Tuesday, April 30, 2024
Home » நாகபட்டினம்-காங்கேசன்துறை கப்பல்சேவை ஆரம்பமானதால் லட்சத்தீவு மக்களின் ஏக்கம்!

நாகபட்டினம்-காங்கேசன்துறை கப்பல்சேவை ஆரம்பமானதால் லட்சத்தீவு மக்களின் ஏக்கம்!

by sachintha
October 17, 2023 6:11 am 0 comment

தமிழ்நாட்டின் நாகபட்டினத்தில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டதும், கேரளாவின் லட்சத்தீவுகளில் வாழ்கின்ற மக்களிடம் இருந்து குமுறல்கள் வெடித்துக் கிளம்பி உள்ளன.

தமிழ்நாட்டுக்கும் இலங்கையின் வடக்குக்கும் இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் முயற்சிகள் பல்வேறு காலகட்டங்களில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் இந்த பயணிகள் கப்பல் போக்குவரத்து முயற்சிகள் சில காரணங்களால் வெற்றிகரமாக அமையவில்லை. நாகபட்டினம், காங்கேசன்துறை துறைமுகம் இடையே 3 நாட்களுக்கு முன்னர் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட்டது. செரியாபாணி என்ற 150 பேருடன் பயணிக்கும் அதிவேக பயணிகள் கப்பல் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டு திரும்பியது.

தமிழ்நாடு_- இலங்கை இடையேயான பயண நேரம் 3.30 மணிநேரம்தான். ஆனால் இக்கப்பல் சேவை இடையிடையே மட்டுமே நடைபெறவுள்ளது. போதுமான பயணிகள் முன்பதிவு செய்யாத நிலையில் வாரம் 3 நாட்கள் மட்டும் இயக்குமெனத் தெரிகின்றது.

இது ஒருபுறமிருக்க, இந்தியாவின் யூனியன் பிரதேசங்களில் ஒன்று லட்சத்தீவுகள். அரபிக் கடலில் பல்வேறு தீவு கூட்டங்களின் ஒருங்கிணைப்பாக லட்சத்தீவுகள் இருக்கின்றன. லட்சத்தீவுகளை இந்தியாவின் தரைநிலப் பகுதிகளுடன் இணைப்பதற்கான பிரதான போக்குவரத்து கப்பல் போக்குவரத்து ஆகும். மற்றொன்று விமானப் போக்குவரத்து.

கொச்சியையும் லட்சத்தீவுகளையும் இணைக்கும் வகையில் தினமும் 4 கப்பல் சேவைகள் இயக்கப்படுகின்றன. இவை 300 முதல் 400 வரை பேர் பயணிக்கக் கூடியவை. லட்சத்தீவு மக்கள் அன்றாடம் பிரதான நிலத்துக்கு வந்து செல்ல பல மணிநேரம் இந்தக் கப்பலில் பயணித்து திரும்ப வேண்டிய சூழ்நிலை உள்ளது.

இந்த நிலையில்தான் தமிழ்நாடு_- இலங்கை இடையேயான அதிவேக கப்பல் போக்குவரத்து சேவை லட்சத்தீவு மக்களையும் பெருமூச்சுவிட வைத்துள்ளது. இத்தகைய அதிவேக பயணிகள் கப்பல் சேவைகளை லட்சத்தீவு மற்றும் கொச்சி இடையே இயக்க வேண்டும் என்பது அவர்களது நீண்டகால கோரிக்கை. அங்கு 3 கப்பல்கள் இயக்கப்பட்டன.

இதில் ஒன்றைத்தான் தமிழ்நாடு- இலங்கைக்கு இடையேயான கப்பல் சேவைக்கு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இது தங்களுக்கு பெரும் ஏமாற்றம் என்கின்றனர் லட்சத்தீவு மக்கள். அன்றாட வாழ்க்கைப் பயணத்துக்கான அதிவேக கப்பல்களை கூடுதலாக இயக்குவதுதான் தங்களது குமுறல்களுக்கு தீர்வு என்பது லட்சத்தீவு மக்களின் எதிர்பார்ப்பாகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT