Saturday, April 27, 2024
Home » வெற்றிகரமான கல்வி முறை இல்லாது அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது

வெற்றிகரமான கல்வி முறை இல்லாது அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது

by mahesh
March 27, 2024 10:20 am 0 comment

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாதென, ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கல்விச் சீர்திருத்தங்களை முன்னெடுத்தாலும், அதற்கேற்ப மனித வளங்களை முகாமைத்துவம் செய்யாவிட்டால், கல்விச் சீர்திருத்தங்கள் பலனளிக்காதெனவும் சாகல ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.

மாத்தறை, கொடபொல, இலுக்பிடிய கனிஷ்ட பாடசாலை மாணவர்களுக்காக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் (25) கலந்துகொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு றோயல் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் 1981 குழுவின் முழுமையான நிதி உதவியுடனும் 12ஆவது இராணுவப் பொறியியலாளர் சேவைப் படைப்பிரிவின் பங்களிப்புடனும் இப்புதிய கட்டடம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக்குச் சென்ற சாகல ரத்நாயக்கவுக்கு மாணவர்களால் அமோக வரவேற்பளிக்கப்பட்டது.மாணவர்களின் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் பல கலைநிகழ்ச்சிகளும் மேடையேற்றப்பட்டன.

வைபவத்தில் மேலும் உரையாற்றிய சாகல ரத்நாயக்க;

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது. கல்வித் திட்டங்களை யார் வேண்டுமானாலும் உருவாக்கலாம். ஆனால், அத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு மனித வளத்தை நிர்வகிக்க வேண்டும். கடந்த காலங்களில், நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்து, எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு வரிசைகள் ஏற்பட்டன. அந்த நிலையில் நாட்டின் தலைமைப் பொறுப்பை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்கும் வேலைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார். சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி பொருளாதார நிலைமையை குறிப்பிடத்தக்க நிலைக்குக் கொண்டு வரப்பாடுபட்டார்.

இதற்கு அப்பாலும் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு புதிய வேலைத் திட்டம் அவசியம். இதற்காக ஜனாதிபதி தற்போது பல சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றார். இலங்கை மத்திய வங்கி சுயாதீனமான நிறுவனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய வங்கி நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். மேலும், ஒவ்வொரு நிறுவனமும் நாட்டுக்கும் மக்களுக்கும் பொறுப்புக் கூற வேண்டும். அதற்குத் தேவையான சட்டங்கள் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளன. அவ்வாறு செயற்படாத நிறுவனங்களின் தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT