Wednesday, May 1, 2024
Home » அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

அம்பாறை மாவட்ட வைத்தியசாலைகளின் குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும்

by damith
December 4, 2023 9:02 am 0 comment

அம்பாறை மாவட்டத்தில் சுகாதாரத்துறையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண, அரசாங்கம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் பைசல் காசிம் சபையில் தெரிவித்தார்.

மாகாண சபை நிர்வாகத்தில் இயங்கும் வைத்தியசாலைகளில், போதுமான வசதிகள் இல்லாதுள்ளன. இதனால் அங்கு சிகிச்சை நடவடிக்கைகள் முறையாக இடம்பெறாதுள்ளதாகவும் அவர் சபையில் சுட்டிக்காட்டினார்.

எனவே, இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இங்குள்ள வைத்தியசாலைகளுக்கு மத்திய அரசாங்கம் தேவையான நிதியை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், கல்முனை மற்றும் சம்மாந்துறை ஆகிய பகுதிகளில் சுமார் 5 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். அப்பிரதேசங்களில் மத்திய அரசாங்கத்தின்கீழ் மூன்று வைத்தியசாலைகளும் கல்முனை ஆர்.டி,எச்.எஸ்ஸின் கீழ் 26 வைத்தியசாலைகளும் நான்கு ஆதார வைத்தியசாலைகளும் இயங்குகின்றன. இவ் வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு, டாக்டர்களுக்கான தட்டுப்பாடு மற்றும் உபகரணத்தடுப்பாடுகளும் நிலவுகின்றன.

இக்குறைபாடுகளை நிவர்த்தி செய்வதில் பெரும் சவால்களை எதிர் நோக்க நேர்ந்துள்ளது.

பல வைத்தியசாலைகள் இருந்தும் அங்கு முறையான சிகிச்சை நடவடிக்கைகள் இடம்பெறுகின்றதா என்பதும் கேள்விக்குறியாகவே உள்ளது. நான், பிரதிச் சுகாதாரா இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த போது சீன அரசாங்கத்தின் உதவியுடன் 13 வைத்தியசாலைகளை நிர்மாணிக்க முடிந்தது. அதில் சம்மாந்துறை மற்றும் பொத்துவில் பிரதேசங்களில் இரண்டு வைத்தியசாலைகளை அமைத்தோம்.

இவ்விரண்டு வைத்தியசாலைகளிலும் சுமார் எண்பது வீத பணிகள் முடிவடைந்துள்ளன. ஆனால், நான்கு வருடங்களாகியும் இந்த வைத்தியசாலைகளின் பணிகள் பூர்த்தி செய்யப்படாது திறக்கப்படாமலுள்ளன.

எனவே,இவ்வைத்தியசாலைகளின் பணிகளை பூர்த்தி செய்து, விரைவாக இதனைத் திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

(லோரன்ஸ் செல்வநாயகம்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT