Tuesday, April 30, 2024
Home » மத்திய கிழக்கு பிராந்தியமோ, உலகமோ இன்னுமொரு யுத்தத்தை தாங்காது

மத்திய கிழக்கு பிராந்தியமோ, உலகமோ இன்னுமொரு யுத்தத்தை தாங்காது

ஐ.நா. செயலாளர் நாயகம் கவலை வெளியீடு

by mahesh
April 17, 2024 3:28 pm 0 comment

மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு யுத்தத்தை தாங்காதென, ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் அண்டனியோ குட்ரஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் மீது ஈரான், கடந்த ஞாயிற்றுக்கிழமை (14) காலை சுமார் 300 ஏவுகணைகள் மற்றும் ட்ரோன் குண்டுகளை வீசியது. சுமார் 05 மணி நேரம் நடந்த இந்தத் தாக்குதலில் 99 சதவீதத்தை நடுவானில் இடைமறித்து அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகள் அழித்தன. இந்த தாக்குதல் 03ஆம் உலகம் போருக்கு வழிவகுக்குமென பலர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (14) கூடியது. இந்தக் கூட்டத்தில் உரையாற்றிய ஐ.நா பொதுச் செயலாளர் “அமைதியை நிலைநாட்ட வேண்டிய கூட்டுப் பொறுப்பு அனைவருக்கும் உள்ளது. அது பிராந்திய அமைதியாக இருக்கட்டும் அல்லது சர்வதேச அமைதி, பாதுகாப்பாக இருக்கட்டும். ஆனால் அந்த கூட்டுப் பொறுப்பு இப்போது குறைத்து மதிப்பிடப்படுகிறது. இந்தத் தருணத்தில் மத்திய கிழக்கு பிராந்தியமோ அல்லது இந்த உலகமோ இன்னொரு போரைத் தாங்காது.

மத்திய கிழக்கு பிராந்தியம் போரின் விளிம்பில் நிற்கிறது. அந்தப் பிராந்திய மக்கள் முழு வீச்சு போரை எதிர்கொள்ளும் அபாயத்தில் உள்ளனர். இத்தருணத்தில் உடனடியாக பதற்றத்தை தணிக்க வேண்டும். இது போரிலிருந்து விலகி நிற்பதற்கான தருணம். பழிக்குப் பழியென இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய வான்வழி தாக்குதலைக் கண்டிக்கிறோம். வெறுப்புகளை முன்னெடுக்காமல் நிறுத்துங்கள்.

அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். பிராந்திய ஒருமைப்பாடு அல்லது அரசியல் சுதந்திரத்துக்கு அல்லது ஏதாவதொரு நாட்டுக்கும் எதிராக பலத்தை பிரயோகிக்காதீர்கள். அதேபோல் இஸ்ரேல் – ஹமாஸ் போரை உடனடியாக நிறுத்திவிட்டு எவ்வித நிபந்தனையுமின்றி பிணைக் கைதிகளை விடுவியுங்கள். காசாவில் மனிதாபிமான அடிப்படையில் உடனடி போர் நிறுத்தத்தைக் கொண்டு வர நமக்குப் பொறுப்புள்ளது.

அங்கு தடையில்லாது மனிதாபிமான உதவிகள் சென்று சேர்வதை உறுதி செய்ய வேண்டும். மேற்கு கரை பதற்றத்தைத் தணிக்க வேண்டும். செங்கடலில் அச்சமற்ற கப்பல் போக்குவரத்து உறுதி செய்யப்பட வேண்டும்” என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT