Monday, May 20, 2024
Home » IPL 2024 SRH vs LSG: கதற விட்ட இலங்கை தமிழன்; தவித்துப் போன லக்னோ

IPL 2024 SRH vs LSG: கதற விட்ட இலங்கை தமிழன்; தவித்துப் போன லக்னோ

- IPL தொடரில் களமிறங்கிய யாழ். இளைஞன்

by Prashahini
May 9, 2024 10:38 am 0 comment

2024 ஐபிஎல் தொடரின் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் (SRH) மற்றும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிகளுக்கிடையிலான நேற்றைய போட்டியில், சன்ரைசர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் யாழ் இளைஞன் விஜயகாந்த் வியாஸ்காந்த் (Vijayakanth Viyaskanth) களமிறங்கியுள்ளார்.

IPL தொடரில் இந்த சீசனிலிருந்து சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியிலிருந்து வனிந்து ஹசரங்க விலகுவதாக இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தது.

இந்த நிலையில், அந்த வெற்றிடத்திற்கு மாற்று வீரராக வியாஸ்காந்த் சன்ரைசர்ஸ் அணியால் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார்.

நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லக்னோ அணி முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. 200 ஓட்டங்களை எளிதாக எடுக்கலாம் என கூறப்பட்ட நிலையில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

அந்த அளவிற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு அபாரமாக இருந்தது. அந்த அணியில் இலங்கை தமிழரான விஜயகாந்த் வியாஸ்காந்த் சிறப்பாக பந்து வீசி இருந்தார். அவர் 4 ஓவர்களில் 27 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்தார். விக்கெட் வீழ்த்தாத நிலையிலும் அவர் குறைவாக ஓட்டங்களை விட்டுக் கொடுத்தது லக்னோ அணிக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தது. அவரது பந்துவீச்சில் கடைசி ஓவர்களில் மட்டுமே 3 பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

அவர் முதலில் வீசிய 2 ஓவர்களில் ஒரு பவுண்டரி கூட அடிக்க முடியாமல் லக்னோ அணியின் வீரர்கள் க்ருனால் பண்டியா மற்றும் கே. எல். ராகுல் தவித்தனர். இதை அடுத்து விஜயகாந்த் வியாஸ்காந்த் யார்? என பலரும் தேடி சமூக வலைதளங்களில் கேட்டும், பகிர்ந்தும் வருகின்றனர்.

அவர் இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர். அவர் துடுப்பாட்டமும் செய்யக் கூடியவர்.

எனவே ஆல் – ரவுண்டராக T20 போட்டிகளில் விளையாடி வருகிறார். இலங்கை தேசிய அணியில் அவருக்கு ஒரே ஒரு சர்வதேச T20 போட்டியில் ஆடும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது. அதை தவிர்த்து உலகம் முழுவதிலும் உள்ள T20 லீக் தொடர்களில் விளையாடி வருகிறார். மும்பை எமிரேட்ஸ் அணிக்காக இன்டர்நேஷனல் லீக் T20 தொடரிலும், சட்டோகிராம் அணிக்காக பங்களாதேஷ் பிரீமியர் லீக் தொடரிலும், Jaffna Kings அணிக்காக லங்கா பிரீமியர் லீக் தொடரிலும் அவர் விளையாடி இருக்கிறார்.

வியாஸ்காந்த் வெளியிட்ட மகிழ்ச்சி பதிவு!

தனக்கு ஆதரவளித்த அனைத்து ரசிகர்களுக்கும் வியாஸ்காந்த் நன்றி தெரிவித்துள்ளார்.

லக்னோ அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் விளையாடிய அவர், ஆட்டத்தின் முடிவில் தனது முகப்புத்தக பதிவில் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

தனது பதிவில் அவர், “என்னுடைய அனைத்து உறவுகளுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். இன்று என் வாழ்வில் மறக்க முடியாத நாள்.நீங்கள் அனைவரும் என் பக்கத்தில் நிற்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இந்த ஆதரவை நான் என்றும் மறக்க மாட்டேன். இந்த வாய்ப்பை வழங்கிய சன்றைசஸ் அணிக்கு எனது நன்றி. மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் எனது எல்லையற்ற நன்றியைத் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.” என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT