Home » இஸ்லாம் கூறும் மத சுதந்திரம்

இஸ்லாம் கூறும் மத சுதந்திரம்

by sachintha
November 17, 2023 6:01 am 0 comment

நிலைபேறான மகிழ்ச்சியும் கௌரவமும் நிறைந்த ஒரு சமூக உருவாக்கத்திற்கான மிகப்பிரதான அடிப்படைகளில் ஒன்றாக மதச் சுதந்திரம் விளங்குகிறது. அதனால்தான் இஸ்லாம் மதச்சுதந்திரம் சம்பந்தமான அதனது ஆழ்ந்த அவதானிப்பையும் வழிகாட்டல்களையும் வழங்கியுள்ளது.

இது தொடர்பில் அல்குர்ஆன், ‘(சத்திய இஸ்லாம்) மார்க்கத்தில் எத்தகைய நிர்ப்பந்தமும் இல்லை. (ஏனெனில்) வழிகேட்டிலிருந்து நேர்வழி திட்டமாக தெளிவாகிவிட்டது.’ (சூறா அல் பகரா – 256) என்று குறிப்பிட்டுள்ளது.

இது மதச்சுதந்திரம் குறித்த அல் குர்ஆனிய பிரகடனமாகும். நபி (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்கு கிறிஸ்தவர்களாக இருந்த நஜ்ரான் தூதுக்குழுவொன்று வந்த போது அவர்களை மஸ்ஜிதுன் நபவி பள்ளிவாசலில் வைத்தே அன்னார் உபசரித்ததோடு அவர்களின் வணக்கங்களை மஸ்ஜிதின் ஒரு புறத்தில் நிறைவேற்றவும் ஏற்பாடு செய்து கொடுத்தார்கள்.

(ஆதாரம்-: ஸீரது இப்னு இஸ்ஹாக்)

இவ்வசனம் அருளப்படுவதற்கான பின்னணி காரணி பின்வருமாறு அமைந்துள்ளது. சாலிம் இப்னு அவ்ப் கோத்திரத்தைச் சேர்ந்த அன்ஸாரிகளில் ஒரு மனிதருடைய இரண்டு ஆண்மக்கள் நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருவதற்கு முன்பே கிறிஸ்தவ மதத்தை தழுவிக்கொண்டனர். நபி (ஸல்) அவர்களின் மதீனா விஜயத்தை தொடர்ந்து இஸ்லாத்தை தழுவிக்கொண்ட அவர்களின் தந்தை, கிறிஸ்தவ மதத்தை தழுவியிருந்த அவரது இரண்டு குழந்தைகளும் அவரை தரிசிக்க வந்த சமயம், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் இருவரும் கிறிஸ்தவ மதத்தை விட்டு விட்டு இஸ்லாம் மதத்தை ஏற்றுக்கொள்ளும் வரை நான் உங்களை விடமாட்டேன் என்று கூறி வற்புறுத்தினார். ஆனால் அவ்விருவரும் அதனை மறுத்தனர். இறுதியாக நபி (ஸல்) அவர்களிடம் அம்மூவரும் வந்து முறையிட்டு கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே மேற்குறித்த வசனம் அருளப்பட்டது.

(ஆதாரம்- அல்வாஹித், அஸ்பாபுன் நுஸுல்).

இவ்வசனம் அருளப்பெற்றதும் அவ்விருவரும் அவர்கள் தழுவியிருந்த கிறிஸ்தவ மதத்திலேயே இருப்பதற்கான சுதந்திரம் வழங்கப்பட்டது. இதன் ஊடாக இஸ்லாத்தின் மதச்சுதந்திரக்கோட்பாடு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது.

பிற சமூகத்தவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் வழங்கிய மதச் சுதந்திரம், அவர்களுக்கு ஆழமான மன அமைதியையும், நம்பிக்கையையும் வழங்கியது. இஸ்லாமிய ஆட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் அவர்களது மத அனுஷ்டானங்களையும், கிரியைகளையும் பரிபூரணமாக நிறைவேற்றும் சுதந்திரத்தோடு வாழலாம் என்ற அனுமதி மதச்சுதந்திரம் பற்றிய இஸ்லாமிய மார்க்கத்தின் தெளிவான நிலைப்பாட்டை விளக்கி நிற்கிறது. உலகின் எட்டுத்திக்குகளிலும் இஸ்லாம் அதன் ஆளுமையை நிலைநாட்டி பெரும் வல்லரசாக ஓங்கி நின்ற போதும் கூட அதன் மதச்சுதந்திரம் பற்றிய கோட்பாட்டில் யாரும் எவ்வகையான மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதனை வரலாற்றைப் படிப்பவர்களால் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாம், இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் பிற சமூகத்தவர்களுக்கு வழங்கியிருக்கின்ற சில சலுகைகளை, இஸ்லாமியர்களுக்கு கூட வழங்கவில்லை என்பதனை அவதானிக்கலாம். உதாரணமாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் மதுபானம் அருந்தக்கூடிய ஒரு முஸ்லிம் தண்டனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ள இஸ்லாம் அங்கு வாழக்கூடிய பிற மதத்தைச் சேர்ந்த ஓரு மனிதன் மதுபானம் அருந்துகின்ற போது இஸ்லாமிய குற்றவியல் சட்டத்திற்கு அமைவாக அவன் தண்டிக்கப்பட வேண்டும் என்ற எந்த விதியையும் அறிமுகப்படுத்தவில்லை.

இவ்வாறே பன்றி இறைச்சியை முஸ்லிம்களுக்கு தடைசெய்திருக்கின்ற இஸ்லாம், பிற சமூகத்தவர்களின் சமயம் அதை சாப்பிடுவதற்கான அனுமதியை வழங்கியிருக்கின்ற பட்சத்தில் இஸ்லாம் அதில் எந்த தடையையும் ஏற்படுத்தவில்லை. (ஆதாரம்:- அல் அகல்லியாத் அல் தீனிய்யா வல் ஹில்லுல் இஸ்லாமிய்யு)

இஸ்லாமிய ஆட்சியின் போது முஸ்லிமல்லாதோர் தேவாலயங்களை புதிதாக நிர்மாணிக்கவும் பெருநாட்களை கொண்டாடவும் பூரண அனுமதி வழங்கப்பட்டிருந்தது. திருநாட்களின் போது கிறிஸ்தவர்கள் சிலுவைகளையும், மெழுகுவர்த்திகளையும் சுமந்து கொண்டு இஸ்லாமிய நகரங்களின் வீதிகளில் ஊர்வலம் செல்வோராக இருந்தனர். இஸ்லாமிய ஆட்சியில் சிறுபான்மையினருக்கு எந்தளவு தூரம் மதச்சுதந்திரம் வழங்கப்ட்டிருந்நது என்பது இங்கு நோக்கத்தக்கது.

மதீனா சாசனத்தில் ஒவ்வொரு மதத்தை சார்ந்தவர்களும் தத்தமது மத கடமைகளையும் அனுஷ்டானங்களையும் பூரணமாக நிறைவேற்றுவதற்கான அங்கீகாரம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டிருப்பது இஸ்லாத்தின் மதச் சுதந்திரம் பற்றிய விசாலமான பார்வையை பறைசாற்றுகின்றது.

முஸ்லிமல்லாதோர் அவர்களது மார்க்கத்தையும் செல்வங்களையும் பாதுகாத்துக்கொள்ள உரிமை உடையவர்கள். அவர்கள் முஸ்லிம்களது மார்க்கத்தை பின்பற்ற வேண்டுமென்று நிர்ப்பந்திக்கப்படமாட்டார்கள். அத்துடன் அவர்களது செல்வங்கள் சூரையாடப்படவும் மாட்டாது.

நாட்டுக்குள்ளும் வெளியேயும் நடமாடுவதற்கான சுதந்திரம் நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்ப உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு நஜ்றான் தேசத்து நஸாறாக்களோடு நபி (ஸல்) அவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்தில் மத சுதந்திரத்துக்கான வாசல் முழுமையாக திறக்கப்பட்டிருந்தது.

மதச் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தியம்பும் மற்றுமொரு குர்ஆனிய வசனத்தை பின்வருமாறு காணலாம். ‘மேலும் உம் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள யாவரும் ஈமான் கொண்டிருப்பார்கள், எனவே மனிதர்கள் அனைவரும் முஃமின்களாக ஆகிவிட வேண்டும் என்று அவர்களை நீர் கட்டாயப்படுத்த முடியுமா’ (ஆதாரம்-: சூறா யூனுஸ் – 99)

மேற்குறிப்பிட்ட வசனத்தில் இருந்து மதங்களின் இருப்பை ஏற்றுக்கொள்கின்ற இஸ்லாத்தின் நிலைப்பாடு இஸ்லாம் மட்டும் தான் அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்ட சத்திய மார்க்கம் என்ற சிந்தனைக்கு ஒரு போதும் முரண்படாது.

சகல மதங்களுக்கும், சமூகங்களுக்கும் வாழ்வுரிமை உண்டு. ‘நபி (ஸல்) அவர்கள் நன்மாராயம் கூறுபவரும் அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவருமாவார்’.

ஆகவே முஹம்மது (ஸல்) அவர்களின் சமூகத்தினரது கடமை நபிவழி நின்று இஸ்லாத்தை வாழ செய்வதும் பிற மனிதர்களைச் சென்றடையச் செய்வதுமேயன்றி அவர்கள் மீது திணித்து முஸ்லிம்களாக மாற்றுவதன்று. இந்த உண்மையை அங்கீகரிக்காமல் ஒருபோதும் மத சகிப்புத்தன்மை வராது. சகிப்புத்தன்மை இன்றேல் நட்புறவு நிலை பெறாது.

இறைநம்பிக்கை என்பது மனிதனோடு சம்பந்தப்பட்டது. அதனை யாரும் கொண்டுவந்து திணிக்க முடியாது என்பது தான் இஸ்லாத்தின் உறுதியான நிலைப்பாடாகும். மேற்குறித்த மதச் சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் நிலைப்பாடு மிகத் தெளிவானதாகும். இஸ்லாம் மாற்று மதங்களையோ, பிற சமூகத்தவர்களின் நம்பிக்கை கோட்பாடுகளையோ, கலாசார நடைமுறைகளையோ ஒருபோதும் நிந்தித்ததோ, இழிவுபடுத்தியதோ இல்லை. மாறாக இவ்வாறு செய்பவர்கள் இஸ்லாத்தின் வழிகாட்டல்களையும் வரையறைகளையும் மீறியவர்களாகக் கணிக்கப்படுவார்கள்.

ஆகவே மதச்சுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் தெளிவான நிலைப்பாட்டை சரியான முறையில் புரிந்து செயற்படுவதோடு அவை தொடர்பான தெளிவை பிற சமூகத்தவர்களுக்கும் கொண்டு செல்வது இன்றியமையாததாகும். இதில் ஏற்பட்ட பலவீனங்கள் தான் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதல்களுக்கு காரணம் என உறுதிபடக்கூறலாம்.

கலாநிதி, அல்ஹாபிழ் எம்.ஐ.எம். சித்தீக்…

(அல்-ஈன்ஆமி)

B.A.Hons,(Al- Azhar university, Egypt) M.A.& PhD (International Islamic university, Malaysia)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT