Friday, May 10, 2024
Home » இஸ்ரேல் – காசா போர்; பாதுகாப்புச் சபை மீண்டும் தோல்வி

இஸ்ரேல் – காசா போர்; பாதுகாப்புச் சபை மீண்டும் தோல்வி

by Rizwan Segu Mohideen
October 27, 2023 10:41 am 0 comment

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஷ்யா மற்றும் சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தியதோடு ரஷ்யாவின் தீர்மானத்திற்கு போதிய ஆதரவு கிடைக்காத நிலையில் இஸ்ரேல்–காசா போர் தொடர்பில் நடவடிக்கை எடுக்க பாதுகாப்புச் சபை மீண்டும் தவறியுள்ளது.

கடந்த புதன்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில் இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தில் முற்றுகையில் உள்ள காசா பகுதியில் மனிதாபிமான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததோடு சர்வதேச சட்டத்தின் வரையறைக்கு உட்பட்டு அனைத்து நாடுகளுக்கும் தற்பாதுகாப்புக்கு உரிமை உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு பத்து நாடுகள் ஆதரவு அளித்ததோடு ரஷ்யா மற்றும் சீனா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தின. அண்மையில் இஸ்ரேலுடன் இராஜதந்திர உறவை ஏற்படுத்திய ஐக்கிய அரபு இராச்சியமும் இதற்கு எதிராக வாக்களித்தது. பிரேசில் மற்றும் மொசம்பிக் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.

“பொதுமக்களை பாதுகாப்பதற்கு அன்றி பிராந்தியத்தில் அமெரிக்காவின் அரசியல் நிலைப்பாட்டை பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட வெறுமனே அரசியல் ஆவணமாக இது உள்ளது என்பது தெளிவாகிறது” என்று அமெரிக்காவின் தீர்மானம் குறித்து ரஷ்ய பிரதிநிதி வெசிலி நெபன்சியா தெரிவித்தார்.

அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம் முழுமையான போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் ரஷ்யா கொண்டுவந்த தீர்மானத்தில் “விரைவான, நீடித்த மற்றும் முழுமையாக மதிக்கக் கூடிய மனிதாபிமான போர் நிறுத்தம்” ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. பொதுமக்களுக்கு எதிரான அனைத்து வன்முறை மற்றும் தாக்குதல்களையும் கண்டிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதற்கு ரஷ்யாவுடன் சீனா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் கபோன் நாடுகள் மாத்திரமே ஆதரவு அளித்தன. அமெரிக்காவுன் பிரிட்டனும் வீட்டோவை பயன்படுத்திய நிலையில் அமெரிக்காவின் கூட்டணி நாடுகளான பிரான்ஸ் மற்றும் ஜப்பான் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT