Tuesday, May 21, 2024
Home » IPL 2024 CSK vs GT: வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை

IPL 2024 CSK vs GT: வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை

by Prashahini
May 10, 2024 2:39 pm 0 comment

IPL 2024 கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டத்தில் இன்று (10) சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன.

அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தப் போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது. CSK அணி தற்போது 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று 3ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆட்டத்தில் பஞ்சாப் அணியை, CSK அணி 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது.

அந்த வெற்றியைத் தொடரும் முனைப்பில் இன்றைய ஆட்டத்தில் CSK வீரர்கள் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். அடுத்து வரும் 3 போட்டிகளிலும் CSK அணி வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்று வாய்ப்பை நிச்சயம் உறுதிப்படுத்தி விடும். எனவே, இன்றைய ஆட்டத்தில் CSK வீரர்கள் உயர்மட்ட செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடினர்.

குறிப்பாக கடந்த ஆட்டத்தில் பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஜடேஜா ஜொலித்தார். இந்த ஆட்டத்திலும் இவர்கள் தங்களது சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவார்கள் என எதிர்பார்க்கலாம். அதேபோல் அஜிங்க்ய ரஹானே, ஷிவம் துபே, மொயின் அலி ஆகியோரும் இன்றைய ஆட்டத்தில் பிரகாசிக்கக்கூடும். பந்துவீச்சில் துஷார் தேஷ்பாண்டே, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், சிமர்ஜீத் சிங் ஆகியோர் எதிரணி வீரர்களை மிரட்டக் காத்திருக்கின்றனர்.

அதே நேரத்தில் ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 4இல் வெற்றி, 7இல் தோல்வி என மொத்தம் 8 புள்ளிகளுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அந்த அணி அடுத்து வரும் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே பிளே ஆப் சுற்று வாய்ப்பை தக்க வைக்க முடியும் என்ற நிலை உள்ளது. எனவே, CSK, குஜராத் என 2 அணிகளுக்குமே இது முக்கியமான போட்டியாக உள்ளது.

இருந்தபோதும் குஜராத் அணி, தனது கடைசி 3 ஆட்டங்களிலும் வரிசையாக தோல்வி கண்டுள்ளது. குஜராத் அணியின் ரித்திமான் சாஹா, ஷுப்மன் கில், சாய் சுதர்ஷன் ஆகியோரிடமிருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படவில்லை. பெங்களூரு அணியுடனான கடைசிப் போட்டியில் ஷாருக் கான், டேவிட் மில்லர், ராகுல் டிவாட்டியா ஆகியோர் ஓரளவுக்கு ரன் குவித்ததால் அந்த அணி 147 ஓட்டங்களை எட்ட முடிந்தது.

அதேபோல் பந்துவீச்சிலும் மோஹித் சர்மா, ரஷித் கான், மானவ் சுத்தர் ஆகியோர் கடந்த ஆட்டத்தில் சிறப்பாக பந்துவீசவில்லை. ஜோஷுவா லிட்டில், நூர் அகமது ஆகியோர் அபாரமாக பந்துவீசினர். CSK அணிக்கெதிரான இந்த ஆட்டத்தில் பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் ஜொலித்தால் மட்டுமே குஜராத் அணியால் வெற்றி பெற முடியும். எனவே, இந்த ஆட்டத்தில் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT