Friday, May 10, 2024
Home » சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்து மீட்சியை உறுதி செய்த அமானா வங்கி

சிறந்த நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்து மீட்சியை உறுதி செய்த அமானா வங்கி

by Rizwan Segu Mohideen
March 1, 2024 3:16 pm 0 comment
  • வரிக்கு முந்திய இலாபம் 92% இனால் அதிகரித்து ரூ. 2.3 பில்லியனாகவும்; வரிக்கு பிந்திய இலாபம் 76% இனால் அதிகரித்து ரூ. 1.4 பில்லியனாகவும் பதிவு

சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலிலும் அமானா வங்கி இதுவரையில் பதிவு செய்திருந்த உறுதியான நிதிப் பெறுபேறுகளை 2023 ஆம் ஆண்டில் எய்தியிருந்தது. அதனூடாக, வங்கியின் உறுதித் தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மீட்சி மற்றும் அதிகரித்துச் செல்லும் ஏற்றுக் கொள்ளல் போன்றன உறுதி செய்யப்பட்டுள்ளன. வங்கியின் மீளாய்வுக்குட்படுத்தப்பட்ட வரிக்கு முந்திய இலாபம் சுமார் இரண்டு மடங்காக அதிகரித்து ரூ. 2.3 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2022 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 1.2 பில்லியனிலிருந்து சுமார் 92% வருடாந்த அதிகரிப்பை பெற்றிருந்தது. 2023 ஆம் ஆண்டுக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 1 பில்லியன் எனும் பெறுமதியை கடந்து ரூ. 1.4 பில்லியனாக பதிவாகியிருந்தது. 2022 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 0.8 பில்லியனாக காணப்பட்டதுடன், இது சுமார் 76% வருடாந்த அதிகரிப்பாகும்.

பிரதான வியாபாரத்தில் உறுதியான வளர்ச்சியுடன், வங்கியின் நிதிசார் வருமானம் ரூ. 17.2 பில்லியனாக உயர்ந்திருந்தது. முன்னைய ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 12.1 பில்லியனாக காணப்பட்டதுடன், இது சுமார் 42% அதிகரிப்பாகும். ஆரோக்கியமான நிதியளிப்பு எல்லைப் பெறுமதியான 4.3% ஐ வங்கி பேணியிருந்ததுடன், தேசிய நிதியளிப்பு வருமானமாக ரூ. 6.5 பில்லியனை வங்கி பதிவு செய்திருந்தது. 2022 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 4.8 பில்லியனாக காணப்பட்டதுடன், இது சுமார் 36% அதிகரிப்பாகும்.

கட்டண அடிப்படையிலான வருமானமும் 24% வளர்ச்சியை பதிவு செய்து ரூ. 931 மில்லியனாக பதிவாகியிருந்தது. இதில், எமது பெறுமதி வாய்ந்த வியாபார வங்கியியல் வாடிக்கையாளர்களால் உருவாக்கப்பட்ட வர்த்தகங்கள், டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல்களில் அதிகரிப்பு மற்றும் இதர பெறுமதி சேர் சேவைகள் போன்றன பங்களிப்பு வழங்கியிருந்தன. உயர் தேறிய வர்த்தக வருமானம் மற்றும் இதர வருமதிகளின் பங்களிப்புடன், வங்கியின் மொத்த தொழிற்பாட்டு வருமானம் ரூ. 9.2 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2022 ஆம் ஆண்டில் இந்தப் பெறுமதி ரூ. 6.4 பில்லியனாக காணப்பட்டதுடன், இது சுமார் 45% வளர்ச்சியாகும்.

சந்தை சூழ்நிலைகள், வங்கியின் முற்கொடுப்பனவு பிரிவு மற்றும் உயர் கடன் இருப்புகளை சீராக பேணுவதற்கான தேவை போன்றவற்றை கவனத்தில் கொண்டு ஆண்டின் மதிப்பிறக்க கட்டணங்கள் ரூ. 2.1 பில்லியனாக உயர்ந்திருந்தது. 2022 ஆம் ஆண்டில் ரூ. 1.6 பில்லியனாக காணப்பட்டது. இது 29% அதிகரிப்பாகும். மதிப்பிறக்க கட்டணங்களில் அதிகரிப்பு காணப்பட்ட போதிலும், தேறிய தொழிற்பாட்டு வருமானம் குறிப்பிடத்தக்க வகையில் முன்னைய ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 4.7 பில்லியனிலிருந்து 50% அதிகரித்து ரூ. 7.1 பில்லியனாக உயர்ந்திருந்தது.

பணவீக்க அழுத்தம் நிலவிய போதிலும் வருமானத்துக்கான செலவு விகிதத்தை 42% எனும் மேம்பட்ட ஆரோக்கியமான நிலையில் பேணி, நிதிச் சேவைகள் மீதான பெறுமதி சேர் வரி மற்றும் சமூக பாதுகாப்பு வரிக்கு முன்னதான தொழிற்படு இலாபத்தை ரூ. 3.2 பில்லியனாக பதிவு செய்திருந்தது. முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 85% அதிகரிப்பாகும். வங்கியின் திரண்ட வரிப் பங்களிப்பான ரூ. 1.8 பில்லியன் என்பது, வங்கியின் வரிக்கு முன்னதான தொழிற்படு இலாபத்தின் 57% ஆக காணப்பட்டது.

ஒட்டுமொத்த வங்கியியல் தொழிற்துறை எதிர்மறையான கடன் வளர்ச்சியை பதிவு செய்திருந்த போதிலும், உயர்நிலை கூட்டாண்மைகளின் மீது தமது கவனத்தை திசை திருப்பியிருந்ததனூடாக, நேர்த்தியான வளர்ச்சிக்கு அமானா வங்கி மாறியிருந்தது. இதன் பெறுபேறாக, முற்பணங்களில் 8% வளர்ச்சியை பதிவு செய்திருந்ததுடன், 2022 ஆம் ஆண்டில் பதிவாகியிருந்த ரூ. 83.2 பில்லியனுடன் ஒப்பிடுகையில் ரூ. 89.7 பில்லியனை எய்தியிருந்தது. வங்கியின் வினைத்திறனான இடர் முகாமைத்துவ கட்டமைப்பு மற்றும் உரிய காலப்பகுதியில் வாடிக்கையாளர் ஈடுபாடு போன்றவற்றுடன், மக்களுக்கு நட்பான மற்றும் அபிவிருத்தியில் கவனம் செலுத்திய வழிமுறை ஆகியவற்றுடன் தொழிற்துறையின் மிகவும் குறைந்த நிலை 3 மதிப்பிறக்க நிதியளிப்பு 1.5% விகிதத்தை கொண்டிருந்தது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகளின் பிரத்தியேகமான நிலைகளை புரிந்து கொண்டு, வங்கி தொடர்ந்தும் உதவிகளையும், ஆலோசனை சேவைகளையும் வழங்கியிருந்ததுடன், அதனூடாக தமது திரள்வு நிலையை மேம்படுத்தியதுடன், தமது வியாபார தொடர்ச்சி நிலை, நிதிசார் மீட்சி மற்றும் மீட்பு முயற்சிகள் போன்றவற்றை கடினமான காலப்பகுதியிலும் தொடர்வதற்கு உதவியிருந்தது.

மேலும், சந்தையில் நிதிக்கு கடுமையான போட்டி மற்றும் நெருக்கமான சந்தை திரள்வு சூழல்கள் போன்றவற்றிலும், உறுதியான வாடிக்கையாளர் நம்பிக்கை மற்றும் வங்கியின் பெறுமதி சேவைகளுக்கான அதிகரித்துச் செல்லும் கேள்வி, வைப்பு பரவலாக்க செயற்பாடுகள் போன்றவற்றில் அதிகளவு ஈடுபாடு பதிவாகியிருந்தது. அதன் பெறுபேறாக, வங்கியின் வைப்பு பிரிவு 18% இனால் அதிகரித்து ரூ. 132.9 பில்லியனாக பதிவாகியிருந்தது. தொழிற்துறையில் உயர் CASA விகிதமான 40% ஐயும் பேணியிருந்தது.

தனது தூர நோக்குடைய வளர்ச்சித் திட்டங்களுக்கு வலுவூட்டும் வகையில், நான்காம் காலாண்டில் உரிமைப் பங்கு வழங்கலினூடாக ரூ.6 பில்லியனை வங்கி வெற்றிகரமாக திரட்டியிருந்தது. ஏற்கனவே காணப்படும் பங்குதாரர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்களிடமிருந்து பரந்தளவு பங்கேற்பை இது பெற்றுக் கொண்டது. இதில் புகழ்பெற்ற வெளிநாட்டு, கூட்டாண்மை மற்றும் உயர் பெறுமதி வாய்ந்த தனிநபர்கள் என பலரும் அடங்கியிருந்தனர். உரிமைப் பங்கு வழங்கலினூடாக, வங்கித் துறையில் பிந்திய ஒழுங்குபடுத்தல் வழிகாட்டுதல்களின் பிரகாரம், மேம்படுத்தப்பட்ட ஆகக்குறைந்த மூலதன தேவைப்பாட்டை பூர்த்தி செய்வதற்கு வங்கிக்கு உதவியிருந்தது.

ரூ. 150 பில்லியன் எனும் பெறுமதியை கடந்து வங்கியின் மொத்த சொத்துக்களின் பெறுமதி ரூ. 17.8 பில்லியனினால் உயர்ந்திருந்தது. 2022 ஆம் ஆண்டில் ரூ. 141.7 பில்லியனாக காணப்பட்ட இந்தப் பெறுமதி 13% வருடாந்த அதிகரிப்பை பதிவு செய்து ரூ. 159.5 பில்லியன் எனும் உறுதியான பெறுமதியை பதிவு செய்திருந்தது.

2023 ஆம் ஆண்டில் உறுதியான நிதிப் பெறுபேறுகளை பதிவு செய்திருந்த நிலையில், ஆண்டின் பிற்பகுதியில் ரூ. 6 பில்லியன் மூலதன உள்ளீடு மேற்கொள்ளப்பட்ட போதிலும், அமானா வங்கியின் ROE பெறுமதி 5.6% இலிருந்து 7.7% ஆக வளர்ச்சியடைந்திருந்தது. 2023 டிசம்பர் 31 ஆம் திகதியன்று, அமானா வங்கியின் பொது பங்கு நிலை 1 மற்றும் மொத்த மூலதன விகிதங்கள் முறையே 16.5% மற்றும் 19.3% ஆக ஆகக்குறைந்த ஒழுங்குபடுத்தல் தேவைப்பாடான முறையே 7% மற்றும் 12.5% ஐ விட உயர்வாக காணப்பட்டன.

வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் அமானா வங்கியின் தவிசாளர் அஸ்கி அக்பரலி கருத்துத் தெரிவிக்கையில், “பெருமளவு சவால்களுக்கு மத்தியில் தனது மீட்சி மற்றும் இயங்கும் திறனை உறுதி செய்து, 2023 ஆம் ஆண்டை அமானா வங்கி, வரலாற்றில் பதிவாகிய சிறந்த நிதிப் பெறுபேறுகள் அடங்கலாக பல வரலாற்று சாதனைகளுடன் நிறைவு செய்துள்ளதையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். எமது மக்களுக்கு நட்பான மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்ட வங்கியியல் வழிமுறைக்கான ஏற்றுக் கொள்ளல் அதிகரித்துச் செல்வதை இந்த சாதனைகள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன், எமது பங்காளர்கள் எம்மீது கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்துகின்றது. எனது சக பணிப்பாளர்கள், நிர்வாகத்தார் மற்றும் ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள், பங்காளர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். வளர்ந்து வரும் இந்த தொழிற்துறைக்கு நாம் தலைமைத்துவமளிக்கும் நிலையில், எதிர்காலத்தை உறுதியாக எதிர்கொள்வதற்கு அமானா வங்கி தயாராகவுள்ளது.” என்றார்.

வங்கியின் நிதிப் பெறுபேறுகள் தொடர்பில் அமானா வங்கியின் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மொஹமட் அஸ்மீர் கருத்துத் தெரிவிக்கையில், “2023 என்பது அமானா வங்கிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகும். சவால்கள் நிறைந்த பொருளாதாரச் சூழலில், வங்கியின் மீட்சி மற்றும் பங்காளர்களின் நம்பிக்கையை வெளிப்படுத்தியிருந்த எமது புதிய மூலதன உள்ளீட்டுடனான தூர நோக்குடைய வளர்ச்சித் திட்டங்களுடன் வங்கியின் அடிப்படைகள் வலுவூட்டப்பட்டதுடன், சிறந்த செயற்பாடுகளையும் பதிவு செய்ய முடிந்திருந்தது. சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள், கூட்டாண்மை மற்றும் சில்லறைத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு தமது தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கும், பொருளாதாரத்துக்கு பெறுமதி சேர்ப்பதிலும் வங்கி தொடர்ச்சியாக காண்பித்திருந்த ஆதரவின் காரணமாக இந்த வினைத்திறனை எய்த முடிந்தது. எமது தவிசாளர், பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள், நிர்வாகத்தினர், ஊழியர்கள், பங்குதாரர்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் பெறுமதி வாய்ந்த பங்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். மேம்படுத்தப்பட்ட மூலதன இருப்புடன், அமானா வங்கி வளர்ச்சியை நோக்கிய துரித பயணத்தை மேற்கொள்வதற்கு தயார் நிலையில் இருப்பதுடன், எமது வியாபார விரிவாக்கங்கள், டிஜிட்டல் பிரசன்னம் மற்றும் நிலைபேறான வங்கிச் செயற்பாடுகள் போன்றவற்றில் முதலீடுகளை மேற்கொள்வதற்கும் திட்டமிட்டுள்ளோம்.” என்றார்.

இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 50 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக தரப்படுத்தப்பட்டிருந்ததுடன், 2023 ஆம் ஆண்டில் 37ஆம் ஸ்தானத்தில் ஏசியன் பாங்கர் தரப்படுத்தி கௌரவித்துள்ளது.

அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT