Thursday, May 9, 2024
Home » காரைநகர் வாரிவளவு நல்லியக்கச்சபையும், ‘பட்டுமாமா’ சரவணமுத்து பத்மநாதனும்

காரைநகர் வாரிவளவு நல்லியக்கச்சபையும், ‘பட்டுமாமா’ சரவணமுத்து பத்மநாதனும்

by damith
March 25, 2024 9:44 am 0 comment

காரைநகர் வாரிவளவில் 1970 களில் நல்லியக்கச்சபை என்ற அமைப்பினை இளையோர்கள் தோற்றுவித்தார்கள். கல்வி, மொழி,கலை,பண்பாடு,விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக நல்லிணக்க மேம்பாடு என்பன இவற்றின் குறிக்கோள்களாக இருந்தன.

இவ்வமைப்பினூடாக பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டன. அமைப்பின் மண்டபத்தின் உள்ளே டேபிள் ரெனிஸ், கரம்,செஸ்,டாம் போன்ற விளையாட்டுகளும் மண்டபத்திற்கு வெளியே வாரிவளவுப் பிள்ளையார் கோயில் வீதியில் கிரிக்கெட், கரப்பந்தாட்டம், உதைபந்தாட்டம், தாச்சி முதலிய விளையாட்டுகளும் இடம்பெற்றன.

சித்திரை வருடப்பிறப்பையொட்டி பிள்ளையார் கோயில் திருவிழா முடிவடைய மாபெரும் விளையாட்டு விழா மூன்று தினங்கள் இடம்பெறும். இவ்விளையாட்டு விழாவில் முன்பள்ளி மாணவர்கள் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளடங்கலாக வயது மற்றும் பால் வேறுபாடின்றி எல்லோரும் பங்குபற்றுவதுண்டு.

மைதான நிகழ்வுகள், சுவட்டு நிகழ்வுகள் மற்றும் பெருவிளையாட்டுகள் எல்லாம் நடைபெற்றன. காரைநகர் வீதிகளில் ஆண், பெண் இருபாலாருக்குமான மரதன் மற்றும் சைக்கிள் ஓட்டப்போட்டிகள் நடைபெற்றன. ஊர்காவற்றுறைக்கும் காரைநகருக்கும் இடையிலான கடற்பகுதியில் ஆண், பெண் இருபாலாருக்குமான நீச்சல் போட்டிகள் இடம்பெறுவதுண்டு.

இதேபோன்று நவராத்திரியை முன்னிட்டு முத்தமிழ் போட்டிகள் மூன்று தினங்கள் வயது வேறுபாடின்றி பால் வேறுபாடின்றி நடைபெறுவது வழக்கம். நடனப் போட்டிகள், நாடகப்போட்டிகள், சங்கீதப்போட்டிகள், பேச்சுப்போட்டிகள், பண்ணிசைப்போட்டிகள், பட்டிமண்டபம் என்பன நடைபெறுவதுண்டு.

இவ்வமைப்பின் செயலாளராக ‘பட்டுமாமா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்ட கல்வித் திணைக்களத்தின் மூத்த நிர்வாக அதிகாரி சரவணமுத்து பத்மநாதன் பொறுப்போடு பணியாற்றி பல ஆண்டுகளாக இந்நிகழ்வுகளைத் திறம்பட நடத்தினார். பின்னர் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திற்கும் முன்பள்ளிகளுக்கிடையேயான போட்டிகளாக இவை விரிவுபடுத்தப்பட்டன. இந்நிகழ்வுகள் இரவு வரை நடைபெற்றன.

இந்நிகழ்வுகள் நடைபெறும் தினங்களில் காதல்கள் பல கைகூடும். அதனால் சில வேளைகளில் சண்டை சச்சரவுகளும் மூளும். இதனை விட பேசிச்செய்யப்படும் திருமணங்களின் பெண் பார்க்கும் படலமும் மாப்பிள்ளை பார்க்கும் படலமும் நடந்தேறுவது வழமை. இத்தினங்களில் எங்கிருந்தாலும் ஊரவர்கள் ஒன்றுகூடி மகிழ்வார்கள்.

இன்று பல்வேறு தரப்பினராலும் பேசப்படும் இணைப்பாடவிதானச் செயற்பாடுகளை எங்கள் கிராமத்தில் ஏறத்தாழ ஐந்து தசாப்தங்களுக்கு முன்பே நாங்கள் தொடங்கியிருந்தோம். அதனூடான சிறந்த அறுவடையையும் பெற்றோம். பலர் இச்செயற்பாடுகளினூடாக வளர்க்கப்பட்டனர்.

பட்டுமாமா அவர்களை நினைவுகூரும் முகமாக வாரிவளவைச் சேர்ந்த முன்னாள், இந்நாள் இளையோர் சில நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தி உள்ளார்கள். அதன் முன்னோடியாக காரைநகரில் உள்ள விளையாட்டுக் கழகங்களுக்கு இடையே பட்டு மாமா ஞாபகார்த்த வெற்றிக் கிண்ண மென்பந்து கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் 30.03.2024 அன்று காரைநகர் யாழரன் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளன.

இதனைத் தொடர்ந்து 16.04.2024 அன்று மாலை இரண்டு மணிக்கு இறுதிப்போட்டியும் தொடர்ந்து பரிசளிப்பும் கலைநிகழ்வுகளும் காரைநகர் யாழ்ரன் கல்லூரி திறந்தவெளி அரங்கில் நடைபெற உள்ளன.

காரை கந்தையா பத்மானந்தன்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT