Wednesday, May 1, 2024
Home » தினகரன் குடும்பத்தில் இருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

தினகரன் குடும்பத்தில் இருவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

by gayan
December 12, 2023 6:54 am 0 comment

தினகரன் பத்திரிகைக்கு பல தசாப்த காலமாக பெரும் பங்களிப்பு நல்கி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் இருவர் இன்று சிறப்பு உயர்விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

லேக் ஹவுஸ் நிறுவனத்தின் தமிழ்ப் பத்திரிகைகளின் ஆலோசகராகப் பணியாற்றிய எம்.ஏ.எம். நிலாம், தினகரன் பத்திரிகையின் கரவெட்டி பிரதேச ஊடகவியலாளராகக் கடமையாற்றி வருகின்ற எஸ். தில்லைநாதன் ஆகியோர் இன்று ஊடகத்துறைக்கான வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கௌரவிக்கப்படுகின்றனர்.

இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஊடகவியலாளர்களுக்கான அதியுயர் விருது வழங்கும் விழா_2022 இன்று செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணிக்கு கல்கிசையிலுள்ள மவுண்ட்லவினியா ஹோட்டலில் நடைபெறவிருக்கின்றது. இவ்விழாவில் சிறந்த ஊடகவியலாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.

இவ்விருதுகளில் வாழ்நாள் முழுவதும் ஊடகத்துறைக்கு பெரும் பணியாற்றிய சிரேஷ் ஊடகவியலாளர்கள் ஐந்து பேருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கப்படுகின்றது. ஊடகவியலாளர்களுக்கு உயர்விருதுகள் வழங்கும் இந்த வருடாந்த விழா இம்முறை 24 ஆவது தடவையாக நடைபெறுகின்றது. இன்றைய விழாவில் ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ வழங்கி கௌரவிக்கப்படுகின்ற ஐந்து சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் இருவர் தினகரன் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இருவரில் ஒருவரான யாழ் கரவெட்டியைச் சேர்ந்த எஸ். தில்லைநாதன் தமிழ் ஊடகத்துறையில் பிரபல்யம் மிக்க ஒருவராவார். தினகரன் பத்திரிகையில் பல தசாப்த காலமாக அவர் பிரதேச ஊடகவியலாளராகப் பணியாற்றி வருகின்றார். செய்தி மற்றும் கட்டுரைகள் வாயிலாக தினகரனுடன் எக்காலத்திலும் மிக நெருக்கமாகவிருந்து பங்களிப்பு செய்து வருகின்ற தில்லைநாதன், பல்வேறு ஊடகங்களுக்கும் ஆக்கங்களை எழுதி வருபவராவார். அவர் பல்வேறு சிறப்பு விருதுகளைப் பெற்ற ஒருவராவார்.

அது மாத்திரமன்றி மூத்த ஊடகவியலாளரான தில்லைநாதன், தமிழ்மொழியில் பணியாற்றும் ஏனைய கனிஷ்ட ஊடகவியலாளர்களுக்கு ஆலோசனை வழங்கக் கூடிய ஊடக ஆசானாகவும் இருந்து வருகின்றார். ஊடக அமைப்புகளில் அங்கம் வகித்து ஊடகவியலாளர்களுக்கான உரிமைகளுக்கு பாடுபடும் ஒருவராகவும் அவர் உள்ளார். அதன் காரணமாக ஊடகத்துறையில் ஏராளமான நண்பர்கள் அவருக்கு உள்ளனரென்பது குறிப்பிடத்தக்கது. தினகரன் பத்திரிகைக்கு அவர் பன்னெடும் காலமாக பங்களிப்பு செய்து வருகின்றார். அவ்வப்போது சிறந்த ஆலோசனைகளையும் அவர் வழங்கி வருகின்றார்.

வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுகின்ற எம்.ஏ.எம். நிலாம் தமிழ் ஊடகப் பரப்பில் மிகப் பிரபல்யம் வாய்ந்தவராவார். தினகரனின் பிரதம ஆசிரியராக அமரர் ஆர். சிவகுருநாதன் நீண்ட காலமாகப் பணியாற்றிய காலத்தில் அவருடன் நெருங்கிய நட்புறவைப் பேணி ஆக்கங்கள் வாயிலாக பங்களிப்பு வழங்கி வந்தவர் நிலாம்.

ஆரம்ப காலத்தில் சிறுகதை எழுத்தாளராகவும், கவிஞராகவும் தினகரனில் தடம் பதித்தவர் நிலாம். தினகரன் பத்திரிகையில் அவர் ஏராளமான ஆக்கங்களைப் படைத்துள்ளார். அவர் தினகரன் குடும்பத்தில் ஒருவராக தன்னை எப்போதும் அடையாளப்படுத்தி வந்துள்ளார். அவர் பல்வேறு சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளார்.

இலங்கையின் பல்வேறு ஊடகங்களிலும் பணியாற்றிய அனுபவம் கொண்ட எம்.ஏ.எம். நிலாம், லேக்ஹவுஸ் தமிழ் வெளியீடுகளின் ஆலோசகராகவும் பணியாற்றியவராவார். இலங்கையின் தமிழ், முஸ்லிம் பத்திரிகையாளர்களுடன் மாத்திரமன்றி சிங்களப் பத்திரிகையாளர்களுடனும் நெருக்கம் பேணி வருபவர் நிலாம். பத்திரிகையாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்து வருபவர் அவர்.

தினகரன் குடும்பத்தைச் சேர்ந்த எஸ். தில்லைநாதன், எம்.ஏ.எம்.நிலாம் ஆகிய இருவரும் வாழ்நாள் சாதனையாளர் விருது பெறுவதையிட்டு தினகரன் பத்திரிகை அவ்விருவரையும் வாழ்த்துவதுடன், பெருமிதமும் கொள்கின்றது.

எஸ்.பி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT