Saturday, April 27, 2024
Home » IPL 2024 RR vs DC: முதல் வெற்றியை பெறுமா டெல்லி?

IPL 2024 RR vs DC: முதல் வெற்றியை பெறுமா டெல்லி?

by Prashahini
March 28, 2024 12:17 pm 0 comment

IPL T20 கிரிக்கெட் தொடரில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் இன்று (28) இரவு 7.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ரோயல்ஸ் – டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.

ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. 453 நாட்களுக்குப் பிறகு கிரிக்கெட் களத்துக்கு திரும்பியிருந்த ரிஷப்பந்த் 13 பந்துகளை சந்தித்து 18 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து ஏமாற்றம் அளித்தார். எனினும் இன்றைய ஆட்டத்தில் அவரிடம் இருந்து உயர்மட்ட செயல்திறன் வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் தொடக்க துடுப்பாட்ட வீரர்களான டேவிட் வார்னர், மிட்செல் மார்ஷ் ஜோடி தொடக்கத்தில் சிறப்பாக ஓட்டங்கள் சேர்த்த போதிலும் அதை பெரிய அளவிலான ஸ்கோராக மாற்றத் தவறினர். இதனால் ரிஷப்பந்த் மீது அதிக அழுத்தம் உருவானது. இறுதிக்கட்ட ஓவர்களில் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் களமிறங்கிய இஷான் போரெல் 10 பந்துகளில் 32 ஓட்டங்கள் விளாசியதன் காரணமாகவே டெல்லி அணியால் 174 ஓட்டங்கள் வரை சேர்க்க முடிந்தது.

இது ஒருபுறம் இருக்க இஷான் போரெலை துடுப்பாட்டத்தில் பயன்படுத்தியதால் இம்பாக்ட் பிளேயர் விதியின் கீழ் டெல்லி அணியால் கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. மேலும் இஷாந்த் சர்மாவின் காயமும் கூடுதல் நெருக்கடியை உருவாக்கியது. இதன் விளைவாக பந்து வீச்சில் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை சந்தித்தது. பந்து வீச்சை பலப்படுத்தும் விதமாக இன்றைய ஆட்டத்தில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தியிருந்தது. லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய போதிலும் அதை பெரிய அளவிலான ஓட்ட குவிப்பாக மாற்றத் தவறினார். அதேவேளையில் சஞ்சு சாம்சன் பொறுப்புடன் விளையாடி 82 ஓட்டங்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு செய்தார்.

அவருக்கு உறுதுணையாக செயல்பட்ட ரியான் பராக்கும் 43 ஓட்டங்களை விளாசி கவனம் ஈர்த்தார். இவர்களிடம் இருந்து மேலும் ஒருசிறந்த செயல்திறன் வெளிப்படக்கூடும். ஜாஸ் பட்லர், ஷிம்ரன் ஹெட்மயர் ஆகியோரும் மட்டையை சுழற்றினால் அணியின் பலம் அதிகரிக்கக்கூடும்.

பந்து வீச்சை பொறுத்தவரையில் டிரெண்ட் போல்ட், நந்த்ரே பர்கர்,அவேஷ் கான், சந்தீப் சர்மா நம்பிக்கை அளிக்கக்கூடியவர்களாக திகழ்கின்றனர். ஜெய்ப்பூர் ஆடுகளம் வறண்டு காணப்படுவதால் யுவேந்திர சாஹல், ரவிச்சந்திரன் அஸ்வின் சுழல் கூட்டணி டெல்லி துடுப்பாட்டக்காரர்களுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT