Saturday, April 27, 2024
Home » என்னை உத்வேகம் அடையச் செய்த இந்தியா!

என்னை உத்வேகம் அடையச் செய்த இந்தியா!

by Rizwan Segu Mohideen
March 28, 2024 12:34 pm 0 comment

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ் தற்போது பல பில்லியன் டொலர் சொத்து மதிப்புள்ள உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் இருந்து வருகிறார்.

தற்போது,  சமூக சேவையில்  கவனம் செலுத்தி வரும் பிஸ் கேட்ஸ்  “பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை” யின் மூலம் உலகளவில் தனது பங்களிப்பை செய்து வருகிறார்.  பில் கேட்ஸ் தனது இணையதள வலைப்பதிவான “கேட்ஸ் நோட்ஸ்” மூலம் தனது எண்ணங்களையும் கருத்துக்களையும் தீவிரமாக பகிர்ந்து வருகிறார்.

பில் கேட்ஸ் அண்மையில் இந்தியாவுக்கான  விஜயத்தை மேற்கொண்டிருந்தார். தனது இந்திய பயணம் தொடர்பாக “நான் இந்தியாவில் உத்வேகம் அடைந்தேன்” என்ற தலைப்பில் தனது வலைப்பக்கத்தில் ஒரு பதிவை எழுதியுள்ளார்.

உலகை மாற்றக் கூடிய இந்தியாவின்  சிந்தனைகள், அறிவியல்  கண்டுபிடிப்புகள் தொடர்பாக அறிந்து கொள்வதே  தனது பயணத்தில் இலக்காக இருந்தது என்றும்,  அதற்கான சந்தர்ப்பம் தனக்குக் கிடைத்தது என்றும் கூறியுள்ள பில் கேட்ஸ்,  அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், விஞ்ஞானிகள், பரோபகாரர்கள், தங்கள் சமூகத்தை வறுமையிலிருந்து மீட்டெடுக்க பாடுபடும் பெண்கள் என்று பல தரப்பினரையும் தான் அங்கு சந்தித்ததாகக் கூறியுள்ளார்.

தனது பயணத்தின் போது, இந்தியப் பிரதமர் மோடி மற்றும் அவரது அமைச்சரவை பிரதிநிதிகள் சிலருடன் கலந்துரையாடும் சந்தர்ப்பம் கிடைத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

டிஜிட்டல் தொழில்நுட்பம், பெண்களின் மேம்பாடு, விவசாயம், சுகாதாரம் மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் இந்தியாவின் இலக்குகளை வெற்றி கொள்ள  கேட்ஸ் அறக்கட்டளை எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து ஒரு சிறந்த உரையாடல் அங்கு இடம்பெற்றதாகவும் பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபாத்தில் பல ஆண்டுகளாக தனக்குத் அறிமுகமான இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனியை சந்தித்ததாக குறிப்பிட்டுள்ள  கேட்ஸ், டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு (Digital Public Infrastructure) துறையின் நிபுணர்களை சந்தித்ததையும் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.

பொது உள்கட்டமைப்பில் டிஜிட்டல் முறையை பயன்படுத்தும் (Digital Public Infrastructure -DPI) என்பது   விவசாயிகளுக்கான ஆலோசனைகள், கல்வி மற்றும் அனைத்து வகையான சேவைகளிலும் “டிஜிட்டல்” தொழில்நுட்பத்தை சாத்தியமாக்கியிருக்கிறது என்று குறிப்பிட்டுள்ள அவர், டிஜிட்டல்  தொழில் நுட்பத்தை பொது உள்கட்டமைப்பில் பயன்படுத்துவதில் இந்தியா அடைந்து வரும்  முன்னேற்றம் மற்ற நாடுகளுக்கு  ஒரு முன்மாதிரியாகும்  என்றும் கூறியுள்ளார்.

ஒடிசா மாநிலத்தில் குறைந்த வருமானம் கொண்ட மக்களுக்கு மின்சாரம், நடைபாதைகள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் போன்றவற்றை வழங்கும் அரசாங்கத் திட்டங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், பொறியியல் மற்றும் பிற துறைகளில் பயிற்சி பெற்ற  உள்ளூர் பெண்களிடம் கலந்துரையாடியதாகவும்,  அந்த பெண்கள் எதிர்கொண்ட சவால்களைப் பற்றிய அவர்களின் எழுச்சியூட்டும், பிரமிக்க வைக்கும்  கதைகளை தான் மிகவும் விரும்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தான் புவனேஸ்வரில் உள்ள ஒரு விவசாய கண்காணிப்பு மையத்தை சுற்றிப்பார்த்தபோது, பொது உள்கட்டமைப்பில் டிஜிட்டல் பயன்பாடு இந்தியாவின் விவசாயத்துறையில் பெரு மாற்றங்களை உருவாக்கியிருப்பதை அவதானித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

விவசாயத்திற்கு கிடைத்துள்ள இந்த அரிய நவீன தொழில் நுட்ப வசதியின் காரணமாக, அரச விவசாய வல்லுநர்களுக்கும்  6.5 மில்லியன் விவசாயிகளுக்கும் நேரடி தொடர்புகள் உருவாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தின்  மூலம் விவசாயிகள் ஆலோசனைகள் மற்றும் நிகழ்நேர அறிவிப்புகளை உடனுக்குடன் பெறுவதாகவும் குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ், இந்த மையம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து, உள்ளூர் விவசாயிகள் பூச்சிகளால் பயிர்களை இழக்கும் விகிதம் 90 ஆக குறைந்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவில் ஒடிசா  மாநிலம்  குறிப்பிடத்தக்க திருப்பத்தை எட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ள கேட்ஸ், அந்த மாநிலத்தின்  பொருளாதாரம் வளர்ந்து வருவதுடன், வறுமை வீழ்ச்சியடைந்து வருவதாகவும், விவசாயம், சுகாதாரம் போன்ற துறைகளில்  ஒடிசா  சாதனைகள் படைத்து வருவதாகவும் கூறியுள்ளார்.

பில் கேட்ஸின் “பில் லிண்டா கேட்ஸ் அறக்கட்டளை”  இந்தியாவில் விவசாயம் தொடர்பான பல பணிகளுக்கு உதவிக்கரம் நீட்டுகிறது என்று  குறிப்பிட்டுள்ள கேட்ஸ், புது டில்லியில்,  கால்நடைகள் மற்றும் பயிர்கள் குறித்த நிபுணர்களுடனான  ஒரு கற்றல் அமர்வில் கலந்து கொண்டதாகவும் பதிவிட்டுள்ளார்.

இந்த கற்றல் அமர்வின்  மூலம் எருமை வளர்ப்பு, செயற்கை கருவூட்டல், தொடர்பான சமீபத்திய கண்டுபிடிப்புகள் பற்றி அறிந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியாவின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியுடன் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சனையை எடுத்துரைக்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டதாக குறிப்பிட்டுள்ள அவர், இந்தியாவின் ஊட்டச்சத்து முறைகள் குறித்த புதிய புத்தக வெளியீடு ஒன்றில் கலந்து கொண்டதாகவும், நாடு முழுவதும் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கான அமைச்சின் செயற்பாடுகளுக்கு கேட்ஸ் அறக்கட்டளை எவ்வாறு ஆதரவு வழங்க முடியும் என்பது பற்றி தான் ஒரு சிறந்த கலந்துரையாடலை அமைச்சருடன் நடாத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கல்லூரி மாணவர்களுடன் பேசுவது தனக்கு மிகவும் பிடித்தமான செயல் என்று கூறியுள்ள கேட்ஸ், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் புது தில்லி வளாகத்திற்கு சென்றதாகவும், அங்கு உலகின் மிகப்பெரிய சவால்களைத் தீர்க்க உதவும் யோசனைகள் மற்றும் நம்பிக்கைகளுடன் மாணவர்களும் ஆசிரியர்களும் நிறைந்து இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

குஜராத்தில் உள்ள ஒற்றுமை சிலைக்கு பிரதமர் மோடியின் ஆலோசனையின் பேரில் சென்றது குறிப்பிடத்தக்க அனுபவமாக இருந்ததாக பில் கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்காற்றிய சர்தார் படேலுக்கு இந்தச் சிலை அஞ்சலி செலுத்தும் வகையில் அமைந்துள்ளது. 597 அடி உயரத்தில், உலகின் மிக உயரமான சிலை என்ற பெயரைப் பெற்றுள்ளது. இருப்பினும், உள்ளூர் மக்களுக்குப் பயனளிக்கும் நோக்கில், சிலையைச் சுற்றி சுற்றுலா சார்ந்த பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிதான் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒவ்வொரு நாளும் 60,000 இற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அதிசயிக்கத்தக்க எண்ணிக்கையில் இங்கு வருகை தருகின்றனர், இது இந்த சுற்றுலா சார்ந்த அணுகுமுறையின் வெற்றியைப் பிரதிபலிக்கிறது” என்றும் கேட்ஸ் கூறியுள்ளார்.

இந்தியாவின் துடிப்பான கண்டுபிடிப்புகள் அந்நாட்டின் அனைத்து சேவைகளிலும் முன்னேற்றங்களை உருவாக்கி வருகிறது என்பதைப் பற்றிய ஆழமான புரிதலுடன் தான் வீடு திரும்பியதாக குறிப்பிட்டுள்ள பில் கேட்ஸ். இந்திய நாட்டிலிருந்து கிடைக்கும் அறிவியல் ரீதியலான கருத்துக்களில் இருந்து உலகம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

– ஆதி

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT