Saturday, April 27, 2024
Home » பொருளாதார முன்னேற்றத்துக்கு இனஒற்றுமையே அத்திவாரம்

பொருளாதார முன்னேற்றத்துக்கு இனஒற்றுமையே அத்திவாரம்

by damith
February 26, 2024 6:00 am 0 comment

இலங்கை நாலாபுறமும் கடலால் சூழப்பட்ட இயற்கைகள் வளங்கள் நிறைந்த ​தேசமாகும். நாடொன்று முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்குத் தேவையான அனைத்து வளங்களும் இங்கு காணப்படவே செய்கின்றன.

இருந்த போதிலும் இந்நாடு இன்னும் மூன்றாம் மண்டல நாடாகவும் வளர்முக நாடாகவுமே அடையாளப்படுத்தப்படுகிறது. அத்தோடு கடந்த 2022 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் கடும் பொருளாதார நெருக்கடிக்கும் உள்ளானது. அதன் விளைவாக மக்கள் பல்வேறு விதமான அசௌகரியங்களுக்கும் பாதிப்புக்களுக்கும் முகம்கொடுத்தார்கள்.

பொருளாதார ரீதியில் முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்குத் தேவையான வளங்களை தன்னகத்தே கொண்டிருந்தும் கூடஇன்னும் மூன்றாம் மண்டல நாடாகவும் வளர்முக நாடாகவும் இலங்கை இருப்பதற்கான காரணம் யாது? என்ற கேள்வி பலர் மத்தியில் காணப்படவே செய்கின்றது.

பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்ளும் போது ஆசியாவில் ஜப்பானுக்கு அடுத்த நாடாக பொருளாதார ரீதியில் இலங்கை காணப்பட்டது. ஆனால் சுதந்திரம் பெற்று ஏழு தசாப்தங்களுக்கும் மேலாகிவிட்ட போதிலும் கூட நாடு இன்னும் பொருளாதார ரீதியில் பலமான நிலையை அடைந்து கொள்ளவில்லை.

இந்நாடு சுதந்திரம் பெற்ற போது இலங்கையை விடவும் பின்தங்கிய நிலையில் இருந்த பல நாடுகள் இந்நாட்டை விடவும் பல மடங்கு முன்னேற்றமடைந்து விட்டன. ஆனால் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவுக்கு உள்ளான நாடாகவே உள்ளது.

பல்லின மக்கள் வாழுகின்ற நாடாக விளங்குகின்ற போதிலும் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டுத்தான் சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டது இலங்கை.

ஆனால் சுதந்திரத்திற்குப் பின் வந்த ஓரிரு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தோரும், ஒரிரு ஆட்சியாளர்களும் தங்கள் அரசியல் நலன்களுக்காக பல்லின மக்கள் வாழும் நாடொன்றில் முன்னெடுக்கப்படக் கூடாத தவறானதும் பிழையானதுமான வேலைத்திட்டங்களை மேற்கொண்டனர். அவ்வேலைத்திட்டங்களின் விளைவுகள் மற்றும் பாரதூரம் குறித்து அவர்கள் கவனம் செலுத்தத் தவறினர். அதன் காரணத்தினால் பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு சுதந்திரத்தைப் பெற்றெடுத்த மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை பார்வை தோற்றம் பெற்றது. அத்தோடு சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற நோக்கும் மேலோங்கியது.

இதன் விளைவாக சிறுபான்மை மக்கள் மத்தியில் சந்தேகங்களும் மேலோங்கலாயின. அவை ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகள் போன்று ஒற்றுமையாக வாழும் மக்கள் மத்தியில் பிரிவினைகளுக்கு வழியேற்பட்டது. அதற்கு ஓரிரு அரசியல் கட்சிகளும் துணை போயின.

அவ்வாறான அரசியல் கட்சிகளும் ஓரிரு அரசியல் தலைவர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்கு முன்னுரிமை அளித்து செயற்படத் தவறியதன் விளைவாகவே நாடு இவ்வாறான நிலைக்கு உள்ளானது. அதுவே நடுநிலை அரசியல் அவதானிகளின் கருத்தாகும்.

நாட்டுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக ஒன்றுபட்டுச் செயற்பட்டது போன்று அதற்கு பின்னரான காலப்பகுதியிலும் அனைவரும் ஒற்றுமையாகச் செயற்பட்டிருக்க வேண்டும். துரதிர்ஷ்டவசமாக அதற்குத் தவறிவிட்டனர். அதன் விளைவாக இந்நாடு இன்னும் பின்தங்கிய நாடாக உள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, ‘நாங்கள் சிங்களம், தமிழ், முஸ்லிம் எனப் பிரிந்த எல்லா சந்தர்ப்பங்களிலும் எமது நாடு பாதாளத்துக்குள் விழுந்துள்ளது. எங்களை மதத்தால் பிரித்தார்கள். இனத்தால் பிரித்தார்கள். அந்த சந்தர்ப்பங்களில் நாங்கள் விழுந்தோம். அதனால் இன, மத பேதங்களை ஒதுக்கி விட்டு நாங்கள் ஒன்றுபட்டு இலங்கையை வெற்றி கொள்வோம்’ என்றுள்ளார்.

அதுதான் உண்மை. இன, மத ரீதியிலான பார்வையும் நோக்கும் மேலோங்குவதால்தான் இந்நாடு பின்னடைவுக்கு உள்ளாகி வருகிறது. இதற்கு சுநத்திரத்திற்கு பின்னரான காலப்பகுதி நல்ல எடுத்துக்காட்டாகும்.

இலங்கையைப் போன்று பல்லின மக்கள் வாழும் பல நாடுகள் உறுதியான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளாக முன்னேற்றமடைந்துள்ளன. பேதங்களுக்கு அப்பாலான ஒற்றுமையே அந்நாடுகளின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக விளங்குகின்றன. அவ்வாறான நிலைமை இலங்கைக்கும் அவசியமானது.

ஆகவே கடந்தகால அனுபவங்கள் மற்றும் பல்லின மக்கள் வாழும் நாடுகளின் முன்னேற்றத்தின் பின்புலம் என்பவற்றில் கவனம் செலுத்தி இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றுபட்டு செயற்படுவதே இன்றைய தேவையாகும். அதுவே பலமான பொருளாதார நாடாக இத்தேசத்தைக் கட்டியெழுப்ப வழிவகுக்கும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT