Thursday, May 9, 2024
Home » 133 பேர் கொல்லப்பட்ட மொஸ்கோ தாக்குதலின் ‘நால்வரும்’ சிக்கினர்

133 பேர் கொல்லப்பட்ட மொஸ்கோ தாக்குதலின் ‘நால்வரும்’ சிக்கினர்

by Rizwan Segu Mohideen
March 25, 2024 8:35 am 0 comment

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவில் மக்கள் நிரம்பிய இசை நிகழ்ச்சி மண்டபம் ஒன்றில் தாக்குதல் நடத்திய நான்கு துப்பாக்கிதாரிகளும் கைது செய்யப்பட்டதாக அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார்.

அந்தக் கட்டடத்திற்குள் நுழைந்த துப்பாக்கிதாரிகள் கண்மூடித்தனமாக சூடு நடத்தி இருப்பதோடு அந்த வளாகத்திற்கு தீ வைத்த நிலையில் குறைந்தது 133 பேர் கொல்லப்பட்டிருப்பதோடு மேலும் 140 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.

மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டதாகவும் நான்கு துப்பாக்கிதாரிகள் உக்ரைனை நோக்கி செல்லும் வழியில் பிடிபட்டதாகவும் ரஷ்ய நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்.) குழு பொறுப்பேற்றுள்ளது. தாக்குதல்களில் தொடர்புபட்டவர்கள் என முகமூடி அணிந்த நால்வரின புகைப்படத்தை ஐ.எஸ். டெலிகிராம் பக்கத்தில் கடந்த சனிக்கிழமை (23) வெளியிட்டிருந்தது. பின்னர் தாக்குதலின்போது எடுக்கப்பட்ட காட்சிகளையும் அந்தக் குழு வெளியிட்டது. இதில் துப்பாக்கிதாரி ஒருவர் பலர் மீது சூடு நடத்துவது பதிவாகியுள்ளது. இந்நிலையில் தொலைக்காட்சி உரை ஒன்றில் இந்தப் படுகொலையை கண்டித்த புட்டின், ‘காட்டுமிராண்டித்தனமான பயங்கரவாத செயல்’ என்று வர்ணித்தார். தாக்குதல்தாரிகள் உக்ரைனுக்கு தப்பிச் செல்ல முயன்றதாக பாதுகாப்பு தரப்பினர் முன்னர் குறிப்பிட்டதை அவர் மீண்டும் ஒருமுறை சுட்டிக்காட்டி இருந்தார். எனினும் இந்தத் தாக்குதலில் ஏதோ ஒரு வகையில் தொடர்புபட்டிருப்பதாக கூறும் குற்றச்சாட்டை அபத்தமானது என்று உக்ரைன் நிராகரித்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இரவு அந்த இசை மண்டபத்தில் தாக்குதல் இடம்பெறும்போது அங்கு 6,200 பேர் வரை இருந்துள்ளனர்.

அப்போது அங்குள்ள மக்கள் அச்சத்தில் சிதறி ஓட ஆரம்பித்துள்ளனர். தாக்குதல்தாரிகள் பெட்ரோல் குண்டுகளை வீசியதை அடுத்து அந்த மண்பத்தில் தீ பரவ ஆரம்பித்ததாக பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

ஜனாதிபதி புட்டின் நேற்று தேசிய துக்க தினத்தை அறிவித்ததோடு பொது நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்துச் செய்யப்பட்டன.

இந்த ‘கொடூரமான’ தாக்குதலை கண்டித்த வெள்ளை மாளிகை, இஸ்லாமிய அரசு ஒரு பொதுவான பயங்கரவாத எதிரி என்றும் அனைத்து இடங்களிலும் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT