Tuesday, April 30, 2024
Home » வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்!

வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்!

by sachintha
November 3, 2023 12:53 pm 0 comment

மனிதன் வாக்குறுதிகளை வழங்கக்கூடியவனாவான். அந்த வாக்குறுதிகள் பல்வேறு விதமானவை. ஆனால் வாக்குறுதி வழங்கினால் அதனை நிறைவேற்ற வேண்டும். இது தொடர்பில் அல் குர்ஆன் தெளிவாக எடுத்துக்கூறியுள்ளது.

அதாவது நிறைவேற்ற முடியுமான விடயங்களை மாத்திரம் வாக்குறுதிகளாக வழங்குமாறு அல் குர்ஆன் வலியுறுத்தியுள்ளது. நிறைவேற்ற முடியாத வாக்குறுதியை பெருமைக்காக நிறைவேற்றுவதாக வழங்கக்கூடாது. அவ்வாறான வாக்குறுதிகள் அல்லாஹ்வை கோபமடையச் செய்யும் எனவும் அல் குர்ஆன் குறிப்பிட்டுள்ளது.

இஸ்லாம் மனிதன் நல்லொழுக்கங்களுடன் வாழத் தேவையான, ஒழுக்கம் சார்ந்த அம்சங்களை போதனை செய்யத் தவறியதில்லை. ஒரு மனிதன் நன்நடத்தைகளுக்குச் சொந்தமானவன் என்பதற்குப் பல பண்புகள் சான்றுகளாக இருந்தாலும், அனைத்திற்கும் முதன்மையானது அளிக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாகும். ‘கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றா மனிதன் நிறை மனிதனல்ல’ என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு.

வாக்குறுதிகளை முழுமைப்படுத்துவது இறை நம்பிக்கையாளரின் அடையாளங்களில் ஒன்றாக அல் குர்ஆன் எடுத்தியம்பியுள்ளது.

இது தொடர்பில் அல் குர்ஆன், ‘முஃமின்களே! (நீங்கள் செய்து கொண்ட) உடன்படிக்கைகளை (முழுமையாக) நிறைவேற்றுங்கள். (5:1) என்று குறிப்பிட்டுள்ளது.

அதனால் வாக்குறுதிகளை வழங்கிவிட்டு அதனை அலட்சியம் செய்வது இறை நம்பிக்கைக்குச் சேதம் ஏற்படுத்தும் செயலாகவே இஸ்லாம் பார்க்கிறது.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், “எவரிடம் நம்பி ஒப்படைக்கப்பட்டதை நிறைவேற்றும் தன்மை இல்லையோ, அவரிடம் இறை நம்பிக்கை இல்லை. எவரிடம் கொடுத்த வாக்கை நிறைவேற்றும் தன்மை இல்லையோ அவரிடம் இஸ்லாம் இல்லை’ என்று கூறினார்கள்”.

(ஆதாரம்: அஹ்மது)

அதேநேரம் கொடுத்த வாக்குறுதிகளை மீறுவது நயவஞ்சகனின் குணங்களில் ஒன்று எனவும் நபிமொழியொன்று சுட்டிக்காட்டியுள்ளது. நயவஞ்சகனிடம் மூன்று அடையாளங்கள் காணப்படும். அவற்றில் ஒன்று ‘பேசினால் பொய்யுரைப்பான்’. மற்றையது ‘வாக்களித்தால் மாறு செய்வான்’. மூன்றாவது அடையாளம் ‘நம்பினால் மோசடி செய்வான்’ என்பனவாகும். (ஆதாரம்-: நபிமொழி)

நம்பிக்கையின் மறு பிரதிபலிப்பே வாக்குறுதிகள். அவற்றை நிறைவேற்றாமல் கடந்து செல்வது மனிதனுக்குச் செய்ய வேண்டிய உரிமைகளை மீறுவதாக அமையும். ஆனால் மறுமையில் இதற்கான கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டிய நிலை ஏற்படும். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும் அநியாயம் என்கிறது இஸ்லாம்.

தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் இவைகளை முறையாகச் செய்துவந்து, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், செய்த நற்செயல்கள் அனைத்தும் வீணாகிவிடும். அதனால் தான் அல் குர்ஆன் நிறைவேற்ற இயலுமான காரியங்களை மாத்திரம் வாக்குறுதிகளாக வழங்குமாறு வலியுறுத்துகிறது.

‘ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்?. நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.

(அல் குர்ஆன்- 61:2-3)

வாக்குறுதிகளை நிறை‌வேற்றுவது இறைவனின் பண்பாகும். அவனது இறைத்தூதர்களின் பண்புகளில் அதுவும் ஒன்று. இஸ்மாயீல் (அலை) அவர்களின் நற்பண்புகள் குறித்து இறைவன் பேசுகையில் ‘அவர் வாக்கை காப்பாற்றுபவர்’ என்றும் குறிப்பிடுகின்றான்.

‘(நபியே…) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடுவீராக…. திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராகவும், தூதராகவும், நபியாகவும் இருந்தார்’.

(அல் குர்ஆன் 19:54)

ஆகவே வாக்குறுதிகளை நிறைவேற்றுதல் என்பது மற்றவர்களுக்கு நம்மைப் பண்பாளர் என்பதை அறிமுகம் செய்கிறது.

இதனை கருத்தில் கொண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றும் பண்புகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். அது இஸ்லாம் விரும்பும் அறங்களில் ஒன்றாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT