Saturday, April 27, 2024
Home » ராஜிவ் காந்தி கொலை வழக்கு: இலங்கை தமிழர்கள் மூவருக்கும் கடவுச்சீட்டு

ராஜிவ் காந்தி கொலை வழக்கு: இலங்கை தமிழர்கள் மூவருக்கும் கடவுச்சீட்டு

- ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்ப முடிவு

by Prashahini
March 27, 2024 10:18 am 0 comment

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் மூவருக்கும் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த மூவருக்கும் இலங்கை துணை தூதரகத்தினால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி இந்திய மத்திய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசாங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அதற்கமைய, இந்திய மத்திய அரசாங்கத்தின் அனுமதி கிடைத்தவுடன், முருகன், ஜெயக்குமார் மற்றும் ராபர்ட் பயாஸ் ஆகிய மூவரும் ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் என தமிழக அரசாங்கம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

திருச்சி முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு நேற்று (26) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே தமிழக அரசாங்கம் நீதிமன்றத்தில் இந்த விடயங்களை முன்வைத்துள்ளது.

தனது மகளுடன் வசிப்பதற்காக பிரித்தானியாவிற்கு செல்வதற்காக விசா பெற வேண்டியுள்ளதாகவும் அதற்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயத் தேவையாக காணப்படுவதாகவும் முருகன் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும், அடையாள அட்டையை வழங்குமாறு மறுவாழ்வு இயக்குநரிடம் கடந்த ஜனவரி மாதம் விண்ணப்பித்த போதிலும், இதுவரை பதில் வழங்கப்படவில்லை எனவும் இதனால் தனக்கு அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அவர் தனது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த நிலையில் தமிழக அரசாங்கம் முன்வைத்துள்ள விடயங்களைக் கருத்திற்கொண்ட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், இலங்கை தூதரகத்தினால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதனிடையே, இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த சாந்தன் என்றழைக்கப்படும் டி.சுதேந்திரராஜா, நோய்வாய்ப்பட்டமையினால் கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி உயிரிழந்திருந்தார்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT