Friday, May 10, 2024
Home » இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு நியூசிலாந்தில் அமோக வரவேற்பு

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு நியூசிலாந்தில் அமோக வரவேற்பு

by Rizwan Segu Mohideen
August 8, 2023 4:48 pm 0 comment

நியூசிலாந்துக்கு ஆய்வுப் பயணம் மேற்கொண்டிருந்த போது அண்மையில் (01) நியூசிலாந்துப் பாராளுமன்ற அமர்வைப் பார்வையிடுவதற்குச் சென்ற இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்திற்கு அங்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.

பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே உள்ளிட்டோரை அமோகமாக வரவேற்பதாக நியூசிலாந்துப் பாராளுமன்ற சபாநாயகர் இதன்போது பாராளுமன்றத்துக்கு அறிவித்தார். இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தின் அங்கத்தவர்கள் நியூசிலாந்துப் பாராளுமன்ற சபாநாயகரரின் விசேட விருந்தினர் கலரியிலிருந்து பாராளுமன்ற அமர்வை பார்வையிட்டனர். அங்கு நியூசிலாந்துப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது ஆசனங்களிலிருந்து எழுந்து கைதட்டி இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாராட்டினர்.

நியூசிலாந்துப் பாராளுமன்றத்துக்கு வருகைதந்த இலங்கை பாரளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தை அந்நாட்டின் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கிரேக் ஓ கொனர் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியூசிலாந்தின் மாஓரி (Māori) கலாச்சாரத்துக்கு அமைய ஆசீர்வாத கீதங்களை இசைத்து வரவேற்றனர்.

அதனையடுத்து, இலங்கை தூதுக்குழுவினர் நியூசிலாந்துப் பாராளுமன்ற சபாநாயகர் அட்ரியன் ருரேஹே, பிரதி சபாநாயகர் கிரேக் ஓ கொனர் மற்றும் உதவி சபாநாயகர்களில் ஒருவரான ஜக்கி டீன் ஆகியோருடன் விசேட கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த ஆய்வுப் பயணத்தின் போது நியூசிலாந்துப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் டேவிட் வில்சன் மற்றும் இலங்கை பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பாராளுமன்ற பணியாளர்களுடன் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றதுடன், இரு நாடுகளினதும் பாராளுமன்ற செயற்பாடுகள் தொடர்பில் இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், நியூசிலாந்தின் பாராளுமன்ற சேவைப் பிரதானி ரபேல் கோன்சலஸ், அந்நாட்டின் மகளிர் அமைச்சர் மற்றும் கல்வி அமைச்சர் ஜான் டினெட்டி, சமூக மற்றும் தன்னார்வத் துறை அமைச்சர் பிரியங்கா இராதாகிருஷ்ணன், தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜில் டே, பெண்களுக்கான பிரதித் தலைவர் கரோல் பியூமண்ட், பொதுநலவாய பாராளுமன்ற உறுப்பினர்களின் அணி, வனுஷி வோல்டர்ஸ் உள்ளிட்ட தொழிலாளர் கட்சியின் உறுப்பினர்களுடன் கலந்துரையாடுவதற்கும் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு இதன்போது சந்தர்ப்பம் கிடைத்தது.

நியூசிலாந்துப் பாராளுமன்ற சமூக சேவைகள் மற்றும் சமூகம் பற்றிய குழுவில் நேரடியாகக் கலந்து கொண்டு அதன் அனுபவங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் பாராளுமன்ற தொடர்பாடல் அணியினால் ஒளிப்பதிவு செய்யப்பட்ட நேர்காணல்களில் கலந்துகொள்வதற்கும் இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களுக்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

இலங்கை பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்துக்கு நியூசிலாந்துப் பாராளுமன்றத்தைப் பார்வையிடுவதற்கான ஏற்பாடும் இதன்போது மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்த ஆய்வுப் பயணத்தில் ஒன்றியத்தின் உறுப்பினர்களான (வைத்திய கலாநிதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே, சீதா அரம்பேபொல, ரோஹினீ குமாரி விஜேரத்ன, (சட்டத்தரணி) பவித்ராதேவி வன்னிஆரச்சி, கீதா சமன்மலீ குமாரசிங்ஹ, சட்டத்தரணி தலதா அதுகோரல, கோகிலா குணவர்தன, முதிதா பிரிஸான்தி, ராஜிகா விக்கிரமசிங்ஹ, மஞ்சுலா திசாநாயக, (கலாநிதி) ஹரினி அமரசூரிய ஆகியோரும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, உதவிப் பணிப்பாளர் (நிர்வாகம்) இந்திரா திசாநாயக, பாராளுமன்ற ஊடக முகாமையாளர் நிம்மி ஹாத்தியல்தெனிய உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நாட்டின் அரசியலில் பெண்களின் தலைமைத்துவத்தை வலுப்படுத்துதல், பாலின சமத்துவத்தை பாதுகாத்தல் உள்ளிட்ட இலங்கைப் பெண்களின் முன்னேற்றத்திற்காக பாராளுமன்ற பெண் உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் எடுக்கப்படும் நடவடிக்கைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வுப் பயணம் சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்க முகவர் நிறுவனத்தின் (USAID) முழுமையான அனுசரணையில் தேசிய ஜனநாயக நிறுவனத்தினால் (NDI) ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT