Home » பக்தர்களைக் காத்தருளும் தெமட்டகொடை செந்தில்குமரன்

பக்தர்களைக் காத்தருளும் தெமட்டகொடை செந்தில்குமரன்

வேல் வடிவில் ஆரம்பமான வழிபாட்டுத்தலம் இன்று பிரமாண்டமான ஆலயம்

by gayan
December 9, 2023 6:35 am 0 comment

சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு, தெமட்டகொடை, ஆராமயா வீதியில் ‘கீரைத் தோட்டம்’ என்று பெயர் பெற்ற இடத்திலே குறைந்த வருமானம் கொண்ட கூலிவேலை செய்யும் குடும்பங்கள் பல இருந்தன. பெட்டி வீடுகளும், பலகை வீடுகளுமாக இருந்த இந்த கீரைத் தோட்டத்து மக்கள் தங்களின் ஏழ்மை மிகுந்த வாழ்க்கையிலும் இறைநம்பிக்கையோடு வாழ்ந்தார்கள்.

தமிழ்த் தெய்வமாம் முருகனை, ஒரு அழகான வேல் வடிவில் தோட்டப்பகுதியிலே ஒரு சிறிய இடத்திலே ஊன்றி வைத்து வழிபட்டு வந்தார்கள். ‘வீரவேல், வெற்றிவேல், ஞானவேல்’ என்று நாமங்களை கூறி ‘இவ்வேல் எங்களைக் காக்கட்டும்’ என்று அனுதினமும் வேண்டி தங்கள் கூலித்தொழிலைக் கவனித்து வந்தார்கள்.

கி.பி. 1977 – 1980 ஆம் ஆண்டுகளில் தேசமான்ய ஜெ.எல்.பி. கொத்தலாவல அவர்கள் ‘தி ஃபைனான்ஸ் கம்பெனி’ யின் தலைவராக பதவியேற்றிருந்த காலத்தில் இலங்கையிலேயே முதன் முதலாக ‘ரியல் எஸ்டேட்’ வியாபாரத்தில் காலடி எடுத்து வைத்தவர்கள் தி ஃபைனான்ஸ் கம்பெனி’ சொந்தக்காரர்களான கொத்தலாவல குடும்பத்தினர். அவர்கள் முதன்முதலாக தொழில் தொடங்கிய இடம் தெமட்டகொடையில் உள்ள ஆராமைய சாலை என்று குறிப்பிடப்படுகிறது.

தொழில் தொடங்கி வீடுகள் கட்டப்பட்டன. அவ்வீடுகளுக்கு எதிர்பார்த்த அளவு மக்களிடம் வரவேற்பு இருக்கவில்லை. வீடுகள் விற்கப்படாமல் இருந்த இந்நிலையின் காரணத்தை கம்பெனி ஆராய்ந்து பார்க்க வேண்டியிருந்தது. தலைவர் லலித் கொத்தலாவல அப்பகுதி வாழ் மக்களை, அழைத்துப் பேசினார். அவர் வாங்கி விற்பனைக்குத் தயார் செய்திருக்கும் நிலத்தின் ஒரு சிறிய பகுதியில் அன்பர்கள் சிலர் திருமுருகனை வேல் வடிவில் வைத்து வழிபட்டு வந்ததாகவும், இதைக் கவனியாது அந்நிலத்தையும் சேர்த்து விற்பனைக்கு அறிவித்திருப்பதாகவும் அப்போதுதான் அவருக்குத் தெரியவந்தது.

இறைபக்திமேலிட, லலித் கொத்தலாவல அவர்கள் தோட்டத்து முருகன் அடியவர்களிடம் மன்னிப்புக் கோரியது மட்டுமல்லாமல், அந்த சிறிய இடத்தை மக்களுக்கே அதாவது முருகனுக்கே அர்ப்பணித்து விட வேண்டும் என்றும் முடிவெடுத்தார். தன் வாக்கின்படி கொட்டகையாய் இருந்து வேல் தாங்கி நின்ற பூமியை மட்டுமல்லாது, அதைச் சுற்றிலுமுள்ள நிலத்தையும் உடனடியாக முருகனின் வழிப்பாட்டுத்தலமாக அறிவித்து, கீரைத்தோட்ட மக்களின் ஸ்ரீ செந்தில் குமரன் திருக்கோவிலை பாதுகாத்து அவர்களிடமே கையளித்தார்.

மக்கள் ஒன்றுகூடி அந்த இடத்தில் சிறிய கோவில் ஒன்று கட்டி முறையாக வழிபாடு செய்யத் தொடங்கினர். தேசமான்ய லலித் கொத்தலாவல ஸ்ரீ செந்தில் குமரன் திருக்கோவில் அறக்கட்டளையையும் உருவாக்கினார். அவரையே தலைமை அறங்காவலர் நியமித்தனர். ‘தி ஃபைனான்ஸ் கம்பெனி’ யின் இயக்குனர்கள் சிலர் மற்றும் அப்பகுதி மக்களால் பரிந்துரைக்கப்பட்ட ஆறு பேர் கொண்ட அறங்காவலர் குழு முருகன் கோவிலை பரிபாலிக்க ஆரம்பித்தது. காலப்போக்கில் நிர்வாக அறங்காவலர்கள் சிலர் மாறினாலும் கோவில் நேர்த்தியாக பராமரிக்கப்பட்டு வந்தது. இறைவன் திருவடிகளைத் தொழுவதே தான் கற்ற கல்வியின் பயன் என்று வாழ்ந்த தேசமான்ய லலித் கொத்தலாவல அவர்களுக்கு நன்றி கூறும் முகமாக 29-.10-.2023 அன்று ஸ்ரீ செந்தில் குமரன் திருக்கோவிலில் விசேட வழிபாடு நடத்தப்பட்டு அவரது ஆன்ம முத்தியடைய வேண்டுமென்ற பிரார்த்தனை செய்யப்பட்டது.

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு கோவில்குழுவின் வேண்டுகோளை ஏற்று ஈஸ்வரன் (ஈஸ்வரன் பிரதர்ஸ் கம்பனி) அவர்கள் இக்கோவிலின் தலைமை அறங்காவலர் பொறுப்பை ஏற்றார். மறைந்த தேசபந்து ஈஸ்வரன் அவர்கள் ஆன்மீக சமூகப் பணிகளைச் செய்து வந்தவர். அவர் தலைமையிலே சிறிய கட்டடமாக இருந்த இத்திருக்கோவில் பலமடங்காக விரிவாக்கப்பட்டது. புதிய அழகான கற்சிலைகள் இந்தியாவிலிருந்து வடிவமைத்து தருவிக்கப்பட்டு முதல் கும்பாபிஷேகம் 2011 ஆம் ஆண்டு மிகச் சிறப்பாக நடைபெற்றது.

முருகன் திருக்கோவிலாக இருந்தும் கந்தசஷ்டியின் போது சூரசம்ஹாரம் நடத்த தகுந்த உருவங்கள் இல்லையே என்று ஏங்கிக்கொண்டு இருந்தனர். பக்தர்களின் கவலை தீர 2011 ஆம் ஆண்டு யாழ்ப்பாண முருக பக்தர் (ரியோ ஐஸ்கிரீம்) ஜெயபாஸ்கரன் அவர்கள் கஜமுகன், சிங்கமுகாசுரன் மற்றும் சூரபத்மன் உருவங்களை அன்புடன் ஏற்பாடு செய்து வழங்கினார்.

இந்து ஆலய ஆகம விதிகளின்படி அடுத்த கும்பாபிஷேகத்திற்கு இக்கோவில் தயாராகி வருகிறது. முருக பக்தர்கள் இக்கோவிலுக்கும் இயன்ற உதவிகளை அளித்து முருகனருள் பெற வேண்டுகிறார் தற்போதைய தலைமை அறங்காவலர் கணேஷ் ஈஸ்வரன் தெய்வநாயகம் அவர்கள். அன்பர்கள் 0742163822 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெறலாம்.

எச்.எச்.விக்கிரமசிங்க…?

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT