Friday, May 31, 2024
Home » IPL 2024 SRH vs LSG: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அபாரமாக வெற்றி

IPL 2024 SRH vs LSG: 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அபாரமாக வெற்றி

- வெளியேறியது மும்பை இந்தியன்ஸ்

by Prashahini
May 9, 2024 9:24 am 0 comment

IPL 2024 ஆம் ஆண்டு சீசனில் நேற்று (08) ஹைதராபாத்தில் நடைபெற்ற லக்னோ அணிக்கு எதிரான 57வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

இந்த ஆட்டத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றிருந்தால் அது மும்பை, குஜராத், பஞ்சாப் போன்ற அணிகளுக்கு சாதகமாக அமைந்திருக்கும். ஆனால் யாருமே எதிர்பாராத வகையில் சன்ரைசர்ஸ் அபார வெற்றி பெற்றது. நாணச்நுழற்சியில் வென்று முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த லக்னோ அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக பதோனி 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும், பூரன் 48 ஓட்டங்களையும் சேர்த்தனர். ஐதராபாத் அணி தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனை அடுத்து களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9.4 ஓவர்களில் எல்லாம் விக்கெட் இழப்பின்றி 167 ஓட்டங்கள் எட்டி புதிய உலக சாதனையை படைத்தது.

இந்த பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்ததால், லோ-ஸ்கோரிங் த்ரில்லராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐதராபாத் அணிக்காக தொடக்க வீரர்களாக களமிறங்கிய ட்ராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா இருவரும், அந்த சீனெல்லாம் இன்று கிடையாது என்பது போல் ருத்ர தாண்டவம் ஆடினர். கிருஷ்ணப்பா கவுதம் வீசிய முதல் ஓவரில் 8 ஓட்டங்கள் சேர்த்தனர்.

இதன்பின் யாஷ் தாக்கூர் வீசிய 2ஆவது ஓவரில் மட்டும் அபிஷேக் சர்மா 4 பவுண்டரிகளை விளாச, மறுபக்கம் ட்ராவிஸ் ஹெட் 3ஆவது ஓவரில் 3 சிக்ஸ், ஒரு பவுண்டரியை விளாசினார். இதனால் 4வது ஓவரை வீச ரவி பிஷ்னாய் அழைக்கப்பட்டார். இந்த ஓவரிலும் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடிக்கப்பட, நவீன் உல் ஹக் வீசிய 5வது ஓவரில் 4 பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸ் அடிக்கப்பட்டது.

இதன் காரணமாக அதிரடி வீரர் ட்ராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் எட்டினார். பின்னர் யாஷ் தாக்கூர் வீசிய 6ஆவது ஓவரில் 2 சிக்ஸ், 2 பவுண்டரியை அபிஷேக் சர்மா விளாசினார். இதனால் பவர் பிளே ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி விக்கெட் இழப்பின்றி 107 ஓட்டங்களை குவித்தது. இதனால் லக்னோ அணி வேறு வழியில்லாமல் பதோனியை பவுலிங் செய்ய அழைத்தது.

அந்த ஓவரில் சிக்ஸ் அடித்து அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடிக்க, அதன்பின் இருவரும் இணைந்து வான வேடிக்கையை நிகழ்த்தி கொண்டிருந்தனர். இதன் மூலம் 9.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 167 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. சிறப்பாக விளையாடிய ட்ராவிஸ் ஹெட் 30 பந்துகளில் 89 ஓட்டங்களையும், அபிஷேக் சர்மா 28 பந்துகளில் 75 ஓட்டங்களையும் விளாசினர்.

இதன் மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன் ரேட் கிடுகிடுவென உயர்ந்தது. தற்போது அந்த அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகள் உடன் ரன் ரேட் 0.40 என்ற அளவில் 3ஆவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்கள். இதனால் மூன்றாவது இடத்தில் இருந்த CSK அணி தற்போது 4ஆவது இடத்திற்கு சரிந்துள்ளது.

CSK அணி 11 போட்டிகளில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்வி என 12 புள்ளிகள் மற்றும் ரன் ரேட் 0.70 என்ற அளவில் இருக்கிறது. ஹைதராபாத் அணி வெற்றி பெற்றதன் மூலம் தற்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பிளே ஆப் கனவு பறிப்போகி இருக்கிறது.

மும்பை இந்தியன்ஸ் அணி 12 போட்டிகள் விளையாடி 4 வெற்றி, 8 தோல்வி என எட்டு புள்ளிகள் மற்றும் ரன் ரேட் மைனஸ் 0.21 என்ற அளவில் 9 ஆவது இடத்தில் உள்ளனர். இனி அவர்கள் எஞ்சிருக்கும் 2 போட்டிகளில் வென்றாலும் அதிகபட்சமாக அவர்களால் 12 புள்ளிகளையே பெற முடியும். ஏற்கனவே CSK, டெல்லி, லக்னோ 12 புள்ளிகளில் இருப்பதால் மும்பை அணி வெளியேறுவது உறுதியாகிவிட்டது.

இதே போல் குஜராத் அணி பிளே ஆப் சுற்றுக்கு வெல்ல வேண்டும் என்றால் எஞ்சியுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று மற்ற அணிகள் தோற்றால் மட்டுமே அவர்களால் பிளே ஆப் க்கு தகுதி பெற முடியும்.

இது போன்ற RCB அணிக்கு எதிரான ஆட்டத்தில் யார் தோல்வி அடைகிறார்களோ அவர்கள் தொடர்ந்து வெளியேறிவிடலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT