Monday, May 20, 2024
Home » சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

சட்டவிரோத ஆட்கடத்தலில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன

by Gayan Abeykoon
May 9, 2024 9:08 am 0 comment

சட்டவிரோதமாக இயங்கும்  முகவர் நிறுவனங்கள் மற்றும் சட்டவிரோதமான முறையில்   ஆட்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படுமென    பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற)  ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்தார்.

இலங்கையின் ஓய்வுபெற்ற படைவீரர்கள் பலர்,  கூலிப் படைவீரர்களாக ரஷ்ய – உக்ரைன் யுத்த முனைக்கு  சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டமை தமக்கு தெரியவந்துள்ளதாகத் தெரிவித்த அவர்,  இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கையில் சிக்கிக்கொள்ள வேண்டாமெனவும் இலங்கை படைவீரர்களை கேட்டுக்கொண்டார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பயங்கரவாதத்துக்கு எதிரான 30 வருடகால யுத்த நடவடிக்கையின் போது நாட்டை பாதுகாப்பதற்கு  தம்மை அர்ப்பணித்து சேவையாற்றி ஓய்வுபெற்ற எமது படைவீரர்கள் பலர், சில சட்டவிரோத வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்களின் மூலம் கூலிப்படை வீரர்கள் குழு உறுப்பினர்களாக   ரஷ்யா – உக்ரைன் யுத்த முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தெரியவந்துள்ளது. அத்துடன் அந்த யுத்த முனையில் எமது படைவீரர்கள் பலர் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்துள்ளமையும் எமக்கு தெரியவந்துள்ளது.

வெளிநாட்டு இராணுவத்தில் சேர வாய்ப்பு, சிறந்த சம்பளம், சில  நாடுகளில் குடியுரிமை வசதி மற்றும் ஏனைய சலுகைகளை  வழங்குவதாகக் கூறி ஆட்கடத்தல்காரர்களால் இவர்கள்  ஏமாற்றப்பட்டு,  கூலிப்படை வீரர்களாக இப்படைவீரர்கள் ரஷ்ய-உக்ரைன் யுத்த  முனைக்கு  அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இலங்கை படையில் மிகவும் கௌரவமாக பணியாற்றி  ஓய்வுபெற்ற எமது படைவீரர்கள், வெளிநாடுகளில் கூலிப்படை வீரர்களாக செயற்படுவது மிகவும் கவலைக்குரியதாகும்.

இந்நிலையில் ரஷ்ய – உக்ரைன் யுத்த  முனையிலுள்ள எமது படைவீரர்கள் மற்றும் அதில் உயிரிழந்தோர் தொடர்பான  உண்மையான தகவல்களை பெற்றுக்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சும் வெளிவிவகார  அமைச்சும் பாரிய முயற்சி எடுத்துள்ளது  என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT