Friday, May 10, 2024
Home » முந்நூறு ஆண்டுகள் சரித்திரப்புகழ் வாய்ந்த கல்முனை தரவைச் சித்தி விநாயகர் திருவிழா

முந்நூறு ஆண்டுகள் சரித்திரப்புகழ் வாய்ந்த கல்முனை தரவைச் சித்தி விநாயகர் திருவிழா

by Gayan Abeykoon
February 15, 2024 9:06 am 0 comment

வரலாற்று சிறப்புமிக்க கல்முனை மாநகர் அருள்மிகு தரவைச் சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழா, எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறும் தீர்த்தோற்சவத்துடன் நிறைவு பெறும்.

திருவிழாவினை ஒட்டி தினமும் சிறப்பு பூஜைகளும் விசேட நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 12 நாட்களும் பிற்பகல் 4 மணியிலிருந்து இரவு 9 மணி வரை – காலை ஞான பூஜை, யாக பூஜை, நித்திய பூஜை,தம்ப பூஜை, வசந்த மண்டப பூஜை தினமும் நடைபெறுவதோடு, சுவாமி உள்வீதி, வெளிவீதியில் வலம் வருதல் நடைபெறும்.

இந்த மகோற்சவம் பிரதம குருவான சிவஸ்ரீ பத்ம நிலோஜ ஈசான சிவம் அவர்களால் நடத்தி வைக்கப்படும். ஆலயத்தின் பிரதம குருவான விஷ்வ பிரம்ம ஸ்ரீ சு.கரிகரன் ஐயாவும் பூஜைகளுக்கு தலைமை தாங்கி வழி நடத்துவார். உதவி குருமார்களாக பிரேம ஸ்ரீ விவேக் ஐயா, சுரேஷ் ஐயா, ஜெயராஜ் ஐயா ஆகியோரும் செயல்படுவார்கள்.

தினமும் மாலை 6:00 மணி முதல் 6:30 வரை கூட்டுப் பிரார்த்தனை இடம்பெறும். கல்முனை -3 பண்ணிசை மன்றத்தினர் இதனை நடத்துவார்கள்.

இதேவேளை, இரவு ஆறு முப்பது முதல் ஏழு மணி வரை நற்சிந்தனை நடைபெறும். தீர்த்தோற்சவம் 24 ஆம் தேதி நிறைவு பெற்றதும் அடியார்களின் உதவியுடன் அன்னதானம் வழங்கப்படும்.

இந்த திருவிழாவின் சிறப்பான நிகழ்வாக எதிர்பார்க்கப்படும், யானைகள் முன்னே அணிவகுத்து செல்ல,முத்து சப்புரத்தில் விநாயகப் பெருமான் பவனி வரும் வீதி உலா எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறும் என ஆலய நிர்வாக சபையின் தலைவர் கிருஷ்ணபிள்ளை நாகராசா தெரிவித்தார்.

கல்முனை ஸ்ரீ தரவைச்சித்தி விநாயகர் ஆலயத்தின் வரலாறு சுமார் 300 ஆண்டுகள் மிகத்தொன்மை வாய்ந்ததாகும். கல்முனை மாநகரில் புதுப்பொலிவுடன் கம்பீரமாய் காட்சியளிக்கும் ஸ்ரீ தரவை சித்தி விநாயகர் ஆலயம் இங்குள்ள தமிழ் மக்களின் இருப்பை, பழமையை பறைசாற்றும் ஆலயமாக இருந்து வருகின்றது.

ஓர் இனத்தின் இருப்பை அதன் மொழி, கலை.கலாசார, பாரம்பரிய பண்பாட்டு அடையாளங்களே எடுத்துக்காட்டுகின்றன. அதில் முக்கியமான இடமாக வழிபாட்டுத்தலங்கள் காணப்படுகின்றன. இவ்வழிபாட்டுத்தலங்களை வைத்துத்தான் எம் முன்னோர்கள் பற்றியும் அவர்கள் வாழ்வியல் பற்றியும் அறிந்து கொள்ள முடிகின்றது.

கல்முனைவாழ் தமிழ் மக்களின் இருப்பையும், சரித்திரத்தையும் பறைசாற்றி நகரின் பிரதான வீதியில் கம்பீரமாய் தோற்றமளிக்கும் ஸ்ரீ தரவை சித்திவிநாயகர் ஆலயத்தின் தோற்றம், வளர்ச்சி நம்மை பிரமிக்க வைக்கிறது.

300 வருடங்கள் பழைமைவாய்ந்த ஆலயம் இதுவென காசிநாதன் என்பவர் தனது ஏடுகளில் குறிப்பிட்டிருந்தார். இப்பிரதேசத்தில் வாழ்ந்துவந்த இந்துக்களின் வழிபாட்டிற்காக முதன்முதல் தோன்றிய வணக்க ஸ்தலமாகையால் அயல் கிராமங்களில் வசித்து வந்த மக்கள் தினமும் கால்நடையாகவும் மாட்டு வண்டில்கள் மூலமாகவும் வந்துவணங்கிச் செல்வார்கள். தரவைப்பிள்ளையார் மீது நம்பிக்கைகொண்டு அருள் பெற்ற மக்கள் கோயில் ஒன்று கட்டவேண்டும் என்ற அவா ஏற்பட்டமையால் வைரமான மரங்களைக்கொண்டு அன்று கோயில் அமைத்தார்கள்.

இவ்வாலயம் பல இயற்கை அழிவுகளிற்கு உள்ளாகியது. குறிப்பாக 1907 இல் சூறாவளி, 1915இல் பெருஞ்சூறாவளி, 1957இல் பெருவெள்ளம், மற்றும் 1978இல் பெருஞ்சூறாவளி போன்ற இயற்கை அனர்த்தங்களில் கோயிலுக்கும் அதுசார்ந்த கட்டிடங்களுக்கும் சேதம் ஏற்படவில்லை.

1986 காலப்பகுதியில் இனக்கலவரத்தின் போது 1986.12.13 அன்று ஆலயம் தரைமட்டமாகியது.

ஆனால் ஊர் மக்களின் ஒத்துழைப்போடு இந்த ஆலயம் கட்டப்பட்டு இப்போது மிகவும் கம்பீரமாக காட்சியளிக்கிறது. ஆண்டுதோறும் வருகின்ற பெப்ரவரி மாதத்தில் இந்த ஆலயத்தின் மகோற்சவம் நடைபெற்று வருகின்றது.

செ.துஜியந்தன்  

(பாண்டிருப்பு தினகரன் நிருபர்)   

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT