றிய அறிக்கையை நிதி விடயதானத்திற்குப் பொறுப்பான அமைச்சர் அவர்கள் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.மேலும், இலங்கை மத்திய வங்கி சட்டத்தின் 99(3) ஆம் பிரிவுக்கமைய ஒவ்வொரு நிதியாண்டு முடிவடைந்து நான்கு மாத காலத்தில் மத்திய வங்கி ஆளுநர் மற்றும் பிரதம கணக்காளரால் கையொப்பமிடப்பட்டும், கணக்காய்வாளர் தலைமையதிபதியால் கணக்காய்வு செய்யப்பட்ட நிதிக்கூற்றுக்கள் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.

அதற்கமைய, 2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கியால் தயாரிக்கப்பட்டுள்ள ஆண்டுக்கான விபரக்கூற்றுக்கள் மற்றும் இலங்கை வங்கியின் நிதிக்கூற்றுக்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்காக நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

12. அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் பற்றிய கண்காணிப்பதற்காக உள்ளுராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை நியமித்தல்

இலங்கையின் அனைத்துப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காக அரசால் பல்வேறு வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதுடன், குறித்த வேலைத்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை கண்காணிப்பதற்காக சமூகத்தை இணைத்துக் கொள்வதன் மூலம் ஆட்சியின் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறலை மேம்படுத்துவது பொருத்தமானதெனக் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன், சமூகத்தின் அறிவையும் பங்கேற்புக்களையும் இவ்வேலைத்திட்டங்களிலும் கருத்திட்டங்களிலும் பெற்றுக்கொள்வதற்காகவும், ஒவ்வொரு பிரதேசங்களிலும் திட்டவட்டமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அவ்வேலைத்திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளமையை உறுதிப்படுத்திக் கொள்வதன் மூலம் இயலுமை கிட்டும்.

அதற்கமைய,‘உரித்து’ காணி உரிமை வேலைத்திட்டம், நகர வீட்டுரிமை வேலைத்திட்டம், மலைநாட்டு பத்தாண்டு வேலைத்திட்டம், விவசாய நவீனமயப்படுத்தல் வேலைத்திட்டம், மற்றும் அரிசி விநியோக வேலைத்திட்டம் போன்ற வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தல் தொடர்பாக அந்தந்தப் பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்புடன் கண்காணிப்பு செய்வதற்காக சமுதாய ஆலோசனை குழுவொன்று தொண்டர் அடிப்படையில் நியமிப்பதற்காக மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக கௌரவ ஜனாதிபதி அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT