Friday, May 10, 2024
Home » உலகம் கண்டிராத மிகப்பெரிய தேர்தலாக இந்திய தேர்தல் அமையும்

உலகம் கண்டிராத மிகப்பெரிய தேர்தலாக இந்திய தேர்தல் அமையும்

by Rizwan Segu Mohideen
March 25, 2024 12:26 pm 0 comment

உலகம் இதுவரை கண்டிராத மிகப் பெரிய தேர்தல் செயற்பாடாக இந்தியாவின் 18 ஆவது தேசியத் தேர்தல் அமையும் என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவின் சியோலில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான மூன்றாவது உச்சிமாநாட்டில் இந்திய அரசின் சார்பாக கருத்து வெளியிட்ட ஜெய்சங்கர், “எதிர்கால தலைமுறைகளுக்கான ஜனநாயகம்” என்ற கருப்பொருள் இந்தியாவின் எல்லைக்குள் மட்டுமன்றி அதற்கு அப்பாலும் எதிரொலிக்கிறது என்றார்.

968 மில்லியன் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள், 15 மில்லியன் தேர்தல் அதிகாரிகள் மற்றும் 1.2 மில்லியன் வாக்குச் சாவடிகளுடன், நடைபெறவிருக்கும் 18வது இந்திய தேசியத் தேர்தலானது இந்த உலகம் கண்டிராத மிகப்பெரிய தேர்தல் செயற்பாடு ” என்று வெளியுறவு அமைச்சர் கூறினார்.

ஒரு வெளிப்படையான ஜனநாயக செயல்முறையின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் அறிமுகம், வெளிப்படைத்தன்மை, செயல்திறன் மற்றும் ஜனநாயக செயல்முறையின் புனிதத்தன்மை என்பன நாட்டின் அர்ப்பணிப்புக்கு சான்றாக இருப்பதாக சுட்டிக்காட்டினார்.

சுதந்திரமான, நியாயமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய தேர்தல்களை நடத்துவதில் இந்தியா அர்ப்பணிப்புடன் உள்ளது. ஒவ்வொரு குடிமகனின் குரலும் முக்கியமானது.

அவர் மேலும் கூறுகையில், யாரையும் ஒதுக்காமல், அனைவரும் தேர்தல் செயற்பாடுகளில் முழுமையாக பங்கேற்க வேண்டும் என்பதே குறிக்கோள் என்றும் தெரிவித்தார்.

“உண்மையில் இது ஜனநாயகத்தின் கொண்டாட்டம் என்றாலும், இந்த மாபெரும் செயற்பாடானது நகர்ப்புறங்கள், தொலைதூர கிராமங்கள் மற்றும் சவாலான புவியியல் நிலப்பரப்புகளின் வழியாக சென்று நமது மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தேர்தல் செயல்பாட்டில் முழுமையாக பங்கேற்க வழிவகை செய்யும் நடவடிக்கைகளை உள்ளடக்கியது. ”என்று அவர் கூறினார்.

இன்று, இந்தியாவில் 1.4 மில்லியன் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகள் உள்ளனர், இது உலகின் எந்த நாட்டிலும் அடிமட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் பிரதிநிதிகளின் மிகப்பெரிய எண்ணிக்கையைக் குறிக்கிறது.

“பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை நீட்டிப்பதற்கான எங்கள் சமீபத்திய முடிவு, தேசத்தின் தலைவிதியை வடிவமைப்பதில் பெண்களின் குரல் இன்றியமையாதது என்ற அடிப்படைக் கொள்கையை அங்கீகரிக்கிறது,” என்று அவர் கூறினார்.

இந்தியாவின் பண்டைய நாகரிகமானது, ஆழமான தத்துவ மரபுகள் மற்றும் தனிமனித சுதந்திரத்திற்கான ஆழ்ந்த மரியாதை ஆகியவற்றால் போசிக்கப்பட்டது, இன்று அது போற்றும் ஜனநாயக கொள்கைகளுக்கு அடித்தளம் அமைத்தது.

சுதந்திரத்திற்குப் பின்னரான சகாப்தத்தை நோக்கி தனது கவனத்தைத் திருப்பிய ஜெய்சங்கர், “இந்தியாவின் அரசியலமைப்பை உருவாக்கியவர்கள், ஜனநாயக சிந்தனையின் வளமான பாரம்பரியத்தால் ஈர்க்கப்பட்டு, இன்றைய உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்திற்கு வழிகாட்டும் ஒளியாக செயல்படும் ஒரு ஆவணத்தை உன்னிப்பாக வடிவமைத்துள்ளனர்.” என்று தெரிவித்தார்.

நவீன உலகின் சிக்கலான தன்மையில் இந்தியா பயணிக்கும்போது, ஒவ்வொரு தனிநபரின் உள்ளார்ந்த மதிப்பு மற்றும் கண்ணியத்தை அங்கீகரிக்கும் ஒரு பாரம்பரியத்திலிருந்து வலிமையைப் பெறுகிறது, இது ஜனநாயகத்தின் சாரத்தை பிரதிபலிக்கிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒரு பில்லியனுக்கும் அதிகமான மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் ஜனநாயகத்தின் சக்தியை இந்தியா கண்டுள்ளது.

“பொறுப்பான குடிமக்களாகவும், நாடுகளாகவும், ஜனநாயகத்தின் ஜோதியை பிரகாசமாக எரியும் தலைமுறைகளுக்கு அனுப்ப முயற்சிப்போம்” என்று ஜெய்சங்கர் இங்கு கூறினார்.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் முன்முயற்சியான ஜனநாயகத்திற்கான உச்சி மாநாடு தென் கொரியாவால் இந்த ஆண்டு மார்ச் 18-20 வரை நடைபெற்றது. அரசாங்க அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்களும் இதில் பங்கேற்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT