Wednesday, May 1, 2024
Home » அரசின் சரியான தீர்மானங்களால் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது

அரசின் சரியான தீர்மானங்களால் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது

சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலைய திறப்பு விழாவில் ஜனாதிபதி உரை

by Gayan Abeykoon
April 5, 2024 1:00 am 0 comment

கடந்த இரண்டு வருடங்களில் அரசாங்கம் நாட்டில் முன்னெடுத்த சரியான தீர்மானங்களால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளதுடன், இன்று எவரும் வீதியில் இறங்கி அரசியல் செய்ய சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும்,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

ஆயினும் நாட்டின் பொருளாதாரம் இன்னும் தொங்குபாலத்தில் இருப்பதை  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அரசாங்கத்தின் வேலைத்திட்டம்  வெற்றி பெறும்வரை தொடர்ந்து செல்வதா அல்லது அவ்வேலைத்திட்டத்தை விட்டு, நாட்டை மீண்டும் அதல பாதாளத்தில் தள்ளி விடுவதா என்பதை மக்களே  தீர்மானிக்க வேண்டுமெனவும், ஜனாதிபதி தெரிவித்தார்.  2022ஆம் ஆண்டை விட 2023ஆம் ஆண்டில் அரசாங்கத்தின் வருமானம் 50%க்கும் அதிகமாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, வலுவான பொருளாதாரத்துடன் முன்னோக்கி செல்வதற்கான பின்னணி நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

சர்வதேச இரத்தினக்கல்  ஆபரண வர்த்தக நிலையத்தை (இரத்தினபுரி இரத்தினக்கல் கோபுரம்) நேற்று (04) காலை திறந்து வைத்து  உரையாற்றிய போதே,  ஜனாதிபதி மேற்கண்டவாறு  குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,

“இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலை மேலும் வலுப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்துக்கு உயர் பங்களிப்பை வழங்க அரசாங்கம் திட்டமிடப்பட்டுள்ளது.  இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிலில் பிரச்சினைகளை தீர்த்து, இரத்தினக்கல் அகழ்வோர்களும் இந்த வேலைத்திட்டத்தின் மூலம் பயனடைய வேண்டும்.

சர்வதேச இரத்தினக்கல் வர்த்தக நிலையத்தினூடாக இலங்கையின் இரத்தினக்கற்களுக்கு சர்வதேச ரீதியில் உரிய பெறுமதியை பெற்றுக்கொள்ளக்கூடிய நிலைக்கு மாற்ற முடியும்.

இந்த நிலையம் இரத்தினபுரிக்கு மட்டுமல்ல, இது நாட்டிலேயே ஒரு பாரிய இரத்தினம் மற்றும் ஆபரண மையமாக மாறும். இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையை மேலும் முன்னேற்றுவது தொடர்பாக அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. தேசிய பொருளாதாரத்துக்கு அதிக பங்களிப்பை வழங்குவதே இதன் நோக்கமாகும்.

எதிர்காலத்தில் இந்தத் துறையிலிருந்து குறைந்தபட்சம் 2 பில்லியன் அமெரிக்க டொலரை வருமானமாக ஈட்டுவதை இலக்கா​க கொள்ள வேண்டும். இந்தத் துறையை மேம்படுத்தும் போது, இரத்தின சுரங்கத் தொழிலாளிகளுக்கும் அதன் நன்மை கிடைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். இதன்போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு  நினைவுப்பரிசு  வழங்கப்பட்டதுடன், விருந்தினர் புத்தகத்தில் நினைவு குறிப்பையும்  ஜனாதிபதி பதிவிட்டார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT