Thursday, May 16, 2024
Home » யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிப்பு

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிப்பு

71பேர் உயிரிழப்பு

by Gayan Abeykoon
April 11, 2024 1:08 am 0 comment

யாழ். மாவட்டத்தில் கடந்த வருடம் 776 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அதில் 71 பேர் உயிரிழந்துள்ளதாக வைத்திய கலாநிதி யமுனானந்தா தெரிவித்தார்.   யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக வருபவர்களில் மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், சூலகப் புற்றுநோய், வாய் புற்றுநோய், சுவாசம் தொண்டை பகுதிகளில் ஏற்படும் புற்றுநோய் , உடல் உள் உறுப்புக்களில் ஏற்படும் புற்றுநோய் என பல வகையான புற்றுநோய்கள் இனம் காணப்படுகின்றன. புற்றுநோயை பொறுத்தவரையில் ஆரம்பத்தில் கண்டறிந்து அதற்கான சிகிச்சை முறைகளை ஒழுங்காக மேற்கொள்ளும் போது நோய் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தமது மார்பகங்களை சுய பரிசோதனை செய்வதோடு ஏதேனும் கட்டிகள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் வைத்தியரை நாட வேண்டும்.  40- – 60 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு மார்பகங்களில் ஏற்படும் புற்றுநோயை மார்பகங்களில் ஏற்படும் அசாதாரண நிலையை கண்டறியும் மனோகிராம் சிகிச்சை மூலம் கண்டறியலாம். இச்சிகிச்சை யாழ்.போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படுகிறது. பெண்கள் மாதவிடாய் ஒழுங்கீனம் தொடர்பில் பெண்கள் அவதானமாக இருப்பதோடு கருப்பைக் கட்டி, சூலகப் புற்றுநோய் தொடர்பிலும் அவதானமாக இருக்க வேண்டும். ஆண்களைப் பொறுத்தவரையில் புகைத்தல், வெற்றிலை உண்ணுதல் மற்றும் மதுபானம் அருந்துவதால் வாய் மற்றும் ஈரல் புற்றுநோய் ஏற்படுகிறது. யாழ்.மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் டிசம்பர் வரையான காலப்பகுதியில் குடல் புற்றுநோய் காரணமாக 88 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 07 பேர் உயிரிழந்துள்ளனர். இரைப்பை புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.   ஈரல் புற்றுநோயால் 40 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். சுவாச புற்றுநோயினால் 67 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 08 பேர் உயிரிழந்துள்ளனர். மார்பகபுற்று நோயினால் 83 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 04 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பைப் புற்றுநோயினால் 27 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். கருப்பை கழுத்து புற்றுநோயினால் 48 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 03 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் ஆண்களில் சிறுநீர்ப்பை புற்றுநோயினால் 10 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குருதிப்பட்டி நோயினால் 37 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 

(யாழ்.விசேட நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT