Saturday, April 27, 2024
Home » திருப்பாடுகளின் புனித வெள்ளி இன்று

திருப்பாடுகளின் புனித வெள்ளி இன்று

by Gayan Abeykoon
March 29, 2024 11:55 am 0 comment

 திருப்பாடுகளில் புனித வெள்ளி இன்றாகும்.இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளாவிய கிறிஸ்தவ மக்கள் அனுஷ்டித்தும் கொண்டாடியும் வரும் நிலையில், வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றைய புனித வெள்ளி அமைகின்றது.  

அந்த வகையில் அனைத்து ஆலயங்களிலும் இன்றைய தினம் விசேட வழிபாடுகள் இடம்பெறுவதுடன் திருப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை யாத்திரைகள் மற்றும் தியானங்கள் மேற்கொள்ளப்படும். புனித வெள்ளி ஏனைய அனைத்து வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்பதால், வரலாற்றில் மிகவும் முக்கியமான தினம் என்பதாலேயே பொருத்­த­மா­கவே அதற்கு பெய­ரிட்­டுள்­ளனர்.

எந்த ஒரு மனிதனும் அவன் நல்லவனோ அல்லது கெட்டவனோ மனி­த­னு­டைய மரணமாயிருந்தால் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கின்ற உல­கமே நாம் வாழும் இந்த உலகமாகும். எந்த ஒரு மனிதனுக்கும் தீங்கு நினை­யாமல் அனைவரது வாழ்விலும் நன்மை செய்த இயே­சுவின் மரணம் நிகழ்ந்த தினத்திற்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.

அதில் ஒரு பெரும் அர்த்தம் பொதிந்துள்ளது. புனிதவெள்ளி வழிபாடுகள் இயேசு சுமந்த சிலுவையை நினைவுபடுத்துகின்றன. உலகின் பார்வையில் சிலுவை என்பது மடைமை. எனினும் மீட்பின் பார்வையில் சிலுவை கடவுளின் ஞானம்.

இயேசு சிலுவையிலிருந்து, சிலுவையின் மூலமே உலகை மீட்டார். சிலுவை தோல்வியின் சின்னமல்ல. மகிமையின் அடையாளம். இயேசு சிலுவையில் இறக்கவில்லை. மாறாக உயர்த்தப்பட்டார். துன்பம் வழியே இன்பம், துன்பத்தின் வழியே துன்பத்தை வெல்ல வேண்டும் என்பதுபோல, சாவின் வழியே சாவைவென்று சாகாவரம் பெற்றார் இயேசு. அதனால்தான் புனித பவுல் ‘நானோ நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் சிலுவையை அன்றி வேறு எதைப் பற்றியும் ஒருபோதும் பெருமை பாராட்ட மாட்டேன்’ (கலா 6:14).என்றார். தன் நண்பனுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை (யோவா 15:13). கோதுமை மணி மண்ணில் மடிந்தால் மட்டுமே பலன் உண்டு என்பதை நமக்கு இன்றைய நாள் நினைவூட்டுகிறது (யோவா 12:24)

‘நம் பாவங்களுக்காக அவர் காயப்பட்டார், நம் அக்கிரமங்களுக்காகவே அவர் நொருக்கப்பட்டார்’ (எசா 53:5).

இயேசுவுக்கு இறைவாக்கினர், மெசியா, மீட்பர் என பல்வேறு உருவகங்கள் கொடுக்கப்பட்டாலும் நமது பாவங்களுக்காக துன்புறும் ஊழியன் என்பதே பொருத்தமாக அமைகிறது. அவரது மூன்றாண்டு பொதுப்பணியின் பரிசே சிலுவையானது. தம்மைக் கொடுத்து இறுதியில் தன்னை அழிப்பதே அன்பு என்பதை போதனையிலும் சிலுவையிலும் காண்பித்தார் இயேசு.

‘விண்ணையும், மண்ணையும் இணைக்கும் சிலுவை இறைவனையும் மனிதனையும் இணைக்கும் பாலமானது. பாவத்தை மன்னித்து இறுதியில் சிலுவையில் துன்புற்ற இறையன்பே மானுடத்தின் மீட்பானது’. தந்தையே உமது கரங்களில் என் ஆவியை ஒப்படைக்கிறேன் என்ற வார்த்தைகள் மனிதரின் பாவங்களுக்காக இறைவனுக்குத் தரப்பட்டது.அது கல்வாரி கற்பிக்கும் பாடம்.

பாவத்தின் முடிவு புனிதத்தின் தொடக்கமானது. மரண வேதனையிலும் அறியாது செய்கிறார்கள் மன்னியும் என மன்றாடியது. அதுவே இயேசுவின் அன்பு.

திருமதி எனீடா யோகராணி…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT