Tuesday, April 30, 2024
Home » காத்தான்குடியில் கலை இலக்கிய விழா; கலைஞர்கள் ஆறு பேர் கௌரவிப்பு

காத்தான்குடியில் கலை இலக்கிய விழா; கலைஞர்கள் ஆறு பேர் கௌரவிப்பு

by Gayan Abeykoon
February 15, 2024 7:21 am 0 comment

காத்தான்குடியில் இடம்பெற்ற பிரதேச கலை இலக்கிய விழாவில் கலைஞர்கள் ஆறுபேர் கௌரவிக்கப்பட்டதுடன், ‘ஸம் ஸம்’ சிறப்பு மலரும் வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளது.

கலாசார அலுவல்கள் திணைக்களம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், காத்தான்குடி பிரதேச செயலக கலாசார அதிகார சபை மற்றும் கலாசாரப் பேரவை என்பன இணைந்து நடத்திய பிரதேச கலாசார விழாவும் ‘ஸம் ஸம்’ சிறப்பு மலர் வெளியீட்டு நிகழ்வும், காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ. உதயஸ்ரீதர் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றன.

முஸ்லிம்களின் பாரம்பரிய கலை நிகழ்வுகளுடன் அதிதிகள், கௌரவம் பெறும் கலைஞர்கள் வரவேற்று அழைத்துச் செல்லப்பட்டு மேடை நிகழ்வாக அரங்கேறிய இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.

மேலும் இந்நிகழ்வில் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பபணிப்பாளர் எஸ். நவநீதன் உள்ளிட்ட சிறப்பு அதிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் பிரதான அம்சங்களுள் ஒன்றான ‘ஸம் ஸம்’ நினைவுமலரின் முதல் பிரதி பிரதேச செயலாளரினால் அரசாங்க அதிபருக்கு வழங்கி வைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் நினைவு மலரை அதிதிகளுக்கும், கலைஞர்களுக்கும் வழங்கி வெளியிட்டு வைத்தார்.

மேலும் இந்நிகழ்வில் மொழிபெயர்ப்புத் துறைக்கு ஏ.பீ.எம். அப்ராரி, பன்முக ஆளுமைக்கு எம்.எல். அஹமது லெப்பை, கவிதைத் துறைக்கு மௌலவி எம்.எச்.எம். இக்பால் பலாஹி, கிராமியக் கலைக்கு ஆசிரியை. ஏம்.எச்.எஸ். பெளசியா, அறிவிப்புத் துறைக்கு ஏ.ஆர்.எம். அஸ்ஹர், இசைத் துறைக்கு கே.எம். அபுல் ஹஸன்ஆகிய ஆறு கலைஞர்கள் ‘கலைச்சுடர்’ பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது கலைஞர்களாலும், பாடசாலை மாணவர்களாலும் கவிதை, பாடல், நாடகம், வில்லுப்பாட்டு என பல கலை நிகழ்வுகள் நடத்தப்பட்டு பார்வையாளர்களுக்கு கலைவிருந்தளிக்கப்பட்டது.

மேலும் கலாசார அதிகார சபையினால் பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட கையெழுத்துச் சஞ்சிகைப் போட்டியில் வெற்றி பெற்ற பாடசாலை மற்றும் மணவர்களுக்கான சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..

 

எம். எஸ். எம். நூர்தீன்  

(புதிய காத்தான்குடி தினகரன் நிருபர்)    

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT