Tuesday, April 30, 2024
Home » ஒப்பந்ததாரருக்கு ஒக்டோபர் 31 வரை வழங்கப்பட்ட தொகை ரூ.16,730 கோடி
ஒரு இலட்சம் கி.மீ. வீதி அபிவிருத்தித் திட்டம்

ஒப்பந்ததாரருக்கு ஒக்டோபர் 31 வரை வழங்கப்பட்ட தொகை ரூ.16,730 கோடி

by mahesh
November 22, 2023 6:00 am 0 comment

பொருளாதாரப் பிரச்சினைகளால் அபிவிருத்தித் திட்டங்கள்
மீள ஆரம்பிக்கும் போது முன்னுரிமை வீதிகளை அடையாளம்
காணும் வேலைத்திட்டமும் மாவட்ட மட்டத்தில் முன்னெடுப்பு

2023 ஒக்டோபர் 31ஆம் திகதிக்குள் 1,00,000 கிலோ மீற்றர் வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 167.3 பில்லியன் ரூபா ஒப்பந்ததாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (21) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ்,13,160 வீதிகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.இவை,17,847 கிலோமீற்றர் நீளம் கொண்டவையாகும்.மேலும், இத்திட்டத்தின் மூலம், 9,298 கிலோமீற்றர் நீளமான 5,201 வீதிகள் ஏற்கனவே அபிவிருத்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட, வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1,00,000 கிலோமீற்றர் வீதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் பூர்த்தி செய்யப்படாத வீதிகளின் தூரம் 11,549 கிலோமீற்றர்கள் எனவும், இத்திட்டத்தின் கீழ் வீதி அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு 05 பில்லியன் ரூபாவை செலுத்த வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். பொருளாதாரப் பிரச்சினைகளால் நிறுத்தப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள், மீள ஆரம்பிக்கப்படும் போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டிய வீதிகளை அடையாளம் காணும் வேலைத்திட்டம் மாவட்ட மட்டத்தில் நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொலன்னறுவை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாவட்டத்தின் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தொடர்பு கொண்டு மாகாணத்திலுள்ள முன்னுரிமை வீதிகள் தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்ள கூட்டங்கள் நடத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

பொறியியலாளர்கள், சிரேஷ்ட அதிகாரிகள், நிறுவனங்களின் தலைவர்கள், அரச நிர்வாக அதிகாரிகள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளனர். சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து இரண்டாவது கடனுதவி பெறப்பட்டதன் பின்னர் இந்த அபிவிருத்தி திட்டங்களை மீண்டும் நடைமுறைப்படுத்த முடியும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை அபிவிருத்தி செய்யும் கருத்திட்டத்தின் கீழ், 10,848 கிலோ மீற்றர் வீதிகளின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் போக்குவரத்து ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT