Tuesday, April 30, 2024
Home » ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் உறுதி

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இஸ்ரேல் உறுதி

காசாவில் தொடர்ந்தும் உக்கிர தாக்குதல்

by mahesh
April 17, 2024 9:06 am 0 comment

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுப்பதாக இஸ்ரேலிய ஆயுதப் படைகளின் தலைவர் உறுதி அளித்துள்ளார். இந்தப் பதற்றம் பிராந்தியத்தில் போர் சூழலை ஏற்படுத்தும் அச்சம் காரணமாக உலகத் தலைவர்கள் அமைதி காக்கும்படி அழைப்பு விடுக்கும் நிலையிலேயே இந்த அறிவித்தல் வெளியாகியுள்ளது.

காசாவில் ஆறு மாதங்களுக்கு மேலாக போர் நீடிக்கும் சூழலில், பிராந்தியத்தில் ஈரான் ஆதரவு குழுக்கள் இஸ்ரேலுடன் மோதலில் ஈடுபட்டிருக்கும் நிலையில், ஈரான் முதல் முறையாகவே இஸ்ரேல் மீது நேரடித் தாக்குதலை நடத்தி இருந்தது.

கடந்த ஏப்ரல் 1 ஆம் திகதி சிரிய தலைநகர் டமஸ்கஸில் உள்ள ஈரான் துணைத் தூதரகத்தின் மீதான தாக்குதலுக்கு பதில் நடவடிக்கையாக இஸ்ரேல் மீது ஈரான் நூற்றுக்கணக்கான ஆளில்லா விமானங்கள் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது.

‘இஸ்ரேலின் மீதான (ஈரானின்) பல எண்ணிக்கையிலான ஏவுகணைகள், க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்கள் வீசப்பட்டதற்கு பதில் ஒன்று கொடுக்கப்படும்’ என்று இஸ்ரேலிய ஆயுதப் படைகளின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஹர்சி ஹலவி குறிப்பிட்டார். கடந்த சனிக்கிழமை ஈரானிய தாக்குதலுக்கு இலக்கான நெவாடிம் விமானப்படை தளத்தில் கடந்த திங்கட்கிழமை துருப்புகளிடம் பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஈரான் வீசிய பெரும் எண்ணிக்கையான ஆயுதங்கள் அமெரிக்க மற்றும் மற்ற கூட்டணி நாடுகளின் உதவியோடு சுட்டு வீழ்த்தப்பட்டதாக இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டது. இந்தத் தாக்குதல்கள் சிறு பாதிப்புகளையே ஏற்படுத்தியதாகவும் அது கூறியது.

இஸ்ரேலுக்கு ஆதரவு அளிக்கும் நாடுகள் உட்பட மேற்கத்தேய அரசுகள் பதற்றம் தீவிரம் அடைவது தொடர்பில் எச்சரிக்கை விடுத்தபோதும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது போர் அமைச்சரவையை திங்களன்று சந்தித்து அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இஸ்ரேல் பதில் அளிக்கும் வரை இந்த விடயம் முடிவுக்கு வந்திருப்பதாக ஈரான் முன்னதாக குறிப்பிட்டிருந்ததோடு ஈரான் அமைதி காக்க விரும்புவதாகவும் பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தும் எண்ணம் இல்லை என்றும் சீன வெளியுறவு அமைச்சரை நேற்று சந்தித்த ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹொஸைன் ஆமிர் அப்துல்லாஹியம் குறிப்பிட்டார்.

‘ஈரான் நிலைமையை சிறந்த முறையில் கையாளும் என்றும் பிராந்தியத்தில் மேலும் கொந்தளிப்பை தவிர்க்கும் என்றும் நம்புகிறோம்’ என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தெரிவித்தார்.

மத்திய கிழக்கு பதற்றத்தை தணிப்பதற்கு ஈரான் மீதான தமது செல்வாக்கை பயன்படுத்தும்படி சீனாவை அமெரிக்கா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. ஈரானின் நெருங்கிய நட்பு நாடாக இருக்கும் சீனா அமெரிக்கா தடை விதித்த ஈரானின் எண்ணெய்யை வாங்கும் பிரதான நாடாகவும் உள்ளது.

இந்நிலையில் ஈரானுக்கு எதிரான இஸ்ரேலின் பதில் நடவடிக்கை விரைவானதாகவும் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் இருக்கக் கூடும் என்று அமெரிக்க அதிகாரிகளை மேற்கோள்காட்டி அமெரிக்காவின் என்.பி.சி. செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இதில் ஈரானுக்கு வெளியில் உள்ள ஈரானியப் படைகள் மற்றும் ஈரான் ஆதரவு குழுக்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக அந்த செய்தி குறிப்பிட்டுள்ளது.

கட்டார் அமீருடன் நேற்று தொலைபேசியில் பேசிய ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் வான் தாக்குதல் வெற்றி பெற்றதாகவும் தமது நலனுக்கு எதிர்காலத்தில் ஏற்படும் அச்சுறுத்தலுக்கு இதனை விடவும் வேதனை மிக்க பதில் அளிக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

ஈரான் பிரதி வெளியுறவு அமைச்சர் அலி பகரி கானி அந்நாட்டு அரச தொலைக்காட்சிக்கு கருத்து வெளியிடும்போது, இஸ்ரேலின் எந்த ஒரு பதில் தாக்குதலுக்கும் பதிலடி கொடுப்பதற்கு ஈரான் மேலும் 12 நாட்கள் காத்திருக்காது என்றும் உடன் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

காசா போர்

கடந்த ஒக்டோர் 7 ஆம் திகதி தொடக்கம் நீடிக்கும் காசா போர் காரணமாகவே பிராந்தியத்தில் பதற்றம் உச்சம் பெற்றுள்ளது. எனினும் இஸ்ரேல் காசாவில் 193 ஆவது நாளாகவும் நேற்று தொடர்ந்து தாக்குதல்களை நடத்தியதோடு பலஸ்தீன போராளிகளுடனான மோதல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

வடக்கு காசாவின் ஜபலியா அகதி முகாமில் பள்ளிவாசல் ஒன்று மற்றும் அருகில் இருக்கும் வீடுகள் மீது இஸ்ரேல் நேற்று நடத்திய வான் தாக்குதல்களில் பலர் கொல்லப்பட்டிருப்பதோடு பெரும் எண்ணிக்கையான பெண்கள் மற்றும் சிறுவர்கள் காயமடைந்துள்ளனர்.

மத்திய காசாவில் நுசைரத் அகதி முகாம் பகுதியில் ஆறாவது நாளாக நேற்று இஸ்ரேலின் பீரங்கி மற்றும் ஏவுகணை தாக்குதல்கள் நீடித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில் ஐவர் கொல்லப்பட்டிருப்பதோடு பாரிய பொருட் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. தெற்கு காசாவின் ரபாவில் இஸ்ரேல் நேற்று முன்தினம் இரவு நடத்திய தாக்குதல் ஒன்றில் குழந்தை ஒன்று உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது.

வட கிழக்கு காசாவின் பெயித் ஹனூன் நகரில் இராணுவ நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்திருக்கும் இஸ்ரேலிய படைகள் நேற்று அந்த நகரின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கமாக டாங்கிகள் மற்றும் கவச வாகனங்களில் முன்னேறி ஆயிரக்கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தங்கியுள்ள மூன்று பாடசாலைகளை சுற்றிவளைத்துள்ளது.

கடும் வான் தாக்குதல்கள் மற்றும் செல் குண்டு வீச்சை அடுத்தே இந்த சுற்றிவளைப்பு இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் பாடசாலைக்குள் இடம்பெயர்ந்த மக்கள் மீது இஸ்ரேல் டாங்கிகள் தாக்குதல் நடத்துவதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காசாவில் தொடரும் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கி இருப்பதோடு பலியானவர்களில் 70 வீதத்துக்கும் அதிகமானவர்கள் பெண்கள் மற்றும் சிறுவர்களாவர். இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்கள் காசாவில் பாரிய மனிதாபிமான நெருக்கடியை ஏற்படுத்தி இருப்பதோடு அங்கு உணவு, மருந்து மற்றும் குடிநீருக்கு தட்டுப்பாடு நீடித்து வருகிறது.

தெற்கு காசாவில் ஒன்றரை மில்லியன் அளவான பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் ரபா நகர் மீது படை நடவடிக்கைக்கு இஸ்ரேல் திட்டமிட்டு வரும் நிலையில், ஈரானின் தாக்குதலை அடுத்து அந்தத் திட்டம் பிற்போடப்பட்டிருப்பதாக இரு இஸ்ரேலிய தரப்புகளை மேற்கோள் காட்டி செய்தி வெளியாகியுள்ளது.

ஹமாஸின் எஞ்சிய படைப்பிரிவுகளை ஒழிப்பதற்கு ரபா மீதான படை நடவடிக்கை முக்கியமானது என்று நெதன்யாகு வலியுறுத்தி வருகின்றபோதும் அதற்கு அமெரிக்கா உட்பட தனது கூட்டணி நாடுகளே எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இந்நிலையில் வடக்கு காசாவின் ஜபலியா நகரில் உள்ள இஸ்ரேலிய துருப்புகளை இலக்கு வைத்து மூன்று பலஸ்தீன போராட்டக் குழுக்கள் கடும் தாக்குதலை நடத்தி இருப்பதாக போர் கண்காணிப்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இஸ்ரேல் மற்றும் காசா பகுதியை பிரிவுக்கு எல்லை வேலியை ஒட்டி ‘யுத்த சூன்ய வலயம்’ ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்ட துருப்புகள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதில் அல் அக்ஸா தியாகப் படை, பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் மற்றும் பலஸ்தீன முஜாஹிதீன் குழுவின் போராளிகள் இஸ்ரேலிய துருப்புகள் மீது மோட்டார் மற்றும் இயந்திர துப்பாக்கிகள் கொண்டு உக்கிர தாக்குதலை நடத்தியதாக பேர் கற்கைகளுக்கான நிறுவனம் மற்றும் சீ.டீ.பீ. என்ற அமைப்புகள் கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஈரானின் தாக்குதல் காசா போரில் இருந்து தம்மை திசைதிருப்பாது என்று இஸ்ரேல் இராணுவம் குறிப்பிட்டுள்ளது. காசாவில் போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்தும் மத்தியஸ்த முயற்சியில் எகிப்து, கட்டார் மற்றும் அமெரிக்கா ஈடுபட்டு வந்தபோதும் இன்னும் அந்தப் பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT