Tuesday, April 30, 2024
Home » ஈகைத் திருநாள்

ஈகைத் திருநாள்

by Gayan Abeykoon
April 11, 2024 1:00 am 0 comment

லகெங்கும் வாழ்கின்ற முஸ்லிம்கள் நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றார்கள். ‘ஈத்’ என்னும் அரபுச் சொல்லுக்கு கொண்டாட்டம் அல்லது பெருநாள் என்பது பொருளாகும். ஈகைத் திருநாள் என்பது இஸ்லாமியர்களின் இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும்.

இஸ்லாமிய மக்கள் தங்களது புனித மாதமாகிய ரமழான் முழுவதும் நோன்பு நோற்று இறைவணக்கங்களில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, ஷவ்வால் மாதத்தின் முதல் பிறையில் இப்பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமாக விளங்கும் அல் குர்ஆன் ரமழான் மாதத்தில்தான் இறக்கியருளப்பட ஆரம்பமானது. அதனால் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய கட்டாயக் கடமைகளில் ஒன்றாக ரமழான் நோன்பு விளங்குகிறது.

ஐம்பெரும் கடமைகளுள் ஒன்றான நோன்பை நிறைவேற்றிய பின்னர் கொண்டாடும் ஒரு புனித நாள்தான் ஈதுல் பித்ர் ஈகைத் திருநாள். முகம்மது நபி அவர்கள் மதீனா நகர் வந்தபோது, மதீனாவாசிகள் இரு நாட்களை பெரும் திருவிழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர். அதற்கான காரணங்களை அவர் அந்த மக்களிடம் கேட்டபோது, பண்டைய காலம் தொட்டு விளையாடுவதற்காகவும், பொழுதுபோக்கிற்காகவும் இவ்வாறு கொண்டாடி மகிழ்வது வழக்கம் என்று தெரிவித்தார்கள்.

அப்போது முகம்மது நபி (ஸல்) அவர்கள், ‘அல்லாஹ் அந்த திருவிழாக்களுக்குப் பதிலாக சிறந்த இரு திருநாட்களை வழங்கியுள்ளான். அவை குர்பானி வழங்கும் தியாகத் திருநாள் (ஹஜ் பெருநாள்), மற்றொன்று ஈந்து உவக்கும் ஈகைப் பெருநாள் என்று அறிவித்தார்கள். பசியின் கொடுமையை உணர வேண்டும் என்பதற்காகவும், அகந்தை, ஆணவத்தை ஒடுக்கி சிறந்த மனிதராக உயர வேண்டும் என்பதற்காகவுமே ஒருமாத காலம் பசியோடு நோன்பிருக்கின்றனர் இஸ்லாமியர்கள். இது ஒவ்வொரு இஸ்லாமியரின் தலையாய கடமை என்று திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு மாதம் முழுவதும் உண்ணாமல் பருகாமல் பசித்திருந்து நோன்பு நோற்றவர்களுக்கு இறைவன் அளிக்கும் பரிசாக இந்த நோன்புப் பெருநாள் அமைந்துள்ளது. அது இறைவனைப் பெருமைப்படுத்தும் நாளாகவும் விளங்குகிறது. இஸ்லாமியர்கள் தங்களது நோன்பை ரமழான் மாதத்தின் கடைசி நாளுடன் முடித்துக்கொள்ள வேண்டும் என இறைவனால் வழங்கப்பட்ட திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

‘ஈதல்’ என்பது ஒருவகை இன்பமாகும். அந்த இன்பத்தை உணராதவர், தம்முடைய செல்வத்தை இழந்து நிற்கும் கொடிய நெஞ்சமுடையோராவர். பசி தாகத்துடன் நோன்பு வைத்து பின் பெருநாளுக்கு முன்னர் தான தர்மத்தைக் கொண்டு ஆரம்பிக்க வேண்டும். அன்று எவரும் பசி பட்டினியுடன் இருக்கக்கூடாது. அன்று நோன்பு வைப்பதும் தடுக்கப்பட்டது எனவும் நபி (ஸல்) அவர்கள் அறிவுறுத்தி உள்ளார்கள்.

மனிதநேயம் என்பதற்கு, ஈகைப்பண்பும் இரக்க சிந்தையுமே சிறந்த சான்றுகளாகும். ரமழான் மாதத்தில் நோற்ற நோன்புக்கு ஷவ்வால் முதல்நாள் அன்று விடுமுறை. அன்று நோன்பிருப்பது நபி வழியன்று. மனம் விரும்பிய உணவை இரசித்துச் சாப்பிட்டு, குடும்பத்தார், உற்றார், உறவினருடன் மகிழ்ந்திருத்தல் அன்றைய நிகழ்வாகும்.

ஈகையின் கடமை தாம் விரும்பி உண்ணும் உணவுப் பொருட்களையே பெருநாள் தர்மமாக கொடுக்க வேண்டுமேயன்றி நாம் பிரியப்படாததை, விரும்பாததை அளவுக்கதிகமாக கொடுத்தாலும் வேண்டிய நன்மை கிடைக்காது என்பதை திருக்குர்ஆன் கூறுகிறது.

ஃபித்ரா தர்மத்தை தனது பொறுப்பில் உட்பட்டவர்களான தாய், தந்தை, பாட்டன் பாட்டி, மகன், பேரன் மனைவி ஆகியோருக்கு கொடுக்கவும் முடியாது. இவர் சொந்த பொறுப்பிலிருப்பதால் அவர்களுக்காகவும் நாம் ஃபித்ரா தரவேண்டும். மற்ற உறவினர்களில் ஏழை எளியவர்கள் இருந்தால் அவர்களுக்கு முதலிடமளித்து ஃபித்ரா கொடுக்கவேண்டும். வெளியூர்களில் இருக்கும் ஏழை எளியவர்களுக்கு ஓரிரு நாட்கள் முன்பாகவே அனுப்புவதை இஸ்லாம் அனுமதிக்கிறது.

இவ்வாறு மகத்துவமும் சிறப்பும் மிக்க பெருநாளையே இலங்கை உட்பட உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் தற்போது கொண்டாடுகின்றனர். அதிலும் இலங்கை முஸ்லிம்கள் கடந்த பல வருடங்களுக்குப் பின்னர் இம்முறைதான் இப்பெருநாளை அச்சம் பீதியின்றி கொண்டாடுகின்றனர். கடந்த காலங்களில் கொவிட் 19 பெருந்தொற்று அச்சுறுத்தல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்கள் இப்பெருநாளை சுதந்திரமாகக் கொண்டாட அவர்களுக்கு இடமளிக்கவில்லை.

தற்போது அவ்வாறான எவ்வித அச்சுறுத்தல்களும் சவால்களும் இன்றி சுதந்திரமாக கொண்டாடும் வாய்ப்பை முஸ்லிம்கள் பெற்றுக்கொண்டுள்ளனர். அதனால் இப்பெருநாளை உச்சளவில் கொண்டாடுவதில் அவர்கள் சிரத்தை எடுத்துக் கொண்டுள்ளனர். இதே சூழல் தொடர்ந்தும் நீடித்து நிலைக்க வேண்டும் என்பதை எதிர்பார்த்தவர்களாகவும் அவர்கள் உள்ளனர். அதே எதிர்பார்ப்புதான் அனைத்து மக்கள் மத்தியிலும் காணப்படுகிறது.

ஆகவே தற்போது உருவாக்கப்பட்டுள்ள அச்சம் பீதியற்ற சுதந்திர ஜனநாயக சூழலைப் பேணிப் பாதுகாப்பது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் பொறுப்பு ஆகும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT