Tuesday, May 21, 2024
Home » மே தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

மே தினத்தை முன்னிட்டு மதுபான விற்பனை நிலையங்களுக்கு பூட்டு

- இன்று முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்

by Prashahini
April 30, 2024 2:05 pm 0 comment

மே தினத்தை முன்னிட்டு நாளை சில மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே தின பேரணிகள் இடம்பெறும் பிரதேச செயலகப் பிரிவுகளில் இயங்கும் அனைத்து உரிமம் பெற்ற சில்லறை மதுபான விற்பனை நிலையங்களும் மூடப்படும் என மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

2024-මැයි-දිනය-වෙනුවෙන්-මත්පැන්-හල-වැසීම-2

மேலும் மே தினத்தை முன்னிட்டு இன்று (30) முதல் விசேட பாதுகாப்புத் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நகரம் உள்ளிட்ட மே தின பேரணிகள் முன்னெடுக்கப்படும் பகுதிகளை மையப்படுத்தி இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

சர்வதேச தொழிலாளர் தினத்தைக் கொண்டாடுவதற்கு பிரதான அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.

இம்முறை மே தினப் பேரணிகளையும் கூட்டங்களையும் கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வுகள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மாளிகாவத்தை PD சிறிசேன மைதானத்தில் நடைபெறவுள்ளன.

நிலவும் வெப்பமான வானிலையைக் கருத்தில்கொண்டு இம்முறை பேரணி எதுவும் முன்னெடுக்கப்பட மாட்டாது என கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

இதனிடையே ஐக்கிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் கோட்டை செத்தம் வீதியில் நடைபெறவுள்ளது.

கொழும்பு குணசிங்கபுர விளையாட்டரங்கிலிருந்து சத்தம் வீதிக்கு பேரணியாக வருவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியுள்ளார்.

இதனிடையே, ஐக்கிய மக்கள் சக்தியின் மற்றுமொரு மே தின பேரணி தலவாக்கலையில் நடைபெறவுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மே தின நிகழ்வுகள் பொரளை கெம்பல் மைதானத்திலும் ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டம் கம்பஹா நகரசபை மைதானத்திலும் முன்னெடுக்கப்படவுள்ளன.

கட்சியின் அனைத்து உறுப்பினர்களும் இதில் பங்கேற்பார்கள் என எதிர்பார்ப்பதாக கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரொருவர் கூறியுள்ளார்.

இதனிடையே, தேசிய மக்கள் சக்தியின் மே தினக் கூட்டம் ‘நாட்டை கட்டியெழுப்பும் தீர்வுக்கு மக்கள் சக்தி ஓரணியில்’ எனும் தொனிப்பொருளில் நாட்டின் பல பகுதிகளிலும் நடைபெறவுள்ளது.

கொழும்பில் நடைபெறவுள்ள மே தின பேரணி BRC மைதானத்தில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், பிற்பகல் 3.30 க்கு CWW கன்னங்கர மாவத்தையில் கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.

யாழ்ப்பாணத்தில் முற்பகல் 10.00 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் மே தினக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அனுராதபுரத்தில் தேசிய மக்கள் சக்தியின் மே தின பேரணி வலிசிங்க ஹரிஸ்சந்ர விளையாட்டரங்கில் பிற்பகல் 2.00 மணிக்கு ஆரம்பமாகி பிற்பகல் 3.30 இற்கு மஹஜன விளையாட்டரங்கில் கூட்டம் நடைபெறவுள்ளது.

இதேவேளை, கொழும்பில் இடம்பெறவுள்ள மே தினப் பேரணிகள், கூட்டங்களின் பாதுகாப்பிற்காக 6000 பொலிஸார் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் 4000 பொலிஸார் ஏனைய பிரதேசங்களில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தேவையேற்படும் சந்தர்ப்பங்களில் இராணுவத்தினரின் உதவி பெற்றுக்கொள்ளப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.

இதனிடையே, மே தினப் பேரணிகள், கூட்டங்களை பதிவு செய்வதற்காக ட்ரோன் கெமராக்களை அனுமதியின்றிப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அவ்வாறு ட்ரோன் கெமராக்களைப் பயன்படுத்த வேண்டிய தேவையேற்படின் முன்னனுமதி பெற வேண்டுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விதிமுறை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் இடம்பெறவுள்ள மே தினப் பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்குப் பொருந்துமெனவும் அவர் கூறினார்.

கொழும்பு நகரில் மாத்திரம் 14 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் நாடளாவிய ரீதியில் 40 மே தினப் பேரணிகளும் கூட்டங்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT