Tuesday, April 30, 2024
Home » தோல்வியின் இடிபாடுகளுக்கு மத்தியில் எழுந்த நம்பிக்கை
ஆண்டவரின் உயிர்ப்பு

தோல்வியின் இடிபாடுகளுக்கு மத்தியில் எழுந்த நம்பிக்கை

by sachintha
April 2, 2024 10:35 am 0 comment

திருத்தந்தை பிரான்சிஸ்

இயேசுவின் பாஸ்கா கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு. மரணத்தின் மீதான வாழ்க்கையின் வெற்றி, இருளின் மீதான ஒளியின் வெற்றி, தோல்வியின் இடிபாடுகளுக்கிடையே எழுந்த நம்பிக்கையின் மறுபிறப்பு என திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்.

வத்திக்கான் புனித பேதுரு பேராலயத்தில் இடம்பெற்ற ஆண்டவரின் உயிர்ப்புப் பெருவிழாத் திருவிழிப்புத் திருப்பலியில் நிகழ்த்திய மறையுரையின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஆண்டவரை நோக்கி நம் கண்களை உயர்த்தி, அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமை, நம் ஆன்மாக்களை அழுத்தும் கனமான கற்களை உருட்டி அகற்ற வேண்டுமென மன்றாடுவோம். ஏனென்றால் நம்முடன் இயேசு இருக்கும்போது, எந்தக் கல்லறையும் நம் வாழ்வின் மகிழ்ச்சியை தடைப்படுத்த முடியாது.

மாற்கு நற்செய்தியிலிருந்து (மாற்கு 16:1-8) நாம் வாசித்த, “கல்லறைவாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்று அவர்கள் ஒருவரோடுஒருவர் கேட்டுக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் நிமிர்ந்து உற்றுநோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்” (வச 3-4), என்ற இறைவசனங்களை மையப்படுத்தி மறையுரைச் சிந்தனைகளை திருத்தந்நை பகிர்ந்துகொண்டார்.

முதலாவதாக, “கல்லறை வாயிலிலிருந்து கல்லை நமக்கு யார் புரட்டுவார்?” என்ற இயேசுவைக் காணச் சென்ற பெண்களின் இந்த வார்த்தைகள் அவர்களின் நம்பிக்கையினை இழக்கச் செய்தது என்றாலும், இயேசுவின் மறைபொருளான இந்த உயிர்ப்பு அவர்களின் நம்பிக்கை கனவுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தெளிவற்ற மற்றும் துயரமான நிலையை அழித்தொழித்தது.

இயேசுவின் கல்லறையை மூடியிருந்த பெரியதொரு கல்போன்று, நம் இதயத்தின் கதவுகளை அடைத்து, வாழ்க்கையைத் திணறடித்து, நம்பிக்கையை அணைத்து, நம் பயம் மற்றும் துயரங்களின் கல்லறையில் நம்மைச் சிறைப் பிடித்து, நம் மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையை தடைப்படுத்தும் கற்களும் நம் வாழ்வில் வரலாம். மேலும் உற்சாகத்தையும் விடாமுயற்சியையும் பறிக்கும் எல்லா அனுபவங்களிலும் சூழ்நிலைகளிலும் நம் வாழ்க்கைப் பயணத்தில் நம்மை சமாதியாக்க நினைக்கும் இதுபோன்ற கற்களை நாம் சந்திக்கலாம்.

நம் வாழ்வின் துயரங்களின்போதும், நம் அன்புக்குரியவர்களின் மரணத்தால் நாம் பெறும் வெறுமை, தோல்விகள் மற்றும் பயங்களின்போதும், நாம் செய்ய நினைக்கும் நல்லதைச் செய்வதிலிருந்து இத்தகைய கற்கள் நம்மைத் தடைசெய்கின்றன என்பதை உணர்வோம்.

தாராள மனப்பான்மை மற்றும் நேர்மையான அன்பிற்கான நமது தூண்டுதல்களைத் தடுக்கும் அனைத்து வகையான சுயநல செயல்பாடுகளிலும், நமது சுயநலம் மற்றும் அலட்சியத்தின் பலமற்ற சுவர்களிலும், நியாயமான மற்றும் மனிதாபிமான நகரங்கள் மற்றும் சமூகங்களை உருவாக்குவதற்கான நமது முயற்சிகளிலும், வெறுப்பு மற்றும் போரின் கொடூரத்தால் சிதைந்த அமைதியை மீட்டெடுக்கும் நமது முயற்சிகளிலும் இத்தகைய கற்கள் நம்மைத் தடைப்படுத்துகின்றன என்பதை அறிவோம்.

‘‘அவர்கள் நிமிர்ந்து உற்று நோக்கியபொழுது கல் புரட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள்’ என்ற வார்த்தைகள், அப்பெண்கள் இழந்திருந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் மீட்டுக்கொடுத்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டுகிறது.

இதுதான் இயேசுவின் பாஸ்கா, கடவுளின் வல்லமையின் வெளிப்பாடு, மரணத்தின் மீதான வாழ்க்கையின் வெற்றி, இருளின்மீதான ஒளியின் வெற்றி, தோல்வியின் இடிபாடுகளுக்கு மத்தியில் எழுந்த நம்பிக்கையின் மறுபிறப்பு.

அன்று கல்லறையின் கல்லை புரட்டிப்போட்ட இறைவன், இப்போதும், அவர் நம் கல்லறைகளைத் திறக்கிறார், அதனால் நமது நம்பிக்கை புதிதாகப் பிறக்கும். அப்படியானால், நாமும் அப்பெண்களைப்போன்று நிமிர்ந்தெழுந்து அவரை உற்றுப்பார்க்க வேண்டும்.

இறைத்தந்தையின் வல்லமையால் அவருடைய மற்றும் நம்முடைய உடலில் உயிருடன் எழுப்பப்பட்ட நமதாண்டவர் இயேசு, தூய ஆவியாரின் ஆற்றலால் மனித இனத்தின் வரலாற்றில் ஒரு புதிய பக்கத்தை ஏற்படுத்தினார்.

இனிமேல், இயேசு நம்மோடு கரம்கோர்க்க நாம் அனுமதித்தால்தோல்வி அல்லது துயரம், அது எவ்வளவு வேதனையாக இருந்தாலும், நம் வாழ்வின் அர்த்தத்தை இழக்கச் செய்ய முடியாது. இனிமேல், உயிர்த்த இயேசுவுடன் இணைந்த நிலையில் நம்மையும் அவருடன் உயிர்த்தெழ நாம் அனுமதித்தால் எந்தப் பின்னடைவும், துயரமும், எந்த மரணமும் வாழ்வின் முழுமையை நோக்கிய நமது முன்னேற்றத்தை தடுத்து நிறுத்த முடியாது என்றும் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்

செல்வராஜ் சூசைமாணிக்கம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT