Saturday, April 27, 2024
Home » சுவாமி ஐயப்ப விரதமும் மகரஜோதி தரிசனமும்

சுவாமி ஐயப்ப விரதமும் மகரஜோதி தரிசனமும்

by sachintha
November 17, 2023 6:00 am 0 comment

கார்த்திகை மாதம் என்றதுமே கேரளா மாநிலத்தில் எழுந்தருள் செய்யும் சுவாமி ஐயப்பனை விரதம் வேண்டி நிற்கும் காலமாகும். கார்த்திகை மாதம் அன்று அதிகாலையில் எழுந்து குளித்து மகா கணபதி குறிப்பாக பம்பை கணபதியை நினைத்து வணங்கி ஹோம பூஜையில் பங்கு கொண்டு எல்லாம் வல்ல விநாயகப் பெருமான் அருளால் விக்கினங்கள் இன்றி சுவாமி ஐயப்பனை வேண்டி தங்களது பெற்றோரால் அல்லது தாங்கள் செல்லும் சங்கங்களின் குரு சுவாமிகள் ஊடாக அல்லது ஆலய பிரதம குருக்கள் மூலம் ஐயப்பன் பதக்கம் கொண்ட துளசி மணி மாலை அணிந்து விரதம் கைகொள்ளும் மாதத்தில் ஆரம்ப நாளாக இன்றைய நாள் (17.11.2023) அமைந்துள்ளது.

ஐயப்ப சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முதன் முதலாக மாலை அணிந்து செல்பவர்கள் கறுப்பு வஸ்திரம் அணிந்து கொள்வார்கள். இரண்டாம் மூன்றாம் மலை வருபவர்கள் நீலவஸ்திரம் அணிந்து கொள்வார்கள். மூன்று மலைக்கு மேற்பட்ட அதாவது பலமுறை மலையேறிய ஐயப்ப சுவாமிகள் காவி வஸ்திரம் அணிந்து கொள்வார்கள்.

மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் அனைவரும் சுவாமி ஐயப்பனாகவே கருதப்படுவார்கள், வணங்கப்படுவார்கள். அவர்கள் தங்களுக்குள் உரையாடும் போது ஒருவருக்கொருவர் ‘சுவாமி சரணம்’ சொல்லி சுவாமி என்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி தம்மிடையே உரையாடிக் கொள்வார்கள்.

அதேபோன்று விரத நாட்களில் பிரம்மச்சாரிய விரதம் முக்கியம். சைவ உணவை உட்கொள்ள வேண்டும். ஒரு வேளையாவது விரதம் இருக்க வேண்டும். அதேவேளை நகம் வெட்டக்கூடாது, சவரம் செய்யக்கூடாது, சினிமா போன்றவை பார்க்கக் கூடாது. சுவாமி ஐயப்பனுக்கான பஜனைகளில் ஈடுபட வேண்டும்.

முடிந்தளவு கன்னி சுவாமிகள் முதன் முதலாக மாலை அணிந்தவர்கள் பலமுறை மலையேறிய சுவாமிகளுக்கு அன்னதான பிரபுவான சுவாமி ஐயப்பனை நினைத்து குரு சுவாமிகளுக்கு அன்னதானம் வழங்க வேண்டும். இருமுடியில் நெய், தேங்காய் அதே போன்று பதினெட்டாம் படியில் ஏறும் முன்னர் அதற்கான தேங்காய், வரும் பொழுது தரிசனம் முடிந்த பின்னர் மீண்டும் ஒரு தேங்காய் உடைப்பதற்கு மொத்தமாக மூன்று தேங்காய் இருமுடியில் கொண்டு செல்ல வேண்டும்.

அத்துடன் பூஜைப் பொருட்களும் கொண்டு செல்ல வேண்டும். அந்த இரு முடியை சுமந்து கொண்டு செல்லும்போது சுவாமி ஐயப்பனையே நினைத்து மலை ஏற வேண்டும். 18 படி தாண்டி சுவாமி ஐயப்பனை தரிசனம் கண்டதன் பின்னர் குருசாமி உதவியின் மூலம் நெய்யபிஷேகம் செய்ய வேண்டும்.

நெய் அபிஷேகம் முடிந்ததன் பின்னர் அங்கிருந்து பெறப்படும் நெய்யை பூஜைப் பொருட்களையும் மீண்டும் வீட்டுக்குக் கொண்டு வந்து நெய்வேத்தியம் வைத்து தாங்களும் சுற்றத்தாரும் அதனைப் பகிர்ந்து அதனை தெய்வப் பிரசாதமாக கருதி கைக்கொள்ள வேண்டும், பகிர வேண்டும்.

அதேவேளையில் இந்த விரத காலத்தில் கூடுதலாக பக்திபூர்வமாக ஐயப்பனையே நினைத்து பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதும், பஜனை வழிபாடுகளில் ஈடுபடுவதும், பாத நமஸ்காரம் செய்வதும் முக்கியமாகக் கைக்கொள்ளப்படுகின்றன.

எப்பொழுதும் காலில் பாதணிகள் அணியாமல் வெறும் பாதங்களுடனே நடமாட வேண்டும். கலியுக வரதனாகிய சுவாமி ஐயப்பனை நினைத்து, இந்த விரதத்தை அனுஷ்டிப்பதன் காரணமாக சனி கிரகதோஷமும் விடுபட்டுப் போகும்.

எல்லாம் வல்ல சுவாமி ஐயப்பன் அருள் புரிந்து நல்வாழ்வு கிடைக்க நாம் அனைவரும் தினமும் ‘ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா’ எனும் சரண கோஷத்தை காலை மாலை உச்சரிப்பதன் மூலம் நல்வாழ்வு நிச்சயம் கிடைக்கும். அந்த சுவாமி ஐயப்பன் எங்களுக்கு அருள்புரிவான். இந்த விரத காலத்தில் மகரஜோதி அன்று மகரஜோதி தரிசனம் கண்டு அந்த ஜோதிவடிவிலான ஐயப்பனை தரிசித்து நல்வாழ்வு கிட்ட சுவாமி ஐயப்பனை பிரார்த்தனை செய்வோமாக!.

கலாநிதி சிவஸ்ரீ ராமச்சந்திர குருக்கள்

பாபு சர்மா…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT