என்றோ எங்கோ படித்த புதுக்கவிதை இது!
”இன்றுகூட எல்லாரும் அரிச்சந்திரன்களாகஇருக்க முடியும். இறுதியில் இறைவன் வந்து அருள் புரிவதாய் இருந்தால்!”
ஆபிரகாமின் விசுவாசம் அப்படி ஒரு நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதா? இறுதியில் இறைவன் தன் மகனைப் பலிகொடுக்க விடமாட்டார் என்ற எதிர்பார்ப்பா ஒரேப் மலையை நோக்கி அரை நடக்க வைத்தது?
இருட்டிலே நடந்தார் – எது நேர்ந்தாலும் சரி.இறை விருப்பப்படி எல்லாம் நடக்கட்டும் என்ற மனத் தெளிவோடு! நீதிமானை வாழ வைக்கும் விசுவாச உறுதியோடு!
அவர் கண்முன்னே நம்பிக்கை ஒளி!
விசுவாசத்தால் மலைகளை அசைக்கலாம், பெயர்க்கலாம், அகற்றலாம், மலைபோல துன்பங்களையும் சோதனைகளையும் கடுகளவு நம்பிக்கை காணாமல் செய்து விடும்.
ஆபிரகாமைப் பொருத்தவரை கண்ணால் காண முடியாததையெல்லாம் காண வைக்கும் கண் விசுவாசம், காதால் கேட்க முடியாததையெல்லாம் கேட்கச் செய்யும் காது விசுவாசம்.
கரத்தால் தொட்டு உணர முடியாததையெல்லாம் தீண்ட வைக்கும் கரம் விசுவாசம். இயலாது, நடக்க முடியாது என்று எண்ணுவதையெல்லாம் சாத்தியமாக்கும் ஆற்றல் விசுவாசம்.
பறவைகளால் பறக்க முடிகிறது. நம்மால் முடிவதில்லை. ஏன் தெரியுமா? பறவைகளுக்கு நிறைய விசுவாசம் உண்டு. விசுவாசம் என்பது இறக்கையாகும். விசுவாசமுள்ள மனிதனுக்கு விடிவதெல்லாம் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கைகளில்! அவன் விழித்து எழுவதெல்லாம் புத்துணர்வு கலந்த எதிர்பார்ப்புக்களில்!
வானத்து விண்மீன்கள் போல உன் இனம் பலுகும் பெருகும் என்பது வாக்குறுதி. ஆனால் இருக்கும் ஒரே மகனையும் எனக்குப் பலிகொடு என்பது எதார்த்தம். இது எப்படி?
கடவுள் என்ன நரபலி கேட்கும் பயங்கரப் பேர் வழியா? ஆபிரகாம் வாழ்ந்த காலத்தில் பல சமயங்களிலும் தங்கள் தெய்வங்களுக்கு நரபலி கொடுக்கும் வழக்கம் இருந்திருக்க வேண்டும்.
அதனால்தான் இறைவன் ஆபிரகாமின் நம்பிக்கையைச் சோதிக்க அவர் மகனைப் பலியிட வேண்டும் என்று கேட்ட போது அது அவருக்குப் பெரும் சோதனையாகத் தோன்றியதே தவிர பெரிய தவறாகத் தோன்றவில்லை.
முடிவில் கதையின் கருவும் நிறைவும் முற்றிலும் வேறுபட்டவை. அதன் உச்சம் ஈசாக் பலியாகவில்லை என்பது தானே! நெஞ்சுருக்கும் அந்த நிகழ்வின் நோக்கம் என்ன?
ஆபிரகாம் எவ்வளவு உண்மையும் நம்பிக்கையும் உள்ளவர், எவ்வளவு பிரமாணிக்கமானவர் என்பதை அறிந்து கொள்ள அல்ல; (முக்காலமும் உணரும் கடவுளுக்கு அது முன்கூட்டியே தெரியும்) மாறாகக் கடவுள் எவ்வளவு பிரமாணிக்கம் உள்ளவர்.வார்த்தை தவறாதவர் என்பதை ஆபிரகாமுக்கு உணர்த்தவே இந்தச் சோதனை. ஒவ்வொரு சோதனையிலும் சோதிக்கப்படுவது மனிதன் மட்டுமல்ல, கடவுளும் தான்!
ஈசாக்கை எரிபலியாக்கும் நிகழ்வு தந்தையான கடவுளின் பேரன்பின் பிரதிபலிப்பு. இறைமகன் இயேசு சிலுவையில் பலியான மீட்பு வரலாற்று நிகழ்ச்சிக்கு ஒரு முன்னோட்டம்.
அதனால்தான் “தம் சொந்த மகனென்றும் பாராது அவரை நம் அனைவருக்காகவும் ஒப்புவித்த கடவுள்” (உரோமை 8:32) ஆபிரகாமின் பலியை மறுபரிசீலனை செய்தார். மாற்றுப் பலிப்பொருளுக்கு ஏற்பாடு செய்தார். ஆனால் தன்மகன் இயேசு கல்வாரியில் பலியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
அதற்கு மாற்றுப் பலிப்பொருள் பற்றி சிந்திக்க விரும்பவில்லை. சாவிலும் கூடத் தன் உடன்படிக்கையை முறிக்காத அன்பு இது. இப்படிப்பட்ட அன்பு எப்படி சாக முடியும்? அதனால்தான் அது உயிர்த்தெழுந்தது. அன்பே நிரந்தரம் என்பதற்குச் சாட்சியாக நம் நடுவே அது உயிர் வாழ்கிறது.
அருட் பணி லூர்துராஜ்…