Thursday, May 9, 2024
Home » சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து கப்பலை அகற்ற பிலிப்பைன்ஸுக்கு சீனா அழுத்தம்

சர்ச்சைக்குரிய பகுதியில் இருந்து கப்பலை அகற்ற பிலிப்பைன்ஸுக்கு சீனா அழுத்தம்

by gayan
August 9, 2023 4:19 pm 0 comment

தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய தீவுப் பகுதியில் தரைதட்டியிருக்கும் போர்க்கப்பலை அப்புறப்படுத்தும்படி பிலிப்பைன்ஸை சீன வெளியுறவு அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

அந்தப் பகுதியைக் கைவிட முடியாது என்று மணிலா சீனாவிடம் தெரிவித்ததை அடுத்து சீனா அவ்வாறு வலியுறுத்தியது.

‘செகண்ட் தாமஸ் ஷோல்’ எனும் பவளப்பாறைப் பகுதியில் இருந்து போர்க்கப்பலை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். முன்னர் இருந்ததைப்போலவே அந்தப் பகுதி ஆளில்லா வட்டாரம் என்ற நிலையில் தொடர வேண்டும் என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியது.

இது குறித்துப் பலமுறை இராஜதந்திர ரீதியாக மணிலாவிடம் பீஜிங் அதன் கருத்தைத் தெரிவித்திருப்பதாகவும் ஆனால் அதன் நல்லெண்ணம் அலட்சியப்படுத்தப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

கடல்சார் விவகாரங்கள் குறித்த பேச்சுகளைக் கையாள சீனா விருப்பம் கொண்டுள்ளதாகவும் அது குறிப்பிட்டது. அந்தப் பவளப்பாறைப் பகுதியை ‘அயுஜின் ஷோல்’ என்று பிலிப்பைன்ஸ் குறிப்பிடுகிறது.

அங்கு தரைதட்டியிருக்கும் கப்பலைப் பழுதுபார்க்க உதவும் கட்டுமானப் பொருட்களை அனுப்ப வேண்டாம் என்று மணிலாவிடம் குறிப்பிட்டிருப்பதாக கடந்த திங்கட்கிழமை (07) சீனக் கடலோரக் காவல்படை கூறியது.

அந்த வட்டாரத்திற்கு சென்றுகொண்டிருந்த பிலிப்பைன்ஸ் கப்பலை சட்டரீதியாக தடுத்து நிறுத்தியதாக சீன வெளியுறவு அமைச்சு தகவல் வெளியிட்டது. பிலிப்பைன்ஸின் நடவடிக்கை சீனாவின் அரசுரிமையைப் பாதிப்பதாகவும் தென் சீனக் கடல் நடத்தை விதிமுறையை மீறுவதாகவும் அது கூறியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT