Home » திடீர் மின்தடைக்கான காரணம் கண்டறியப்படுவதன் அவசியம்

திடீர் மின்தடைக்கான காரணம் கண்டறியப்படுவதன் அவசியம்

by Rizwan Segu Mohideen
December 11, 2023 7:12 am 0 comment

இலங்கையில் நேற்றுமுன்தினம் பிற்பகல் திடீரென மின்தடை ஏற்பட்டது. சில மணித்தியாலயங்கள் நீடித்த இம்மின்தடைக்கு முழு நாடும் முகம்கொடுத்தது. முழுநாடும் ஒரே நேரத்தில் இம்மின் தடைக்கு முகம்கொடுத்ததன் காரணத்தினால் பொலிஸாரும் இராணுவத்தினரும் பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தினர். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டன.

அன்றைய தினம் பிற்பகல் 5.10 மணியளவில் ஏற்பட்ட இம்மின்தடை கட்டம் கட்டமாக சீர்செய்யப்பட்டு இரவு 11 மணியளவில் முழு நாட்டினதும் மின்விநியோகம் வழமை நிலைக்குக் கொண்டு வரப்பட்டது. இதன் நிமித்தம் மின்பொறியியலாளர்களும் இலங்கை மின்சார சபை ஊழியர்களும் கடும் முயற்சி எடுத்துக் கொண்டனர். அவர்களது அர்ப்பணிப்புமிக்க பணி பாராட்டப்பட வேண்டியதாகும்.

சுமார் 5 மணித்தியாலயங்கள் நீடித்த மின்தடையினால் நாட்டின் பல்வேறு துறையினரும் பலவிதமான அசௌகரியங்களுக்கு உள்ளாகினர். குறிப்பாக நாட்டின் இயல்பு நிலையே பாதிக்கப்பட்டிருந்தது.

இலங்கையில் மின்சக்தி என்பது இன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய அத்தியாவசிய சேவைகளில் ஒன்றாகும். குறிப்பாக உற்பத்திகள் மற்றும் சேவைகள் துறையின் முக்கிய இயங்குசக்தியாகவும் மின்சக்தியே திகழுகிறது. அதனால் மின்சக்தி இல்லாவிடில் நாடே ஸ்தம்பிதமடைந்து விடக்கூடிய அளவுக்கு முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இச்சேவை மக்களுக்கும் ஏனைய அனைத்துத் துறைகளுக்கும் சீராகவும் தொடராகவும் கிடைக்கப்பெற வேண்டும். அதுவே அனைத்துத் தரப்பினரதும் எதிர்பார்ப்பாகும். அதற்கு ஏற்ப இலங்கை மின்சார சபையின் ஊடாக சேவைகள் வழங்கப்படுகின்றன.

ஐந்து மணித்தியாலயங்கள் ஏற்பட்ட இத்திடீர் மின்தடையினால் மக்களது இயல்பு வாழ்வு மாத்திரமல்லாமல் பல்வேறு உற்பத்தி கைத்தொழில் மற்றும் சேவைகள் துறையிலும் தாக்கங்கள் ஏற்பட்டன. சில தொழிற்சாலைகளின் உற்பத்தி நடவடிக்கைகள் மின்தடையோடு இடைநிறுத்தப்பட்டன. தேசிய மின்சக்தியைப் பயன்படுத்தும் அனைத்து இயந்திர சாதனங்களது செயற்பாடுகளும் ஸ்தம்பிதமடைந்தன. அதன் விளைவான பொருளாதார பாதிப்புக்களும் குறைத்து மதிப்பிடக் கூடியவையாக இராது.

அதனால் இலங்கை போன்ற வளர்முக நாடொன்றில் திடீரென்று ஏற்படும் மின்தடை ஐந்து மணித்தியாலயங்கள் நீடிப்பது பொருளாதார தாக்கங்களுக்கு நிச்சயம் பங்களிக்கவே செய்யும். அதனால்தான் இம்மின்தடைக்கான காரணம் உரிய முறையில் கண்டறியப்பட வேண்டியதன் அவசியம் பரவலாக உணரப்பட்டிருக்கிறது. இப் பின்னணியில்தான் ஒரே நேரத்தில் முழுநாடும் திடீர் மின்தடைக்கு உள்ளாமை பல்வேறு மட்டங்களதும் அவதானத்தைப் பெற்றிருக்கின்றது.

அதேநேரம், இம்மின் தடைக்கான காரணத்தைக் கண்டறிவதன் ஊடாக எதிர்காலத்தில் இவ்வாறான திடீர் மின்தடைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியும். அத்தோடு இவ்வாறான மின்தடைகள் ஏற்படுமாயின் அவற்றின் ஊடாக ஏற்படக்கூடிய பாதிப்புக்களை, குறிப்பாக பொருளாதார பாதிப்புக்களைத் தவிர்த்துக் கொள்ளவும் வழி கிடைக்கப்பெறும்.

இந்நாட்டுக்குத் தேவையான மின்சக்தி நீர், காற்று, நிலக்கரி, சூரியன், திரவ எரிபொருள் ஆகிய மூலங்களைக் கொண்டு பெற்றுக் கொள்ளப்படுகின்றது. இந்த அனைத்து மூலங்கள் மூலமும் கிடைக்கப்பெறும் மின்சக்தி தனித்தனி கட்டமைப்புக்கள் ஊடாக தேசிய கட்டமைப்பில் சேர்க்கப்படும் ஒழுங்கு காணப்படுகின்றது. அதனால் ஒரு பகுதியில் அல்லது ஒரு கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பு அல்லது கோளாறு முழு நாட்டுக்குமான கட்டமைப்புக்களில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வியும் மக்கள் மத்தியில் நிலவவே செய்கிறது.

இந்த நிலையில்தான் இலங்கை மின்சார சபை, ‘இத்திடீர் மின்தடைக்கு கொத்மலை முதல் பியகம வரையிலான மின் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணம்’ எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மின்சக்தி, எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த, இத்திடீர் மின்தடை தொடர்பில் இரு வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்து இருக்கிறார். இது வரவேற்கப்பட வேண்டிய நடவடிக்கையாகும்.

ஏனெனில் முழு நாட்டிலும் ஒரே நேரத்தில் திடீர் மின்தடை ஏற்பட்டமைக்கான சரியான காரணம் கண்டறியப்படும் போது எதிர்காலத்தில் இவ்வாறான மின் தடைகள் ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ளக்கூடியதாக இருக்கும். இன்றைய தேவைகளில் அதுவும் ஒன்று என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT