Monday, April 29, 2024
Home » கல்வி, காணி, வீட்டு உரிமைகளை வழங்கி மக்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக ஆக்குவோம்!

கல்வி, காணி, வீட்டு உரிமைகளை வழங்கி மக்களை பொருளாதாரத்தில் பங்குதாரர்களாக ஆக்குவோம்!

by sachintha
April 12, 2024 6:29 am 0 comment

கொழும்பு, கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்கு பதிலாக 294 வீடுகள் கொண்ட ரன்திய உயன வீட்டுத்தொகுதியை மக்களிடம் கையளித்து ஜனாதிபதி உரை

கல்வி, காணி, வீடு, வியாபார உரிமைகளை உறுதிப்படுத்தி, மக்களை பொருளாதாரத்தில் வலுவான பங்குதாரர்களாக மாற்றிக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.

கொழும்பு முகத்துவாரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற ரன்திய உயன வீட்டுத் தொகுதியை பயனாளிகளுக்குக் கையளிக்கும் நிகழ்விலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

இதன்போது 2010 ஆம் ஆண்டில் கஜீமாவத்தையில் தீக்கிரையான வீடுகளுக்குப் பதிலாக 294 வீடுகள் அடங்கிய இந்த வீட்டுத்தொகுதியை ஜனாதிபதி, பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கையளித்தார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டதாவது:

“பத்து வருடங்களுக்கு மேலாக கஜிமாவத்தை மக்கள் நரகத்தில் வசித்துள்ளனர். அந்த வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியவில்லை. அதனால் இந்தக் குடியிருப்புகளை மக்களுக்கு விரைவில் கையளிக்க முடிந்துள்ளதையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம். முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க இது தொடர்பில் அதிக அக்கறை காட்டினார். இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளும் இந்த வீடு உங்களுக்கு மிகவும் மதிப்புள்ள சொத்தாகும். அதனைப் பாதுகாப்பது உங்கள் பொறுப்பு. கடந்த பத்து வருடங்களாக கஷ்டப்பட்ட நீங்கள் இந்த வீடுகளை அடகு வைக்கவோ விற்கவோ கூடாது. இந்த வீடுகளை உங்கள் உயிரைப் போல பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இன்று வரையிலான இரண்டு வருடங்களுக்குள் நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலை எம்மால் உருவாக்க முடிந்துள்ளது. உணவு, எரிவாயு, எரிபொருள் வரிசையில் நின்று அவதிப்பட்ட மக்கள் இன்று சுமுகமாக வாழ்கின்றனர். வரிசை யுகத்தில் கொழும்பு மக்கள் பெரும் அவதிப்பட்டனர்.

பொருளாதாரத்தைப் பலப்படுத்த நாம் அமுல்படுத்திய வரிக்கொள்கை வாழ்க்கைச் சுமையை மேலும் அதிகப்படுத்தியது. ஆனால் அந்தக் கஷ்டங்களை நீங்கள் தாங்கிக் கொண்டதாலேயே கடன் வாங்காமலும், பணம் அச்சடிக்காமலும் அரசாங்கத்தின் வருமானத்தை அதிகரிக்க முடிந்தது. அதனால்தான் இந்த வருடத்தில் அரச ஊழியர்களுக்கு 10,000 ரூபா சம்பள அதிகரிப்பை வழங்க முடிந்தது. ரூபாவின் பெறுமதியும் வலுவடைந்துள்ளது.

அவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நன்றிக் கூறும் வகையிலேயே நிரந்தர காணி உரிமை, நிரந்தர வீட்டுரிமையை வழங்குவதாக கருதுகிறேன். எதிர்காலத்தில் 50,000 வீடுகள் மக்களுக்கு கையளிக்கப்படும். நான் பிரதமராக பதவி வகித்த காலத்தில் சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 1996 வீடுகளை நிர்மாணிக்கும் பணிகளையும் இரண்டு வருடங்களுக்குள் நிறைவு செய்ய எதிர்பார்க்கிறோம்.”

இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்தார்.

சுற்றுலா, காணி, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ உரையாற்றுகையில், “2022 ஆம் ஆண்டை விடவும் இன்று பத்து மடங்கு நிம்மதியாக மூச்சு விடக்கூடிய சூழலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உருவாக்கியுள்ளார். அக்காலத்தில் ​​மூன்று வேளை உணவு கேள்விக்குறியாக காணப்பட்டது. மக்கள் வரிசைகளில் நின்று அவதிப்பட்டனர்.

அப்போதைய ஆட்சியாளர்கள் ஜனாதிபதி பதவியை ஏற்றுகொண்டு மக்களுக்கு சேவையாற்றுமாறு பல முறை கோரியிருந்த போதும், அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய தலைவர்கள் எவரும் பாராளுமன்றத்தில் இருக்கவில்லை. பாராளுமன்றத்தில் தனியொரு ஆசனத்தை மட்டும் பெற்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு தகுந்த பொருளாதார நிலையை உருவாக்கினார். அதன்படி கடந்த 23 மாதங்களில் நாட்டை முன்னைய பொருளாதார நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

இன்று புறக்கோட்டை, மஹரகம, பதுளை அல்லது இலங்கையின் எந்த நகரத்திலும், பெருந்திரளான மக்கள் பண்டிகைக் காலத்தில் பெருமளவில் பொருட்களை கொள்வனவு செய்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் மீண்டுள்ளது என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் சவாலை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்றிருக்காவிடின் இன்று நாட்டின் நிலை என்னவென்பதை சிந்தித்துப் பாருங்கள்.

பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பில் இன்று விவாதத்திற்கு அழைப்பு விடுக்கும் எதிர்க்கட்சிகளிடம், ஏன் அன்று சவாலை ஏற்கவில்லை என்று கேட்க வேண்டும். அந்தக் குழுக்களுக்கு பொருளாதாரக் கோட்பாடு மட்டுமே தெரியும். அவர்களுக்கு நடைமுறை பொருளாதாரம் தெரியாது. அரச ஊழியர்களின் சம்பளத்தை 10,000 ரூபாவினால் அதிகரிக்கவும் ஜனாதிபதி ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களுக்காக பேசும் எந்த கட்சியும் இவ்வளவு சம்பளத்தை அதிகரிக்கவில்லை. இன்று ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளது. நாட்டிற்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க உரையாற்றுகையில், “இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்த நெருக்கடியிலிருந்து நாடு மீண்டு சுமுகமான நிலைக்கு வந்துள்ளது. நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஜனாதிபதி ஏற்படுத்தினார்.

மேலும், மற்றொரு பொருளாதார நெருக்கடி ஏற்படாமல் இருக்கும் வகையிலான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இலங்கையின் பொருளாதாரம் மீது நம்பிக்கை இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் இன்று நம்பிக்கையுடன் நாட்டிற்கு வருகிறார்கள். அத்துடன், இந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதத்தை அதிகரிப்பதற்கான திட்டங்களை ஜனாதிபதி ஏற்கனவே தயாரித்துள்ளார். அதன் மூலம் வருமானத்தைப் பலப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும்.

விவசாயத்தை நவீனமயப்படுத்தி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்து அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை அதிகரிக்கவும், அதிக வருமானத்தை அடைவதற்குமான திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க உரையாற்றுகையில், ”கஜிமாவத்தையில் 2015 ஆம் ஆண்டில் தீக்கிரையான வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைக்கத் தீர்மானிக்கப்பட்ட போதிலும், அப்போதைய நாட்டின் தலைவர் அதற்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் ஒன்பது வருடங்களின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கஜீமாவத்தை மக்களுக்கு நீதி வழங்கியுள்ளார். பதினான்கு ஆண்டுகளுக்குப் பிறகு மக்களுக்கு வீட்டு உரிமை கிடைக்கிறது.

இந்த வீடுகளை நிர்மாணிப்பதற்காக 12,855 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் இந்த வீடுகளை வழங்குவதில் அக்கறை காட்டவில்லை. இந்த அனைத்து வீடுகளினதும் உரிமை பயனாளிகளுக்கு வழங்கப்படுவதால் 4500 மாத வாடகை செலுத்த வேண்டிய அவசியம் இருக்காது. அந்த பணத்தை உங்கள் கல்வி, சுகாதார சேவைகளுக்கு பயன்படுத்துங்கள். கொழும்பில் உள்ள 53,800 மாடிக்குடியிருப்புத் தொகுதி வீடுகள் அடுத்த இரண்டு மாதங்களில் மக்களிடம் கையளிக்கப்படும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது கொள்கைகளை மாற்றியதில்லை. ஆட்சியை இழந்தாலும் தனது கொள்கைகளை கடைப்பிடித்தார். பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பவும் நாட்டை இந்த இடத்திற்கு கொண்டு வரவும் உழைத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இம்முறை கட்சி சார்பற்ற பொது வேட்பாளராக களமிறக்குவோம். அவரை வெற்றிபெறச் செய்ய கொழும்பு மக்கள் பாடுபடுவர் என்று நம்புகிறேன்” என்றார்.

கஜீமாவத்த வீட்டு உரிமையாளர்கள் சார்பில் ஹில்மா முகேஷ் உரையாற்றுகையில், “சுதந்திரமாக சுவாசிக்கக் கூடிய சூழல் இரண்டு வருடங்களின் பின்னர் உருவாகியுள்ளது. தொழிலுக்கு புறப்படும் முன்பாக மண்ணெண்ணெய், பால்மா, சமையல் எரிவாயு வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அப்போது எந்தத் தலைவரும் நாட்டைக் கைப்பற்ற முன்வரவில்லை. ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அந்த சவாலை ஏற்று வரிசை யுகத்தை இல்லாதொழித்தார்.

நாட்டின் பொருளாதாரத்தை மீட்டு, இவ்வாறான வீடுகளை எமக்கு வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். எங்கள் வீடுகள் தீக்கிரையான பின்னர், 200 குடும்பங்கள் 14 ஆண்டுகளாக ஒரு சிறிய கூடாரங்களில் வசித்து வந்தன. அதற்கு தனிமனித சுதந்திரம் கேள்விக்குறியானது. இன்று எமக்கான வீடு கிடைத்துள்ளது. அதேபோல் மாத வாடகை பெறுவதை நிறுத்தியுள்ளமை பெரும் நிவாரணமாகும்” என்று தெரிவித்தார்.

துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, சப்ரகமுவ மாகாண ஆளுநர் சட்டத்தரணி நவீன் திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி, மேல்மாகாண மற்றும் மாநகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் சத்தியானந்த சுபசிங்க, ஜனாதிபதி தொழிற்சங்க அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னபிரிய உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT