இலங்கை கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளானது. அந்நிய செலாவணி பற்றாக்குறையின் விளைவாக தோற்றம் பெற்ற இந்நெருக்கடியினால் மக்கள் பலவித அசௌகரியங்களுக்கும் பாதிப்புகளுக்கும் உள்ளாகினர். இது வரலாற்றில் அழியாத்தடம் பதித்த நெருக்கடியாக விளங்குகிறது. அந்நெருக்கடி நிலவிய காலத்தில் மக்கள் முகம்கொடுத்த அனுபவங்களை ஒருபோதும் மறக்க முடியாது.
இப்பொருளாதார நெருக்கடியின் ஊடாக நாடே வங்குரோத்து நிலையை அடைந்தது. இந்நாட்டுக்கு உதவ வெளிநாடுகளோ சர்வதேச நிதி நிறுவனங்களோ முன்வரத் தயக்கம் காட்டிய நிலை உருவானது.
இவ்வாறான சூழலில் கடந்த வருடத்தின் ஜுலை மாதப் பிற்பகுதியில் நாட்டின் தலைமையை ஏற்ற ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொருளாதார ரீதியில் நாட்டை மீளக் கட்டியெழுப்புவதற்கான வேலைத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் ஆரம்பித்தார்.
அவ்வேலைத்திட்டங்கள் குறுகிய காலப்பகுதி முதல் பயனளிக்கத் தொடங்கின. அதன் ஊடாகப் பொருளாதார நெருக்கடி காலத்தில் நாடும் மக்களும் முகம்கொடுத்த அசௌகரியங்களும் தாக்கங்களும் கட்டம் கட்டமாக நீங்கலாயின.
இப்பின்னணியில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரித்ததோடு பணவீக்கமும் ஒற்றை இலக்கத்திற்கு வீழ்ச்சி அடைந்தது. அத்தோடு பங்களாதேசம் நாட்டிடம் பெறப்பட்டிருந்த கடனும் மீளச் செலுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீட்சி பெற்று நம்பிக்கை தரும் வகையில் மறுமலர்ச்சிப் பாதையில் பிரவேசித்திருக்கிறது. இந்தச் சூழலில் சர்வதேச நாணய நிதியம், ‘இம்மாத நடுப்பகுதியில் இலங்கை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்சி பெற்றுவிடும்’ என்றுள்ளது.
உலகப் பொருளாதார வீழ்ச்சியின் பின்னணியில் வங்குரோத்து நிலையை அடைந்த நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கையினால் விரைவாக மீண்டு வர முடிந்துள்ளதாக உலக நிதி நிறுவனங்கள் கூட குறிப்பிட்டுள்ளன. இந்த அறிவிப்புக்கள் நம்பிக்கை தரக்கூடிய வகையில் அமைந்துள்ளன. அவற்றை இந்நாட்டின் பொருளாதார நிபுணர்களும் வரவேற்றுள்ளனர்.
இவ்வாறான சூழலில், பிட்டகோட்டையிலுள்ள சோலிஸ் ஹோட்டலில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற அரசாங்க மதிப்பீட்டு திணைக்களத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ‘கடந்த சில வருடங்களில் ஒரு தேசம் என்ற வகையில் நாம் எதிர்கொண்ட கசப்பான அனுபவத்தை எதிர்கால சந்ததியினர் வரை கொண்டு செல்ல முடியாது. கடந்த வருடத்தின் ஆரம்பப்பகுதியில் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடியின் விளைவான வங்குரோத்து நிலையில் இருந்து 18 மாதங்களில் நாடு மீட்சி பெற்றுள்ளது. இதன் நிமித்தம் உழைத்த அரச நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் ஊழியர் சமூகம் பாராட்டுக்குரியவர்கள். நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமையை சரியான முறையில் நிர்வகிக்காவிட்டால் மீண்டும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுக்க நேரிடும். அதனால் அனைத்துத் துறைகளையும் நவீனமயப்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதைக்கு இட்டுச் செல்லும் புதிய பொருளாதார வேலைத்திட்டம் எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதி ஆரம்பிக்கப்படும்’ என்று அறிவித்துள்ளார்.
நாட்டை பொருளாதார ரீதியில் கட்டியெழுப்ப வேண்டும். அதற்கான தேவை பரவலாக உணரப்பட்டுள்ளது. பழைய பொருளாதார முறைகளை அமுல்படுத்தினால், அடுத்த 10 ஆண்டுகளுக்குள் மீண்டும் நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதை தவிர்க்க முடியாது. அவ்வாறான ஒரு நிலை இந்நாட்டில் மீண்டும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதுதான் அனைத்து பிரஜைகளினதும் எதிர்பார்ப்பாக உள்ளது.
அதனால் நாட்டை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்த புதிய பொருளாதார முறையின் ஊடாக முன்னேறுவது அவசியம். அதன் ஊடாகவே நாடும் மக்களும் வளமானதும் சுபிட்சமானதுமான வாழ்வைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருக்கும்.
இந்த நிலையில்தான் புதிய பொருளாதார வேலைத்திட்டத்தை ஜனவரி முதல் ஆரம்பிக்கவிருக்கிறார் ஜனாதிபதி. அந்த வேலைத்திட்டங்கள் நிச்சயம் நாட்டில் பொருளாதார மறுமலர்ச்சிக்கு வித்திடும். அதனால் கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே ஜனாதிபதியின் இலக்காகும். அதற்கே அவர் முன்னுரிமை அளித்துள்ளார். நாட்டு மக்கள் வளமான பொருளாதார வாழ்வைப் பெற்றுக் கொள்வதற்கு நிலைபெறான பொருளாதார அபிவிருத்தி இன்றியமையாததாகும்.
ஆகவே கட்சி அரசியல் பேதங்களுக்கு அப்பால் பொருளாதார முன்னேற்றத்திற்காக சகலரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். அதுவே இப்போது முன்னுரிமை அளிக்கப்பட வேண்டிய பணியாகும்.