Monday, May 6, 2024
Home » விண்வெளித்துறையில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு இந்தியா அனுமதி

விண்வெளித்துறையில் 100% வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு இந்தியா அனுமதி

by Rizwan Segu Mohideen
April 24, 2024 6:02 pm 0 comment

இந்தியாவின் விண்வெளித் துறையை மேம்படுத்தவென வெளிநாட்டு முதலீட்டாளர்களைக் கவரும் வகையில் நூறு சதவீத வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ஆலோசகர் வைஷாலி பாசு சர்மா தெரிவித்துள்ளார்.

அதற்கு ஏற்ப வெளிநாட்டு நேரடி முதலீடுகள் தொடர்பான இந்தியாவின் கொள்கை விதிமுறைகளில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதோடு கடந்த வாரம் வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், செய்மதி தயாரிப்பு மற்றும் செயற்கைக்கோள் ஏவுதல் தளபாடங்கள் தயாரிப்பு துறைகளில் வெளிநாட்டு நிறுவனங்களும் தனியார் கம்பனிகளும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்வதற்கு ஊக்கமளிக்கப்படுகின்றன. அதற்கு ஏற்ப கொள்கை விதிமுறைகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செய்மதித் தகவல் தொடர்பு சேவைக்கு இந்திய உள்துறை அமைச்சு கொள்கை ரீதியான ஆரம்ப ஒப்புதலை ஏற்கனவே அளித்துள்ளது.

உலகில் 70 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு செய்மதி ஊடாக இணைய தள சேவை வழங்கும் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ செய்மதிக்கு சொந்தமான ஸ்டார் லிங்க் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவுக்கு இணைய சேவை வழங்குவது குறித்து அக்னிகுல காஸ்மோஸ், பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேஸ், ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ், துருவா ஸ்பேஸ், பிக்ஸெல், சாட்ஸூர் மற்றும் திகந்தாரா போன்ற விண்வெளி தொழில்நுட்ப நிறுவனங்கள் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்துள்ளன’ என்றுள்ளார்.

இதேவேளை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைவர் எலன் மஸ்க் சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்யத்திட்டமிருந்த போதிலும் அவரது பணிகள் காரணமாக பயணம் இவ்வருட இறுதி வரை ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT