Tuesday, May 21, 2024
Home » இந்தியாவில் இன்னுமே தணியாத மோடி அலை!

இந்தியாவில் இன்னுமே தணியாத மோடி அலை!

by gayan
December 9, 2023 6:35 am 0 comment
  • 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவின் வெற்றிக்கு ‘மோடி மொடல்’ கைகொடுக்குமா?
  • மாநிலத் தேர்தல்களில் ‘முதல்வர் வேட்பாளர்’ யாரென்ற முகம் தெரியாமல் களமிறங்கிய பா.ஜ.க வெற்றிக்கனியைப் பறித்தது எவ்வாறு?

இந்தியாவில் நடந்து முடிந்த ஐந்து மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் என மூன்று மாநிலங்களில் பா.ஜ.க அமோக வெற்றிபெற்றிருக்கிறது. அதேநேரம் தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்றிருக்கிறது.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாகக் கருதப்படும் இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடமிருந்து இரண்டு மாநிலங்களின் ஆட்சியைக் கைப்பற்றியதோடு, மத்தியப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்திருக்கிறது பா.ஜ.க.காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் மாநிலக் கட்சிகளைப்போலவே, பெரும்பாலும் மாநிலத் தலைவர்களை, தங்கள் கட்சியின் முதல்வர் வேட்பாளர்களைத் தேர்தல் முகமாக முன்னிறுத்தியே பிரசாரங்களில் ஈடுபடுகிறது. அதேபோல, நடந்து முடிந்த ஐந்து மாநிலத் தேர்தல்களிலும் மாநிலத் தலைவர்களை மையப்படுத்தியேதான் தேர்தல் வியூகம் அமைத்திருந்தது காங்கிரஸ்.

குறிப்பாக, மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத், ராஜஸ்தானில் அசோக் கெலாட், சத்தீஸ்கரில் பூபேஷ் பாகேல், தெலுங்கானாவில் ரேவந்த் ரெட்டி என ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி சார்பில் மாநில முதல்வராக இருந்தவர்களாக, மாநிலத் தலைவர்களாக இருந்தவர்களையே முன்னிலைப்படுத்தியிருந்தது. அதேபோல, தேர்தலை எதிர்கொள்வதற்கான முழு வியூகங்களை அமைப்பதற்கும் மாநிலத் தலைமைக்கே முழு சுதந்திரத்தையும் கொடுத்திருந்தது காங்கிரஸ் தலைமை.

ஆனால் பா.ஜ.க-வின் தேர்தல் வியூகமோ காங்கிரஸ் கட்சிக்கு நேர்மாறு ஆகும். நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்லாமல் மாநிலத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் வரைக்குமே பா.ஜ.க கையிலெடுப்பதும், பா.ஜ.க-வுக்குக் கைகொடுப்பதும் இந்த ‘மோடி ெமாடல்’தான்! கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே ‘மோடி அலை’ என்று தொடங்கிய ஒற்றைப் பிம்பமும், பிரசாரமும்தான் பா.ஜ.க-வின் தேர்தல் பரப்புரையாக, ஒற்றை அடையாள முகமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் இந்த முறையும் ‘மீண்டும் மோடி’ (Modi, Once more) என்ற கோஷமே பிரதானமாக இருந்தது. மாநிலத் தலைமை, முதல்வர் வேட்பாளர் என்பதையெல்லாம் முன்கூட்டியே தீர்மானிக்காமல் மோடி என்ற பிம்பத்தை வைத்து மட்டுமே அக்கட்சி ஒவ்வொரு தேர்தலையும் சந்தித்து வருகிறது. அதேபோல, வழக்கமான `மத அரசியலும்’ பா.ஜ.க-வுக்கு மைலேஜ் கொடுக்கிறது. குறிப்பாக, இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் ‘பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மக்கள் அயோத்தியில் இராமர் கோயிலுக்கு இலவச தரிசனம் செய்வதை உறுதி செய்வோம்’ என அமித் ஷா அறிவித்தார்.

இந்த வெற்றி குறித்துப் பேசியிருக்கும் தமிழ்நாடு பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக, இந்தத் தேர்தல் முடிவுகள் தேசத்தின் மனநிலையைப் பிரதிபலிக்கின்றன. தேர்தல் முடிவுகளின் அடிப்படை உணர்வு, பிரதமர் மோடியின் வளர்ச்சி அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்திருக்கின்றனர் என்பதையே பிரதிபலிக்கிறது” என்றிருக்கிறார்.

அதேபோல, இந்தத் தேர்தல் முடிவுகள் குறித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி,”நேர்மையும் நல்ல நிர்வாகமும் வெற்றி பெற்றிருக்கின்றன. ஊழலுக்கு எதிரான எங்கள் போருக்கு மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர். ஊழல், அதிருப்திப்படுத்தும் அரசியல், வாரிசு அரசியலை மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த முடிவுகள் அமைந்திருக்கின்றன. எமக்கு மக்கள் ஆதரவு பெருகிவருவதை இந்த வெற்றி உணர்த்துகிறது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில மக்கள் பா.ஜ.க மீது அன்பைப் பொழிந்திருக்கின்றனர். தெங்கானாவிலும் பா.ஜ.க-வின் செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்துவருகிறது” எனத் தெரிவித்திருக்கிறார்.

நடைபெற்ற முடிந்த சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜ.க மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மத்திய பிரதேசத்தை தக்கவைத்துக் கொண்டே, ராஜஸ்தானையும் சத்தீஸ்கரையும் காங்கிரஸிடமிருந்து தட்டிப் பறித்துள்ளது. இந்த வெற்றி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை உறுதி செய்கிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அரசியல் ஆய்வாளர்கள் இத்தகைய தேர்தல் முடிவுகளை நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்கள். அதேசமயம் ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கரில் நீண்ட காலமாக பா.ஜ.க பலவீனமாகக் கருதப்பட்டது. ஆனால், மத்தியப் பிரதேசத்தைத் தவிர, இரு மாநிலங்களிலும் பெரும்பான்மையைப் பெற்றதன் மூலம் காங்கிரஸின் அனைத்து வியூகங்களையும் அக்கட்சி சிதைத்துள்ளது.

தற்போது பலரின் உள்ளத்தில் எழும் கேள்வி ஒன்றுதான். இந்தத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, 2024 லோக்சபா தேர்தலிலும் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருக்குமா? என்பதுதான் அக்ேகள்வி.

நான்கு மாநிலங்களில் (மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா) சட்டமன்றத் தேர்தல்களும் அரையிறுதி என்று அழைக்கப்பட்டன. ஏனெனில் மக்களவைத் தேர்தல் அடுத்த ஆண்டு அதாவது 2024 இல் நடைபெற உள்ளது. அதேசமயம் இந்த 4 மாநிலங்களில் 82 மக்களவைத் தொகுதிகள் உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில், சட்டசபைத் தேர்தலில் கிடைத்த இந்த மாபெரும் வெற்றியை, லோக்சபா தேர்தலிலும் பெறுவதற்கு அக்கட்சி செயல்படும். இந்த மாபெரும் வெற்றியின் கொண்டாட்டத்தை மக்களவைத் தேர்தல் வரை தொடர்வதற்கு பா.ஜ.க முயற்சிக்கும். அதேசமயம் பா.ஜ.க.வுக்கு இந்த வெற்றி பெரும் பலனை அளிக்கும். இந்த மாநிலங்களில் கிடைத்த வெற்றியானது எதிர்வரும் நாட்களில் பா.ஜ.க தொண்டர்களிடையே உற்சாகத்தை நிரப்பும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

அதே சமயம் ‘மோடி மெஜிக்’ இன்னும் அப்படியே இருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது. இந்த லோக்சபா தேர்தலிலும் இதைப் பயன்படுத்திக் கொள்ள அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இதனால் கட்சிக்கு இலாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அரசியல் எப்போதுமே கற்பனைக்கு அப்பாற்பட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலைப் பார்த்தால், இந்த மூன்று மாநிலங்களிலும் (மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான்) பா.ஜ.க தோல்வியடைந்தது. ஆனால் இந்தத் தோல்வியின் தாக்கம் பொதுத்தேர்தலில் எதிரொலிக்கவில்லை. பா.ஜ.க வெற்றி பெற்றது.

தற்போது இம்மூன்று மாநிலங்களிலும் காங்கிரசை பா.ஜ.க அழித்துவிட்டது எனக் கூறலாம். ஆனால் இந்த சட்டசபை தேர்தல் முடிவுகளின் தாக்கம், மக்களவையிலும் எதிரொலிக்கும் என்ற ஊகங்களை பல அரசியல் ஆய்வாளர்கள் தவிர்க்கின்றனர்.

கடந்த காலப் புள்ளிவிவரங்களைப் பார்த்தால், சட்டசபைத் தேர்தல் வெற்றியானது மக்களவைத் தேர்தலில் வெற்றியை உறுதி செய்யாது என்பதையே காட்டுகிறது.

இனிமேல் அடுத்த ஐந்து மாதம் இந்திய அரசியலில் என்ன மாற்றம் வேண்டுமானாலும் நடக்கலாம். ஐந்து மாநிலத் தேர்தலை அடுத்து இந்தியா கூட்டணி உடையும் நிலையில் இருப்பதாக பேச்சு அடிபடுகின்றது. ஆனால் இந்தியா கூட்டணி உடையாது, அது மேலும் பலப்படும் எனவும் சில அரசியல் வல்லுனர்கள் கூறுகிறார். வரும் 2024 லோக்சபா தேர்தலில் இந்தியா கூட்டணியால் புதிதாக ஏதாவது செய்ய முடியும் என சிலர் நம்புகிறார்கள்.

ஆனால் 2024 தேர்தலில் பா.ஜ.,வுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகின்றது.

கடந்த 2019 லோக்சபா தேர்தலில் புல்வாமா, பாலகோட் போன்ற சம்பவங்கள் மூலமாக தேசியவாதச் சூழல் உருவாகி, அதன் காரணமாக பா.ஜ.க பலனடைந்தது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானார்.

ஆனால் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது. மேலும், 10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் உள்ளது. பா.ஜ.க ஆட்சிக்கு எதிரான போக்கு மக்கள் மத்தியில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். இது தவிர வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகளையும் பா.ஜ.க சந்திக்க வேண்டியிருக்கும்.

இந்நிலையில் எதிர்காலத்தில் பா.ஜ.கவுக்கு சிரமங்கள் அதிகரிக்கலாம். எனவே பா.ஜ.க எதிர்வரும் தேர்தலில் முன்பை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் உள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT