Tuesday, April 30, 2024
Home » இன ஐக்கியம் வலுவடைவதற்கு புத்தாண்டில் உறுதிகொள்வோம்!

இன ஐக்கியம் வலுவடைவதற்கு புத்தாண்டில் உறுதிகொள்வோம்!

by sachintha
April 12, 2024 6:23 am 0 comment

தமிழ்,- சிங்கள புத்தாண்டான குரோதி வருஷம் நாளை இரவு பிறக்கின்றது. நாட்டில் நிலவிய மிகமோசமான பொருளாதார நெருக்கடி படிப்படியாக நீங்கி, நாடு பெருமளவில் மீண்டெழுந்துள்ள தற்போதைய வேளையில் சித்திரைப் புத்தாண்டு நாளை பிறக்கின்றது. ஆகவே சில வருட காலத்துக்குப் பின்னர் இம்முறை தமிழ், சிங்கள மக்கள் சித்திரைப் புத்தாண்டை குதூகலத்துடன் கொண்டாடவிருக்கின்றனர்.

தமிழ், சிங்கள மக்களால் கடந்த சில வருட காலமாக சித்திரைப் புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாட முடியாமல் போயிருந்தது. முதலில் உலகப் பெருந்தொற்றான கொவிட் பரவல் காரணமாக எமது நாடும் முடங்கிப் போயிருந்த காரணத்தினால் மக்களால் அவ்வேளையில் சித்திரைப் புத்தாண்டை கொண்டாட முடியாமல் போயிருந்தது.

கொவிட் பெருந்தொற்று ஒருவாறு நீங்கியதும் நாட்டில் பொருளாதார நெருக்கடி உருவெடுத்தது. அதனைத் தொடர்ந்து நாட்டில் ஆங்காங்கே ஆர்ப்பாட்டங்களும் அமைதியற்ற நிலைமையும் தோன்றின. அதன் தொடர்ச்சியாக நாட்டின் தலைவரும், அவர் தலைமையிலான அரசாங்கமும் பதவி விலக வேண்டிய நிலைமை உருவானது.

நாட்டின் தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக் கொண்டதையடுத்து குறுகிய காலப்பகுதியில் இலங்கையின் பொருளாதாரம் பெருமளவில் மீண்டெழுந்துள்ளது. அவரது ஆளுமையான தலைமைத்துவம் காரணமாக இலங்கை விரைவில் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டெழ முடியுமென்ற நம்பிக்கையும் தோன்றியுள்ளது.

இவ்வாறான நம்பிக்கை மிகுந்த காலகட்டத்திலேயே சிங்கள- தமிழ்ப் புத்தாண்டை மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் கொண்டாடவிருக்கின்றனர். நாட்டில் பொருளாதார நெருக்கடி வெகுவிரைவில் முற்றாகவே நீங்கி விடுமென்று சித்திரைப் புத்தாண்டு தினத்தில் நாம் ஒவ்வொருவரும் நம்பிக்கை கொள்வோம். அவ்வாறான மனஉறுதியுடன் தமிழ்- சிங்களப் புத்தாண்டை நாம் வரவேற்போம். சகிப்புத் தன்மையும் நம்பிக்கைகளுமே நமது எதிர்கால சுபிட்சத்துக்குக் கைகொடுக்குமென்பதை மறந்து விடலாகாது.

எமது தேசத்தைப் பொறுத்தவரை சித்திரைப் புத்தாண்டென்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பண்டிகையாகும். இலங்கையின் பிரதான பண்டிகையாக இப்புத்தாண்டைக் கொள்ள முடியும். இரு வெவ்வேறு மதங்களைப் பின்பற்றுகின்ற, இரு வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்ற தமிழர்களும் சிங்கள மக்களும் கொண்டாடுகின்ற பொதுப்பண்டிகையாக சித்திரைப் புத்தாண்டு விளங்குகின்றது. அதுவே சித்திரைப் புத்தாண்டுக்கான சிறப்பும் தனித்துவமும் ஆகும்.

இலங்கையில் வாழ்கின்ற சிங்களவர்களும், தமிழர்களும் மதத்தாலும் மொழியாலும் வேறுபட்டவர்களாக இருந்த போதிலும், சமய மற்றும் பாரம்பரிய கலாசார ரீதியாக அவர்களுக்குள் நிறைய ஒற்றுமைகள் உள்ளன. இவ்விரு இன மக்களுக்கிடையே பாரம்பரிய பிணைப்புகளும் காணப்படுகின்றன. இந்து மதத்துக்கும் பௌத்தத்துக்கும் இடையே நெருக்கம் உள்ளது. அவ்விரு மதங்களின் பூர்வீகம் இந்தியா ஆகும். அம்மதங்களால் பின்பற்றப்படுகின்ற வழிபாட்டு முறைகளும், மதக்கோட்பாடுகளும் ஒன்றாகவே இருக்கின்றன.

அதேபோன்று அவ்விரு மொழிகளுக்கிடையேயும் பலவிதமான ஒற்றுமைகள் காணப்படுகின்றன. தமிழர்கள் மற்றும் சிங்கள இனங்களின் பூர்வீகம் இந்தியா என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. எனவேதான் இவ்விரு இனங்களும் மிக நெருங்கிய சமய கலாசார தொடர்புகளைக் கொண்டதாக விளங்குகின்றன. பெளத்த பெருமானை இந்துக்கள் வழிபடுவதும், இந்து தெய்வங்களை பௌத்த மக்கள் வழிபடுவதும் தொன்றுதொட்டு நாம் கண்டு வருகின்ற நடைமுறைகளாகும்.

எமது நாட்டின் பண்டைய மன்னர்களின் ஆட்சிக்காலத்தின் போது தமிழ், சிங்கள மக்களுக்கிடையே சமயரீதியான நல்லிணக்கமும் ஐக்கியமும் நெருக்கமும் நிலவியதாக இலங்கையின் வரலாற்று மூலதாரங்கள் கூறுகின்றன.

கடந்த கால அரசியல் தலைவர்களின் தவறான வழிநடத்தல்களின் விளைவாகவே தமிழ், சிங்கள இனமக்கள் ஐக்கியமின்றி அந்நியப்பட்டுப் போனார்கள். அவ்வினங்களுக்கிடையிலான நிலவி வருகின்ற சந்தேகங்களை, பிளவை நீக்கி, பாரம்பரிய இணைப்பை கட்டியெழுப்புதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். நாட்டின் நிரந்தர ஐக்கியத்துக்கு அதுவே முதல் வழியாகும். எமது சிங்கள மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் இவ்விடயத்தில் இதயசுத்தியுடன் கரிசனை செலுத்தினாலேயே நாட்டில் உண்மையான ஐக்கியம் தோன்றும்.

இன ஒற்றுமைக்கான மனஉறுதிப்பாட்டை இம்முறை தமிழ்- சிங்களப் புத்தாண்டில் இரு இன மக்களும் ஏற்படுத்திக் கொள்வதுடன், நாளை பிறக்கப் போகின்ற சித்திரைப் புத்தாண்டானது எமது தேசத்தில் வாழ்கின்ற அனைத்து இன மக்களுக்கும் வாழ்வில் சுபிட்சம் தர வேண்டுமென பிரார்த்திப்போம்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT