Thursday, May 9, 2024
Home » இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் 21.9% ஆல் குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் மின் கட்டணம் 21.9% ஆல் குறைப்பு

- 30 இலும் குறைவான அலகுக்கு 33% குறைப்பு

by Rizwan Segu Mohideen
March 4, 2024 6:36 pm 0 comment

இன்று நள்ளிரவு (05) முதல் அமுலுக்கு வரும் வகையில் மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி மின்சாரக் கட்டணமானது மொத்தமாக 21.9% ஆக குறைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் மஞ்சுள பெனாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த மின்சார கட்டணத் திருத்தத்தில் இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகள் மற்றும் செலவுத் தரவுகள், 2009 ஆம் ஆண்டின் 20 ஆம் இலக்க இலங்கை மின்சாரச் சட்டத்தின் 30 ஆம் பிரிவின் விதிகள் மற்றும் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் சட்ட ஏற்பாடுகளின் அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பாய்வு செய்யப்பட்ட பின்னர் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபை கடந்த ஜனவரி மாதம் 3.34% வீதத்தால் கட்டணத்தை குறைக்க அனுமதி கோரியிருந்தது. பின்னர் பெப்ரவரி 22 ஆம் திகதி முன்வைக்கப்பட்ட திருத்தப்பட்ட முன்மொழிவில் 14% வீதத்தால் கட்டணத்தை குறைக்க முன்மொழிந்தது.

இலங்கை மின்சார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட செலவுத் தரவுகள் மற்றும் பொதுமக்கள் ஆலோசனையின்போது முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மீளாய்வு செய்ததைக் கருத்தில் கொண்டு, மின்சார கட்டணங்களை 21.9% வீதத்தால் குறைக்க ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் இந்த கட்டண திருத்தத்தின்படி அனைத்து மின்சார பாவனையாளர் பிரிவினருக்கும் அதிகபட்ச நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வீட்டு மின்சார பாவனை பிரிவில் 30 அலகுகளுக்கு குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களுக்கு 33% மின்சார கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

31 – 60 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார பாவனையாளர்களுக்கு 28% கட்டண குறைப்பு வழங்கப்பட்டுள்ளது. 61 – 90 அலகுகளுக்கு இடைப்பட்ட மின்சார பாவனையாளர்களுக்கு 30% கட்டண குறைக்கப்பு வழங்கப்பட்டுள்ளது. 90 – 180 அலகுகள் மின்சார பாவனையாளர்களுக்கு 24% இனாலும், 180 அலகுகளுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு 18% இனாலும் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

வழிபாட்டுத் தலங்களுக்கான கட்டணத்தை 33% இனால் குறைக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

பொது நோக்கத்திற்கான மின்சார பாவனையாளர் பிரிவினர்க்கு 23% கட்டணம் குறைக்கப்படும். பொது அரச நிறுவனங்களுக்கு 22% கட்டணம் குறைக்கப்படும். ஹோட்டல் மற்றும் தொழில் துறைகளுக்கான கட்டணங்கள் 18% குறைக்கப்பட்டுள்ளன. வீதி விளக்குகளுக்கான மின்சார கட்டணம் 20% குறைக்கப்படும்.

புதிய கட்டண முறையின்படி, 30 அலகுகளுக்கு குறைவான மின்சார பாவனையாளர்களின் மின்சார மாதாந்த நிலையான கட்டணம் 180 ரூபாவில் இருந்து 150 ரூபாவாக குறைக்கப்படும். அவர்கள் செலுத்தும் ஒரு அலகுக்கான விலை ரூ. 12 இலிருந்து ரூ. 8 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 31 – 60 அலகு வரை மின்சார பாவனையாளர்களின் மாதாந்த நிலையான கட்டணம் ரூ. 360 இலிருந்து ரூ. 300 ஆகவும், ஒரு அலகிற்கான கட்டணம் ரூ. 30 இலிருந்து 20 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டு மின்சார பாவனை வகைகளுக்கான மாதாந்த நிலையான கட்டணம் மற்றும் ஒரு அலகுக்கான கட்டணம் குறைக்கப்பட்ட முறை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

வீட்டு மின்சார பாவனையாளர்கள் பிரிவு தற்போதைய அங்கீகரிக்கப்பட்ட அலகொன்றின்  விலை புதிய அலகொன்றின் விலை தற்போதைய  மாதாந்த நிலுவை கட்டணம் அங்கீகரிக்கப்பட்ட புதிய மாதாந்த நிலுவை கட்டணம்
0-30 12 10 180 150
31-60 30 20 360 300
60 அலகுகளுக்கு மேல்
60 முதல் அலகுகளுக்கு 38 25
60 அலகுகளுக்கு மேல் 90 அலகுகளுக்கு குறைவான 41 30 480 400
90 அலகுகளுக்கு மேல் 120 அலகுகளுக்கு குறைவான 59 50 1,180 1,000
120 அலகுகளுக்கு மேல் 180 அலகுகளுக்கு குறைவான 59 50 1,770 1,500
180 அலகுகளுக்கு மேல் 89 75 2,360 2,000

கூரை மேல் சூரிய மின்கல உற்பத்தி நிலையங்கள் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிலையங்களின் உரிமையாளர்களுக்கான கொடுப்பனவு மற்றும் நிலுவைத் தொகையை இம்மாதம் 31 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

2030 ஆம் ஆண்டு புதுப்பிக்கத்தக்க மின்சார உற்பத்தியை இலக்காகக் கொண்ட திட்டங்களைத் தயாரித்து ஜூன் 30 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு இலங்கை மின்சார சபைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நிபந்தனைகளை விதித்துள்ளது.

இந்த கட்டண முறையை அமுல்படுத்துவதுடன் மேற்படி நிபந்தனைகள் உட்பட 13 நிபந்தனைகளை இலங்கை மின்சார சபை அமுல்படுத்த வேண்டும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பெரு நிறுவன தொடர்பாடல் பிரிவின் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத்தை 0772943193 எனும் இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு, இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT