Thursday, May 9, 2024
Home » 1st Test; SLvBAN: பங்களாதேஷ் 47/5; வெற்றியை நெருங்கியது இலங்கை அணி

1st Test; SLvBAN: பங்களாதேஷ் 47/5; வெற்றியை நெருங்கியது இலங்கை அணி

- தனஞ்சய - கமிந்து 2ஆவது இன்னிங்ஸிலும் சாதனை இணைப்பாட்டம்

by Rizwan Segu Mohideen
March 25, 2024 9:16 am 0 comment

– இன்று போட்டியின் நான்காவது நாள்

தனஞ்சய டி சில்வா மற்றும் கமிந்து மெண்டிஸ் இரண்டாவது இன்னிங்ஸிலும் பெற்ற சாதனை இணைப்பாட்டத்தின் மூலம் முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி பங்களாதேஷுக்கு 511 ஓட்ட வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.

சில்ஹட்டில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று (23) கடைசி நேரத்தில் வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி ஆட்டநேர முடிவின்போது 5 விக்கெட் இழப்புக்கு 47 ஓட்டங்களை பெற்று தடுமாற்றம் கண்டுள்ளது.

119 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே இலங்கை நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்தது. எனினும் மேலும் 7 ஓட்டங்களை பெறுவதற்குள் 6 ஆவது விக்கெட்டையும் பறிகொடுத்தது.

இந்நிலையில் ஏழாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த தனஞ்சய மற்றும் கமிந்து முதல் இன்னிங்ஸ் போன்றே எதிரணிக்கு தலையிடி கொடுத்தனர். இருவரும் இணைந்து 176 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டதோடு முதல் இன்னிங்ஸை போன்றே இருவரும் சதம் பெற்றனர்.

இதில் தனஞ்சய 179 பந்துகளில் 9 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 108 ஓட்டங்களை பெற்றதோடு கமிந்து 237 பந்துகளில் 16 பௌண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் 164 ஓட்டங்களை குவித்தார்.

முன்னதாக இருவரும் முதல் இன்னிங்ஸிலும் 6 ஆவது விக்கெட்டுக்கு 202 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150க்கும் மேல் இணைப்பாட்டத்தை பெறும் மூன்றாவது ஜோடியாக இருவரும் சாதனை படைத்தனர்.

இதற்கு முன்னர் 1938 ஆம் ஆண்டு இங்கிலாந்து ஜோடி ஒன்று இந்த சாதனையை படைத்திருப்பதோடு கடைசியாக 2015 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவின் டேவிட் வோனர் மற்றும் ஜோன் பர்ன்ஸ் இரண்டு இன்னிங்ஸ்களிலும் 150க்கும் மேல் இணைப்பாட்டத்தை பெற்றுள்ளனர்.

அதேபோன்று 2014 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை வீரர் ஒருவர் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றவர்களாக இந்த இருவரும் பதிவாகினர். கடைசியாக குமார் சங்கக்காரவே இதே பங்களாதேஷுக்கு எதிராக இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதம் பெற்றிருந்தனர்.

இதன்படி இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 110.4 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 418 ஓட்டங்களை பெற்றது.

ஏற்கனவே இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 280 ஓட்டங்களை பெற்று பங்களாதேஷ் அணியை முதல் இன்னிங்ஸில் 188 ஓட்டங்களுக்கு சுருட்டிய நிலையில் 92 ஓட்டங்களால் முன்னிலை பெற்றே தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்திருந்தது.

தனஞ்சய, கமிந்து தவிர ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன 101 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றிருந்தார். பங்களாதேஷ் சார்பில் மஹதி ஹசன் மிராஸ் 4 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இந்நிலையில் சவாலான வெற்றி இலக்குடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி விஷ்வ பெர்னாண்டோ வீசிய முதல் ஓவரிலேயே மஹ்மூதுல்லா ஹசன் ஜோவின் விக்கெட்டை பறிகொடுத்தது. தொடர்ந்து அணித் தலைவர் நஜ்முல் ஹொஸைன் ஷான்டோ 6 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து சாக்கிர் ஹசன் (19), ஷஹதாத் ஹொஸைன் (0) மற்றும் லிட்டோன் தாஸ் (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி மூன்றாம் நாள் அட்ட நேர முடிவின்போது 13 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 47 ஓட்டங்களை பெற்றுள்ளது. விஷ்வ பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

இதன்படி பங்களாதேஷ் அணி வெற்றிக்கு இன்னும் 464 ஓட்டங்களை பெற வேண்டிய நிலையில் இலங்கை அணி இன்னும் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினால் போதுமானது.

இன்று (25) போட்டியின் நான்காவது நாளாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT